கார் ஓட்டிகள் நிறைய பேர் பயன்படுத்தாமல் ஒதுக்கும் 5 கார் வசதிகள் - நம் இந்தியாவுக்கு இவை சரிப்பட்டு வராதவை!!
கார்கள் இன்றைய காலத்தில் பயணத்தை வெகுவாக சவுகரியமானதாக மாற்றி உள்ளன. இதற்கு அவற்றில் வழங்கப்படும் மாடர்ன் அம்சங்கள் முக்கியமான காரணமாகும். இதற்காகவே ஒவ்வொரு கார் தயாரிப்பு நிறுவனமும் தங்களுக்கு என்றே பிரத்யேகமான ஆராய்ச்சி மையங்களை கொண்டுள்ளன. கார்களுக்கான புதிய புதிய தொழிற்நுட்பங்களை கண்டுப்பிடிப்பதுதான் இந்த மையங்களின் முக்கிய பணியாக உள்ளது.
அதேநேரம் சில தொழிற்நுட்ப வசதிகள் வெளிநாடுகளில் வெற்றி பெற்றதன் காரணமாக கொண்டுவரப்படுகின்றன. இத்தகைய வசதிகள் இந்திய சந்தைக்கு ஏற்றதாக இருக்குமா என ஒருமுறைக்கு பலமுறை சோதிக்கப்பட்டாலும், அவற்றுள் சில வசதிகள் நம் இந்தியாவில் தோல்வி அடைகின்றன. அல்லது வாடிக்கையாளர்களால் பரவலாக உபயோகப்படுத்தப்படுவது இல்லை. அவ்வாறான 5 கார் தொழிற்நுட்ப அம்சங்களை பற்றி தான் இந்த செய்தியில் பார்க்க போகின்றோம்.

வாய்ஸ் கண்ட்ரோல்
சந்தையில் நீண்ட வருடங்களாக கார்களில் வழங்கப்படும் வசதிகளுள் ஒன்று. ஆனால் இதனை உபயோகப்படுத்தும் கார் ஓட்டிகள் என்று பார்த்தால், மிகவும் குறைவே ஆகும். காரில் சில செயல்பாடுகளை ஓட்டுனர் தனது குரலின் மூலமாகவே கட்டுப்படுத்துவதற்கு ஏதுவாகவே இந்த வசதி கொண்டுவரப்பட்டது. ஆனால் இதனை பெரும்பாலான கார் ஓட்டிகளால் சரிவர உபயோகப்படுத்த முடிவதில்லை.
நாம் என்ன சொல்கிறோம் என்பதை இந்த தொழிற்நுட்பத்திடம் எந்தவொரு இடையூறும் இன்றி தெளிவாக சொல்ல வேண்டி உள்ளது. ஆனால் சாலையில் எவ்வாறான இரைச்சல்கள் ஏற்படுகின்றன என்பதை நான் கூற வேண்டியது இருக்காது என நினைக்கிறேன். சரி... காரின் ஜன்னல் கண்ணாடிகளை மூடி கொண்டு கட்டளைகள் வழங்கலாம் என பார்த்தால், மற்ற பயணிகள் குறுக்கீடு செய்யும் பட்சத்தில் இந்த தொழிற்நுட்பம் முறையாக செயல்படுவதில்லை.

சைகை கண்ட்ரோல்
மேலே பார்த்த வாய்ஸ் கண்ட்ரோலை போலவே சைகை கண்ட்ரோலையும் பெரும்பாலானோர் உபயோகப்படுத்துவது இல்லை. ஆஃப் செய்தே வைக்கின்றனர். இதற்கு முக்கிய காரணம், பயணிகளின் விரல் அசைவுகளின் மூலம் செயல்படும் சைகை கண்ட்ரோல் ஆனது பயணிகளின் மற்ற கை விரல்களையும் அடையாளம் கண்டு, வழிமுறைகளை தவறாக எடுத்து கொள்கின்றன.
ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப்கள்
ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப்கள் நம் நாட்டிற்கு வேண்டுமாயின் மாடர்ன் தொழிற்நுட்ப அம்சமாக இருக்கலாம். ஆனால் இந்த வசதி வெளிநாடுகளில் கடந்த 20 வருடங்களாக கார்களில் வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் இந்த தாமதத்திற்கும், பெரும்பாலான கார் ஓட்டிகள் இந்த வசதியை பயன்படுத்தாதற்கும் காரணம் ஒன்றே.

அதாவது, காரின் உள்ளே முன் விண்ட்ஷீல்டிற்கு பின்னால் பொருத்தப்படும் சென்சார்களின் உதவியுடன் ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப்கள் செயல்படுகின்றன. காரின் வெளிப்புறத்தில் நிலவும் காலநிலையை பொறுத்தே இந்த வசதி செயல்படும். ஆனால் நம் இந்தியாவில் அடிக்கடி காலநிலை மாறுவது என்பது அரிதாகவே நடைபெறக்கூடிய விஷயமாக உள்ளது. ஆதலால் வெளிநாடுகளுக்கே இவை பொருத்தமானவைகளாக உள்ளன.
ப்ரீ லோடட் மேப்ஸ் (Preloaded Maps)
பயணத்திற்கு தேவையான வரைப்படத்தை கார் தயாரிப்பு நிறுவனங்களே ப்ரீ லோடட் மேப்ஸ் ஆக டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தில் வழங்குகின்றன. ஆனால் பெரும்பாலான கார் ஓட்டுனர்கள் கூகுள் மேப் -ஐயே பயன்படுத்த விரும்புகின்றனர். இதற்கேற்ப தற்போதைய கார்களின் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டங்கள் ஆண்ட்ராய்டு ஆட்டோ & ஆப்பிள் கார்ப்ளேவை ஏற்கக்கூடியவைகளாக வழங்கப்படுகின்றன.

ஹீட்டட் ஸ்டேரிங் சக்கரம்
இத்தகைய ஸ்டேரிங் சக்கரம் ஆனது வெப்பமான காற்றை வெளியேற்றி ஓட்டுனரின் கைகள் குளிர் காற்றில் நடுங்குவதை தவிர்க்கும். இத்தகைய ஸ்டேரிங் சக்கரம் தற்போதைக்கு இந்தியாவில் சற்று விலைமிக்க கார்களில் இருந்தே வழங்கப்படுகின்றன. இருப்பினும் அத்தகைய கார்களை வைத்திருப்போரும் இந்த வசதியை பயன்படுத்துவதாக தெரியவில்லை. ஏனெனில் நம் நாட்டில் மைனஸ் ஜீரோ டிகிரி குளிரில் வசிப்போர் மிகவும் குறைவே ஆகும்.


Click it and Unblock the Notifications









