கார் காணாமல் போனா கூட பிரச்சனை இல்லை, ஆனால் சாவியை தொலைச்சிடாதீங்க!! பிரச்சனை இவ்வளவு இருக்கு!
காரின் சாவி காணவில்லை என்பது அவ்வளவு முக்கியமான விஷயமா? சமீபத்தில் கூட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது காரின் சாவியை காணவில்லை என சென்னை தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து இருந்தார். காரின் சாவி தொலைந்து போனால் எந்தெந்த வழிகளில் பிரச்சனைகள் வரும் என்பதை பற்றி இனி இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.
காரை ஸ்டார்ட் செய்வதற்கு முக்கிய பாகம் என்றாலும், அளவில் சிறியதாக இருப்பதால் தொலைந்து போனாலும் எளிதாக மீண்டும் ஒன்றை தயார் செய்துவிடலாமே... இதில் என்ன பிரச்சனை உள்ளது? என நீங்கள் கேட்பது புரிகிறது. இதில் பிரச்சனை இல்லையென்றால், அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டாரின் மகள் வீட்டில் அத்தனை லக்சரி கார்கள் இருந்த போதிலும், ஒரு காரின் சாவி தொலைவிட்டது என போலீஸ் நிலையத்தில் வந்து நிற்பாரா?

சாதாரண ஒரு பட்ஜெட் விலை காரின் சாவி தொலைந்தாலே அதனை மீண்டும் பெற நீங்கள் காரை வாங்கிய டீலர்ஷிப்பிற்கு சிலமுறை செல்ல வேண்டியிருக்கும். அப்படியென்றால், சௌந்தர்யா ரஜினிகாந்த் போன்றோர் வாங்கும் சொகுசு கார்களில் எவ்வளவு காலம் ஆகும் என நினைத்து பாருங்கள். ஒருசில பிராண்ட்களின் சொகுசு காரின் சாவி தொலைந்து போனால், அதற்கு பதிலாக ஒரு சாவியை காரை தயாரித்த நிறுவனத்திடம் இருந்து பெறுவதற்கு மாதக்கணக்கில் கூட ஆகலாம்.
மேலும், புதிய சாவியை இவ்வாறான முறையில் அதிகாரப்பூர்வமாக பெற அதிக செலவு செய்ய வேண்டியிருக்கும். இவை எல்லாவற்றையும் விட முக்கியம், தொலைந்த சாவியினால் பின்னர் காலத்தில் பாதுகாப்பு பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால், கார் தொலைந்து கூட போகலாம். தற்கால மாடர்ன் கார்களுடன் வழங்கப்படும் ஸ்மார்ட் சாவியானது குறைந்தப்பட்சம் 100 அடி தூரத்தில் இருந்துக்கூட செயல்படக்கூடியது.

தொலைந்த சாவி வேறு யாருடைய கையில் ஆவது கிடைத்தால், அவர்களால் காருடன் காருக்கு உள்ளே இருக்கும் பொருட்களையும் திருட முடியும். இதில் பிரச்சனை என்னவென்றால், இது ஸ்மார்ட்போன் லாக் போன்றது கிடையாது. ஸ்மார்ட்போனில் வேறு யாரோ அன்லாக் செய்துள்ளனர் என தெரிந்தால், லாக் பேட்டர்னை மாற்றி அவர்கள் மீண்டும் உங்களது போனை பயன்படுத்துவதை தடுக்க முடியும்.
ஆனால் காரில் அவ்வாறு எல்லாம் செய்ய வேண்டுமென்றால், நீங்கள் காரை தயாரித்த நிறுவனத்தையோ (அ) விற்ற டீலர்ஷிப்பையோ தான் தொடர்பு கொள்ள வேண்டும். ஆனால் இதற்கு மாதக்கணக்கில் ஆகும் என்றுதான் முன்னரே கூறிவிட்டோமே. சாவியை திருடிய நபர் காருக்குள் உங்களுக்கே தெரியாமல் கேமிராவையோ அல்லது ஜிபிஎஸ் டிராக்கரையோ பொருத்தி இருந்தால், நீங்கள் செல்லும் இடங்களை எல்லாம் திருடனால் தெரிந்து கொள்ள முடியும்.

அல்லது நீங்கள் கேமிரா (அ) ஜிபிஎஸ் டிராக்கரை பொருத்தி இருந்தால், அதனை ஒரிஜினல் சாவியை வைத்துள்ளவரால் எளிதாக டீ-ஆக்டிவேட் செய்ய முடியும். மேலும், இவ்வாறு திருடப்படும் வாகனங்கள் தான் குற்ற செயல்களில் பரவலாக பயன்படுத்தப்படுவதாக போலீஸார் தெரிவிக்கின்றனர். இவற்றை விட முக்கியமாக, காரின் அனைத்து சாவிகளையும் ஒப்படைக்காமல் உங்களால் இன்ஸ்சூரன்ஸை க்ளைம் செய்ய முடியாது.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: மேற்கூறப்பட்ட காரணங்களினால், சாவி தொலைந்த நொடியில் இருந்தே உங்களுக்கும், உங்களது காருக்கும் பாதுகாப்பற்ற சூழல் ஏற்றுப்பட்டு விடுகிறது. புதிய சாவியை பெறுவதற்கு முன்பாக, காரின் சாவி தொலைந்துவிட்டது என்பதை சட்டப்பூர்வமாக பதிவு செய்யும் விதமாக போலீஸில் புகார் அளித்துவிடுவது நல்லது. ஆகவே, காரின் சாவி தொலைந்தால், அந்த காரே தொலைந்ததற்கு சமம் என்றுதான் கருத வேண்டும்.


Click it and Unblock the Notifications









