காரோட உரிமையாளர்கிட்ட ஒரு வார்த்தகூட சொல்லல! வம்படியாக ஸ்கிராப் செய்ய இழுத்து சென்ற போலீஸ்காரர்கள்!
சும்மா நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை அதன் உரிமையாளருக்கே தெரியப்படுத்தாமல் வம்படியாக எடுத்துச் செல்லப்பட்டு ஸ்கிராப் செய்யப்பட்ட சம்பவம் இந்தியாவில் அரங்கேறி இருக்கின்றது. இந்த அதிர்ச்சிகரமான நிகழ்வு எங்கு நடைபெற்றது?, ஏன் நடைபெற்றது? என்பது பற்றிய கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
சும்மா நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்று அதன் உரிமையாளருக்கே தெரியப்படுத்தப்படாமல் ஸ்கிராப் செய்வதற்காக அகற்றப்பட்ட சம்பவம் வாகன உரிமையாளர்கள் மத்தியில் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. தலைநகர் டெல்லியிலேயே இந்த விநோத சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. மாநில காவல்துறையே இத்தகைய நிகழ்வை நிகழ்த்தி இருக்கின்றது என்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது.

காற்று மாசுபாட்டிற்கு எதிராக இந்தியாவில் மிகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் தற்போது ஸ்கிராப்பிற்காக அகற்றப்பட்டு இருக்கின்றது. அந்தக் கார் பல நாட்களாகப் பயன்பாட்டு இல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம் எனக் கூறப்படுகின்றது.
அதேவேளையில், சாலையோரம் என்றால் பொதுவெளி சாலையோரம் அல்ல, ஓர் நபருக்கு, அதாவது காரின் உரிமையாளருக்குச் சொந்தமான அலுவலகம் அமைந்திருக்கும் இடத்தின் வாசலிலேயே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்திருக்கின்றது. இந்த நிலையிலேயே அந்த கார் அப்புறப்படுத்தப்பட்டு ஸ்கிராப்பிற்கு டெல்லி போலீஸாரால் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கின்றது.

அந்த கார் பயன்படுத்தப்படாமல் இருந்ததே தவிர, அது ஓடாத கார் அல்ல என்பது இங்கு கவனிக்கத்தகுந்தது. இப்போதும் பேட்டரி போட்டு சின்ன சர்வீஸ் செய்தால் மிக சூப்பராக ஓடும் என அந்த காரின் உரிமையாளர் தெஹ்ஸீன் பூனவல்லா தெரிவித்தார். இவர் டெல்லி அரசியல் உலகில் மிகவும் ஃபேமஸான நபர் ஆவார்.
இந்த கார் பதினைந்து ஆண்டுகளுக்கும் அதிகமான வயதைக் கொண்டிருப்பதனால் அதனை அவர் முற்றிலுமாக பயன்படுத்துவதை தவிர்த்துவிட்டதாகக் கூறப்படுகின்றது. தலைநகர் டெல்லியில் 15 ஆண்டுகள் பழைய பெட்ரோல் வாகனங்களும், 10 ஆண்டுகள் பழைய டீசல் வாகனங்களின் பயன்பாட்டிற்கும் முழுமையான தடை விதிக்கப்பட்டு இருக்கின்றது.
இந்த உத்தரவை மதித்து தான் இந்த காரை பயன்படுத்துவதே இல்லை என தெஹ்ஸீன் பூனவல்லா தெரிவித்திருக்கின்றார். குறிப்பாக, காரில் இருந்த பேட்டரிகளை அகற்றிவிட்டு அதனை பத்திரமாக தன்னுடைய சொந்த இடத்தில் நிறுத்தி வைத்ததாகவும் அவர் கூறுகின்றார். மேலும், ஓர் சின்ன சென்டிமென்டிற்காக அவர் அக்காரை வேறு யாருக்கும் விற்காமல் வைத்திருந்தததாகக் கூறப்படுகின்றது.
இந்த நிலையிலேயே தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அமல்படுத்திய சட்டத்தின்கீழ் 15 ஆண்டுகளுக்கும் அதிகமான வயதுடைய இந்த பழைய காரை டெல்லி காவல்துறையினர் டோவ் வாகனத்தைக் கொண்டு அப்புறப்படுத்தி இருக்கின்றனர். தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அமல்படுத்திய சட்டம் இதற்கான அதிகாரத்தை டெல்லி காவல்துறைக்கு வழங்குவது குறிப்பிடத்தகுந்தது.
இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தியே முன் அறிவிப்பு இன்றி காவலர்கள் தெஹ்ஸீன் பூனவல்லாவிற்கு சொந்தமான பதினைந்து வயது உடைய ஹோண்டா சிஆர்-வி சொகுசு காரை அகற்றி இருக்கின்றனர். இதைக் கண்டு அதிர்ந்துபோன தெஹ்ஸீன் பூனவல்லா, இதுகுறித்த தன்னுடைய ஆதங்கத்தை அவர் சமூக வலைதளப் பக்கத்தில் பகரிந்து இருக்கின்றார்.
காவலர்கள் அந்த காரை எடுத்துச் செல்லும்முன் பலவகைகளில் சேதப்படுத்தி எடுத்துச் சென்றிருக்கின்றனர். இதை உறுதிப்படுத்தும் விதமாக பூனவல்லா சில படங்களையும், வீடியோவையும் பகிர்ந்துள்ளார். ஏப்ரல் 2023 இல் டெல்லி போக்குவரத்துத் துறை, டெல்லி கார்பரேஷன் மற்றும் டெல்லி காவல்துறை ஆகியவை சாலையோயரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் பயன்பாடற்ற வாகனங்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றது.
சின்ன சந்து-பொந்து தொடங்கி சந்தைகள், சங்கங்கள் என அனைத்து பகுதிகளிலும் உள்ள பயன்படுத்தப்படாத பழைய வாகனங்களை அவர்கள் அப்புறப்படுத்தி வருகின்றனர். இந்த மாதிரியான ஓர் நடவடிக்கையையே அரசியல் விமர்சகர் தெஹ்ஸீன் பூனவல்லாவின் ஹோண்டா சிஆர்-வி எஸ்யூவி கார் மீதும் எடுக்கப்பட்டு இருக்கின்றது. இதுபோன்ற சம்பவங்கள் தற்போது டெல்லியில் தொடர்கதையாகி வருவது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: என்னதான் அதிகாரம் காவலர்களுக்கு கொடுக்கப்பட்டு இருந்தாலும், ஓர் உரிமையாளருக்கு தெரியாமலேயே, அவரின் முன்னிலையிலேயே அவரின் அனுமதி இன்றி இவ்வாறு செய்வது எத்தகைய வேதனையை ஏற்படுத்தும் என்பதை அரசும், அம்மாநில காவல்துறையும் உணரவில்லை. பல பணம் படைத்த செல்வந்தர்கள் வீட்டில் இதைவிட பழைய வாகனங்கள் இப்போதும் பயன்பாட்டில் இருப்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications