புதுசா கார், பைக் வாங்கும் பிளானில் இருக்கீங்களா? இந்த டிசம்பரில் நிறைய மாடல்ஸ் விற்பனைக்கு வருது!!
2023ஆம் வருடத்தின் இறுதி டிசம்பர் மாதத்தை எட்டிவிட்டோம். இந்த 2023ஆம் வருடத்தில் பல்வேறு புதிய கார் & பைக்குகள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன. அந்த வரிசையில், இந்த கடைசி மாதத்திலும் சில கார் & பைக்குகள் விற்பனைக்கு வர உள்ளன. அவற்றை பற்றித்தான் இந்த செய்தியில் பார்க்கப் போகிறோம்.
பொதுவாக, வருடத்தின் கடைசி மாதத்தில் நிறைய ஆட்டோமொபைல் நிறுவனங்கள் புதிய வாகனங்களை அறிமுகப்படுத்த விரும்பாது. ஏனெனில், ஒரு மாதத்தை கடந்து அடுத்த மாதத்தில் புதிய வருடத்தில் அறிமுகப்படுத்தினால், அந்த வாகனத்திற்கு முற்றிலும் புதிய அறிமுகம் கிடைக்கும். இருப்பினும், இந்த 2023 டிசம்பர் மாதத்தில் ஒரு கியா காரும், 4 இருசக்கர வாகனங்களும் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

கியா சொனெட் ஃபேஸ்லிஃப்ட் (Kia Sonet Facelift): இந்த டிசம்பர் மாதத்தில் வெளியீடு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படும் ஒரேயொரு கார் இதுவாகும். தற்சமயம் விற்பனையில் உள்ள கியா சொனெட் காரின் புதிய ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் மாடல் இந்த டிசம்பர் மாத 14ஆம் தேதி வெளியீடு செய்யப்பட உள்ளது. அதனை தொடர்ந்து இந்த காரின் அறிமுகம் சில வாரங்களில் இருக்கும். புதிய சொனெட்டில் தோற்றத்தில் மட்டுமே அப்டேட்கள் இருக்கும்.

சிம்பிள் டாட் ஒன் (Simple Dot One): சிம்பிள் ஒன் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு அடுத்து சிம்பிள் எனர்ஜி நிறுவனம் அறிமுகப்படுத்தும் 2வது எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இதுவாகும். சிம்பிள் டாட் ஒன் ஸ்கூட்டர் வருகிற டிசம்பர் 15ஆம் தேதி வெளியீடு செய்யப்பட உள்ளது. அதனை தொடர்ந்து சில தினங்களில் விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ள இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி கொடுக்கும் பணிகள் அடுத்த 2024 ஜனவரி மாதத்தில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அப்ரிலியா ஆர்.எஸ்457 (Aprilia RS457): இந்திய அளவில் சூப்பர் பைக் பிரியர்கள் பலரது எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த அப்ரிலியா பைக்கும் இந்த டிசம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இந்த பைக்கின் இந்திய அறிமுகத்தை இன்னும் அப்ரிலியா நிறுவனம் உறுதிப்படுத்தவில்லை. இந்திய மார்க்கெட்டில் அப்ரிலியா ஆர்.எஸ் 457 பைக் 450சிசி இணையான-இரட்டை சிலிண்டர் என்ஜின் உடன் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

யமஹா ஆர்3 (Yamaha R3): யமஹாவின் ஆர் வரிசை ஸ்போர்ட்ஸ் பைக்குகளுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது. ஆனால், இந்தியாவில் ஆர்15 மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், ஆர்3 மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தும் பணியில் யமஹா ஈடுப்பட்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த பைக்கில் 321சிசி இணையான-இரட்டை சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது.

யமஹா எம்டி03 (Yamaha MT03): ஆர்15-க்கு எப்படி எம்டி15 பைக்கோ அதேபோன்று, ஆர்3 பைக்கின் நாக்டு வெர்சன் தான் எம்டி03 ஆகும். ஆதலால், இந்த பைக்கையும் இந்த டிசம்பர் மாதத்தில் யமஹா அறிமுகப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பைக்கிலும் மேற்கூறப்பட்ட அதே 321சிசி இணையான-இரட்டை சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 42 பிஎச்பி மற்றும் 29.6 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த 5 வாகனங்களும் நிச்சயமாக இந்த டிசம்பர் மாதத்தில் அறிமுகப்படுத்தப்படும் என உறுதியாக கூற முடியாது. ஏனெனில், இதில் சில வாகனங்கள் அறிமுகம்/ வெளியீடு தள்ளிப் போகலாம். குறிப்பாக, கடைசியாக சொல்லப்பட்டுள்ள அப்ரிலியா மற்றும் யமஹா பைக்குகளின் இந்திய அறிமுகங்கள் இன்னும் உறுதியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications









