குச்சி மிட்டாய், குருவி ரொட்டி போல் கார்களை விற்பனை செய்யும் மாருதி சுஸுகி!! மற்ற நிறுவனங்களால் நெருங்க முடியல
கொரோனா காலத்திற்கு பின் கார்கள் விற்பனை இந்தியாவில் மெல்ல மெல்ல அதிகரித்துவரும் சூழலில், கடந்த மே மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட முதல் 10 கார்கள் குறித்த விபரங்கள் கிடைத்துள்ளன. அவற்றை பற்றி இந்த செய்தியில் பார்க்கலாம்.
வழக்கம்போல், மாருதி சுஸுகி தான் கார்கள் விற்பனையில் முன்னிலை வகிக்கிறது. அதிகம் விற்பனை செய்யப்பட்ட இந்த 10 கார்களில் கூட சுமார் 7 கார்கள் மாருதி சுஸுகி நிறுவனத்துடையது ஆகும். குறிப்பாக, முதல் 3 இடங்களை மாருதி சுஸுகி கார்களே பிடித்துள்ளன. முதலிடத்தை கடந்த மே மாதத்தில் மாருதி சுஸுகி பலேனோ தனதாக்கி உள்ளது.

அதாவது, கடந்த மே மாதத்தில் இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட கார் பலேனோ ஆகும். மொத்தம் 18,733 மாருதி சுஸுகி பலேனோ கார்கள் கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதுவே 2022 மே மாதத்தில் 13,970 பலேனோ கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் பலேனோ கார்கள் விற்பனை 2022 மே மாதத்தை விட கடந்த மே மாதத்தில் 34.09% அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட மொத்த கார்களில் 13.34% பலேனோ கார்களாகும். பலேனோவிற்கு அடுத்து 2வது இடத்தில் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் உள்ளது. ஸ்விஃப்ட்டின் கடந்த மாத விற்பனை எண்ணிக்கை 17,346 ஆகும். பலேனோவை போல் ஸ்விஃப்ட் கார்களும் கடந்த ஆண்டு மே மாதத்தில் குறைந்த எண்ணிக்கையிலேயே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. 2022 மே மாதத்தில் 14,133 ஸ்விஃப்ட் கார்கள் விற்கப்பட்டு இருந்தன.

இந்த வகையில் ஸ்விஃப்ட் கார்களின் விற்பனை ஆனது 22.73% அதிகரித்துள்ளது. ஏற்கனவே கூறியதுபோல், இந்தியாவில் கடந்த மாதத்தில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட முதல் 3 கார்கள் மாருதி சுஸுகி நிறுவனத்துடையதே ஆகும். 3வது இடத்தில் மற்றொரு பிரபலமான மாருதி சுஸுகி காரான வேகன்ஆர் 16,258 யூனிட்களின் விற்பனை உடன் உள்ளது. 2022 மே மாதத்திலும் கிட்டத்தட்ட இதே எண்ணிக்கையிலான வேகன்ஆர் கார்களே விற்பனையாகி இருந்தன.
4வது இடத்தில் ஹூண்டாய் க்ரெட்டா உள்ளது. இந்தியாவில் தற்சமயம் அதிகம் விற்பனையாகும் ஹூண்டாய் காராகவும், எஸ்யூவி காராகவும் விளங்கும் க்ரெட்டா கடந்த மாதத்தில் 14,449 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆனால் 2022 மே மாதத்தில் 10,973 க்ரெட்டா கார்கள் மட்டுமே விற்பனையாகி இருந்தன. க்ரெட்டாவை காட்டிலும் சில நூறு யூனிட்கள் மட்டுமே குறைவாக விற்பனையாகி 5வது இடத்தில் டாடா நெக்ஸான் உள்ளது.

டாடா நெக்ஸானின் கடந்த மே மாத விற்பனை எண்ணிக்கை 14,423 ஆகும். 2022 மே மாதத்தில் 14,614 நெக்ஸான் கார்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்திருந்தது. நெக்ஸான் அடுத்து அடுத்த 3 இடங்களில், அதாவது 6வது, 7வது மற்றும் 8வது இடங்களில் மாருதி சுஸுகி கார்களான பிரெஸ்ஸா, ஈக்கோ மற்றும் டிசைர் உள்ளன. இவற்றின் கடந்த மே மாத விற்பனை எண்ணிக்கைகள் முறையே 13398, 12818 மற்றும் 11315 ஆகும். இந்த டாப்-10 லிஸ்ட்டின் கடைசி இரு இடங்களை டாடா பஞ்ச் மற்றும் மாருதி சுஸுகி எர்டிகா பிடித்துள்ளன.
| Rank | Cars | May'23 | May'22 | Growth (%) YOY |
| 1 | Maruti Baleno | 18,733 | 13,970 | 34.09 |
| 2 | Maruti Swift | 17,346 | 14,133 | 22.73 |
| 3 | Maruti Wagonr | 16,258 | 16,814 | -3.31 |
| 4 | Hyundai Creta | 14,449 | 10,973 | 31.68 |
| 5 | Tata Nexon | 14,423 | 14,614 | -1.31 |
| 6 | Maruti Brezza | 13,398 | 10,312 | 29.93 |
| 7 | Maruti Eeco | 12,818 | 10,482 | 22.29 |
| 8 | Maruti Dzire | 11,315 | 11,603 | -2.48 |
| 9 | Tata Punch | 11,124 | 10,241 | 8.62 |
| 10 | Maruti Ertiga | 10,528 | 12,226 | -13.89 |
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: இந்த லிஸ்ட்டின் மூலம் மாருதி சுஸுகி கார்கள் மீது இந்தியர்கள் எந்த அளவிற்கு நம்பிக்கை வைத்துள்ளனர் என்பது மீண்டும் ஒருமுறை தெரியவருகிறது. தற்போதைய டிரெண்டாக இருக்கும் எஸ்யூவி கார்களை பொறுத்தவரையில், டாடா நெக்ஸானை ஹூண்டாய் க்ரெட்டா விற்பனையில் முந்தியுள்ளது. அதேபோல், அறிமுகத்தின்போது பிரெஸ்ஸாவிற்கு கிடைத்துவந்த வரவேற்பு சற்று குறைய துவங்கி இருப்பதையும் அறிய முடிகிறது.


Click it and Unblock the Notifications









