பணத்தை மூட்டையில் கொண்டு போய் கொட்டினாலும் உடனே தர மாட்டாங்க! இந்த கார்களுக்கு எல்லாம் அவ்ளோ டிமாண்ட் இருக்கு!
நீங்கள் ஒரு காரை முன்பதிவு செய்தால், உடனடியாக உங்களுக்கு டெலிவரி வழங்க மாட்டார்கள். ஒவ்வொரு காருக்கும் என குறிப்பிட்ட காத்திருப்பு காலம் (Waiting Period) இருக்கும். நீங்கள் முன்பதிவு செய்வதற்கும், டெலிவரி பெறுவதற்கும் இடையேயான இடைவெளிதான் காத்திருப்பு காலம் என அழைக்கப்படுகிறது.
இந்த காத்திருப்பு காலம் கடந்த பிறகுதான் உங்களுக்கு கார் டெலிவரி செய்யப்படும். இதன்படி இந்தியாவில் நடப்பு மார்ச் மாத நிலவரப்படி அதிக காத்திருப்பு காலம் கொண்ட கார்களின் பட்டியலை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம். இந்தியாவில் தற்போதைய நிலையில் இருப்பதிலேயே அதிக காத்திருப்பு காலம் கொண்ட காராக டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் (Toyota Innova Hycross) உள்ளது.

டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரை நீங்கள் டெலிவரி பெற வேண்டுமென்றால், சுமார் 18 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும். இந்த செய்தியை மேற்கொண்டு தொடர்வதற்கு முன்னதாக மற்றொரு விஷயத்தையும் இங்கே கூறி விடுகிறோம். நாங்கள் இங்கே குறிப்பிட்டுள்ள காத்திருப்பு காலமானது, வேரியண்ட்களை (Variants) பொறுத்து மாறுபடலாம்.
சரி, டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காருக்கு அடுத்தபடியாக அதிக காத்திருப்பு காலம் கொண்ட காராக இருப்பது மஹிந்திரா தார் (Mahindra Thar) ஆகும். மஹிந்திரா தார் காரை டெலிவரி பெறுவதற்கு நீங்கள் 17 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும். இந்த பட்டியலில் 3வது இடத்தில் இருப்பது டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder) கார் ஆகும்.

இந்த காரை டெலிவரி பெற வேண்டுமென்றால், நீங்கள் 15 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக மஹிந்திரா ஸ்கார்பியோ (Mahindra Scorpio) காருக்கும் 15 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. அதே சமயம் மஹிந்திரா எக்ஸ்யூவி700 (Mahindra XUV700) காருக்கான காத்திருப்பு காலம், தற்போதைய நிலையில் 11 மாதங்கள் வரை என குறைந்துள்ளது.
மஹிந்திரா எக்ஸ்யூவி700 காருக்கான காத்திருப்பு காலம் ஒரு சமயத்தில் 2 ஆண்டுகள், அதாவது 24 மாதங்கள் வரை இருந்தது. ஆனால் அது தற்போது 11 மாதங்களாக குறைந்துள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு சற்றே மகிழ்ச்சியை ஏற்படுத்தும் விஷயம் ஆகும். மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரை போல், கியா கேரன்ஸ் (Kia Carens) காருக்கான காத்திருப்பு காலமும் 11 மாதங்கள் வரையாகதான் இருக்கிறது.
இதற்கு அடுத்தபடியாக மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza) காருக்கு 10 மாதங்கள் வரையும், கியா சொனெட் (Kia Sonet) காருக்கான காத்திருப்பு காலம் 9 மாதங்கள் வரையும், ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta) காருக்கான காத்திருப்பு காலம் 8 மாதங்கள் வரையும், மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara) காருக்கான காத்திருப்பு காலம் 6 மாதங்கள் வரையும் உள்ளது.
பொதுவாக மிகவும் அதிக டிமாண்ட் இருக்கும் கார்களுக்குதான் காத்திருப்பு காலம் மிகவும் அதிகமாக இருக்கும். சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், உற்பத்தியை அதிகரிக்கும்பட்சத்தில் கார்களின் காத்திருப்பு காலம் குறைவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இல்லாவிட்டால் வாடிக்கையாளர்கள் பலர் வேறு கார்களுக்கு மாறி விடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்பதை இங்கே மறுக்க முடியாது.


Click it and Unblock the Notifications








