நம்பர் ஒன் பிராண்ட் என்றால் சும்மாவா... மாருதி கார்கள் விற்பனையை யாராலும் தடுக்க முடியல!!
கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட், ஹோண்டா எலேவேட், மாருதி சுஸுகி இன்விக்டோ என சந்தையில் பல்வேறு புதிய கார்கள் விற்பனைக்கு வரும் நிலையில், கடந்த ஜூன் மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 கார்கள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. அவற்றை பற்றி அட்டவணையாக இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவில் கார்கள் விற்பனை என்றாலே மாருதி சுஸுகியின் ஆதிக்கமே அதிகமாக இருக்கும். கடந்த ஜூன் மாத விற்பனையிலும் அவ்வாறுதான் உள்ளது என்றாலும், அதிகம் விற்பனை செய்யப்பட்ட முதல் 10 கார்களில் 7 மாருதி சுஸுகி கார்கள் பெரும்பாலும் இடம்பெற்றுவிடும். ஆனால் கடந்த மாத டாப்-10 கார்கள் லிஸ்ட்டில் 6 மாருதி சுஸுகி கார்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன.

அதேபோன்று இந்த டாப்-10 லிஸ்ட்டில் குறைந்தது முதல் 3 இடங்களையாவது மாருதி சுஸுகி கார்கள் பிடித்துவிடும். கடந்த காலங்களில் முதல் 5 இடங்களை கூட மாருதி சுஸுகி கார்கள் பெற்றுள்ளன. ஆனால் கடந்த 2023 ஜூன் மாத டாப்-10 லிஸ்ட்டில் முதல் இரு இடங்களை மட்டுமே மாருதி சுஸுகி கார்கள் பிடித்துள்ளன. 3வது இடத்தில் ஹூண்டாய் மோட்டார்ஸின் க்ரெட்டா உள்ளது.
முதல் இரு இடங்களில் மாருதி சுஸுகியின் வேகன்ஆர் மற்றும் ஸ்விஃப்ட் கார்கள் உள்ளன. மாருதி சுஸுகி வேகன்ஆர் கடந்த ஜூன் மாதத்தில் மொத்தம் 17,481 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆனால் 2022 ஜூன் மாதத்தில் 19,190 யூனிட்களின் விற்பனை உடன் வேகன்ஆர் முதலிடத்தை பிடித்து இருந்தது. இந்த வகையில் வேகன்ஆர் கார்களின் விற்பனை ஆனது 9% கடந்த மாதத்தில் குறைந்துள்ளது.

2வது இடத்தில் உள்ள மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கடந்த மாதத்தில் 15,955 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆனால் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இதே ஸ்விஃப்ட் கார் மொத்தம் 16,213 யூனிட்கள் விற்கப்பட்டு இருந்தது. 3வது இடத்தில் ஏற்கனவே கூறியதுபோல், ஹூண்டாய் க்ரெட்டா உள்ளது. கடந்த சில மாதங்களாக ஏறுமுகமாக இருக்கும் க்ரெட்டாவின் விற்பனை எண்ணிக்கை கடந்த ஜூன் மாதத்தில் 14,447 ஆக பதிவாகியுள்ளது.
அதுவே 2022 ஜூன் மாதத்தில் இதனை காட்டிலும் 5% குறைவாக 13,790 க்ரெட்டா கார்கள் மட்டுமே விற்பனையாகி இருந்தன. கடந்த மாதங்களில் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் காராக நம்பர் ஒன் இடத்தை பிடித்த மாருதி சுஸுகி பலேனோ கடந்த ஜூன் மாதத்தில் 4வது இடத்தையே பெற்றுள்ளது. கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட பலேனோ கார்களின் எண்ணிக்கை 14,077 ஆகும்.

இதற்கடுத்து 5வது மற்றும் 6வது இடங்களில் இந்தியாவின் சப்-காம்பெக்ட் எஸ்யூவி கார்களான டாடா நெக்ஸான் மற்றும் ஹூண்டாய் வென்யூ உள்ளன. இவற்றின் கடந்த ஜூன் மாத விற்பனை எண்ணிக்கைகள் முறையே 13,827 மற்றும் 11,606 ஆகும். சந்தையில் தற்போதைக்கு 1 லிட்டர் பெட்ரோல் என்ஜின் உடன் மட்டுமே விற்பனையில் உள்ள ஆல்டோவின் விற்பனை கடந்த சில மாதங்களாக வெகுவாக குறைந்து வருகிறது. கடந்த ஜூன் மாத விற்பனையில் ஆல்டோ 7வது இடத்திற்கு சரிந்துள்ளது.
| Rank | Models | Jun'23 | June'22 | Growth (%) YoY |
| 1 | Maruti WagonR | 17,481 | 19,190 | -9 |
| 2 | Maruti Swift | 15,955 | 16,213 | -2 |
| 3 | Hyundai Creta | 14,447 | 13,790 | 5 |
| 4 | Maruti Baleno | 14,077 | 16,103 | -13 |
| 5 | Tata Nexon | 13,827 | 14,295 | -3 |
| 6 | Hyundai Venue | 11,606 | 10,321 | 12 |
| 7 | Maruti Alto | 11,323 | 13,790 | -18 |
| 8 | Tata Punch | 10,990 | 10,414 | 6 |
| 9 | Maruti Brezza | 10,578 | 4,404 | 140 |
| 10 | Maruti Grand Vitara | 10,486 | - | - |
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார்களாக ஹூண்டாய், டாடா கார்கள் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்துள்ளன என்றாலும், இதற்கெல்லாம் மாருதி சுஸுகி பெரியதாக கவலைப்படாது. ஏனெனில் இப்போதும் அதிக பேரால் வாங்கப்படும் கார் மாருதி சுஸுகி நிறுவனத்துடையதே. மேலும், மாருதி சுஸுகியின் கிராண்ட் விட்டாரா காருக்கு 10 ஆயிரத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் கடந்த மாதத்தில் கிடைத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications









