ஷோரூமுக்கு வரும் எல்லாரது பார்வையும் இந்த காரின் மீதுதான் இருக்கும்... மாருதி சுஸுகி செலேரியோ பிளாக் எடிசன்!!
புதிய கருப்பு நிற பெயிண்ட்டில் மாருதி சுஸுகி செலேரியோ (Maruti Suzuki Celerio) கார் டீலர்ஷிப் மையங்களை வந்தடைய துவங்கியுள்ளது. இதுகுறித்து இணையத்தில் வெளியாகியுள்ள வீடியோவை இனி தொடர்ந்து முழுமையாக பார்க்கலாம்.
வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்க, பிளாக் எடிசன் கார்கள் அவ்வப்போது சந்தையில் பல கார் பிராண்ட்களால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் சமீபத்தில் மாருதி சுஸுகி நிறுவனம் அதன் பெரும்பாலான கார்களில் பிளாக் எடிசனை முற்றிலும் கருப்பு நிற பெயிண்ட்டில் அறிமுகப்படுத்தியது. அவற்றுள் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா மற்றும் வேகன்ஆர் மாடல்களின் பிளாக் எடிசன்கள் சில தினங்களுக்கு முன் ஷோரூமை வந்தடைய துவங்கின.

அந்த வகையில் தற்போது, செலேரியோ காரின் பிளாக் எடிசன் மாருதி சுஸுகியின் அங்கீகரிக்கப்பட்ட அரேனா டீலர்ஷிப் ஷோரூம் ஒன்றை வந்தடைந்துள்ளது. இந்த பிளாக் எடிசன் கார்கள் அனைத்திற்கும் பேர்ல் மிட்நைட் கருப்பு நிற பெயிண்ட் வழங்கப்பட்டுள்ளது. இந்த பிளாக் எடிசன் கார்களை மாருதி சுஸுகி நிறுவனம் தனது 40 வருட நிறைவை நினைவுக்கூறும் விதமாக அறிமுகப்படுத்தி உள்ளது.
தற்சமயம் செலேரியோ காரின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ஆனது ரூ.5.35 லட்சமாக உள்ளது. பிளாக் எடிசனுக்காக எந்தவொரு விலை உயர்வையும் செலேரியோ காரில் மாருதி நிறுவனம் கொண்டுவரவில்லை. வழக்கமாக மற்ற பெயிண்ட்களுக்கு செலேரியோவில் நிர்ணயிக்கப்பட்டுள்ள விலைகள் தான் பிளாக் எடிசனிலும் தொடரப்பட்டுள்ளன. இதற்கு முக்கிய காரணம், கார்களின் வெளிப்பக்கத்திற்கு மட்டுமே கருப்பு நிற பெயிண்ட் வழங்கப்பட்டுள்ளதே தவிர, உட்பக்க கேபினில் எந்த மாற்றமும் இல்லை.

அதாவது, பிளாக் எடிசன்களுக்காக தனது கார்களின் உட்புற கேபினில் எந்தவொரு மாற்றத்தையும் மாருதி சுஸுகி செய்யவில்லை. இதனாலேயே விலையில் மாற்றமில்லை. ஆனால் உற்பத்தி செலவை காரணம் காட்டி, இந்த ஏப்ரல் முதல் கார்களின் விலைகளை மாருதி சுஸுகி அதிகரிக்கிறது. சரி மீண்டும் செலேரியோ பிளாக் எடிசனுக்கு வருவோம். டீலர்ஷிப் ஷோரூமில் இருந்து வெளியாகியுள்ள வீடியோவில் காட்சி தருவது செலேரியோவின் இசட்.எக்ஸ்.ஐ+ வேரியண்ட் அடிப்படையிலான பிளாக் எடிசன் ஆகும்.
மாருதி சுஸுகி நிறுவனம் தனது கார்களின் டாப் வேரியண்ட்களில் மட்டுமே பிளாக் எடிசன்களை கொண்டுவந்துள்ளது. ஏற்கனவே கூறியதுபோல், இந்த கார்களின் வெளிப்பக்கம் ஆனது பேர்ல் மிட்நைட் கருப்பு நிறத்தால் பெயிண்ட் செய்யப்படுகிறது. காரின் பாடி கலருக்கு ஏற்ப அலாய் சக்கரங்களும் கருப்பு நிறத்தில் பொருத்தப்படுகின்றன. இந்த பெயிண்ட்டை தவிர்த்து பார்த்தோமேயானால், செலேரியோ காரின் மற்ற அம்சங்களில் எந்த மாற்றமும் இல்லை.

செலேரியோவின் டாப் இசட்.எக்ஸ்.ஐ+ வேரியண்ட்டில் வழங்கப்படும் அம்சங்களே பிளாக் எடிசனிலும் இடம்பெற்றுள்ளன. செலேரியோவில் இயக்க ஆற்றலை வழங்குவதற்கு 1.0 லிட்டர் கே10சி பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 66 பிஎச்பி மற்றும் 89 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. அத்துடன், சிஎன்ஜி தேர்விலும் செலேரியோ கார் விற்பனை செய்யப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து
கார்களின் விற்பனையை எப்போதும் ஒரே சீராக வைத்து கொள்ள இவ்வாறான பிளாக் எடிசன்களின் அறிமுகங்கள் தேவை ஆகும். ஏப்ரல் முதல் கொண்டுவரப்பட உள்ள விலையுயர்வை கருத்தில் கொண்டு, விலையில் எந்த அதிகரிப்பும் இன்றி மாருதி சுஸுகி நிறுவனம் இந்த பிளாக் எடிசன் கார்களை அறிமுகம் செய்துள்ளது. இருப்பினும் வாடிக்கையாளர்கள் இந்த பிளாக் எடிசன் கார்களுக்கு எத்தகைய வரவேற்பு கொடுக்க உள்ளனர் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








