தமிழகத்திற்கு டெஸ்லா வருமா? மத்திய அரசு செய்ய முடியாதுன்னு சொன்னதைத் தமிழக அரசு செய்து தருமா?
டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தனது தயாரிப்பு ஆலையை அமைக்க இடம் தேடி வரும் நிலையில் மத்திய அரசு டெஸ்லா நிறுவனத்திற்கு எந்த விதமான தனிப்பட்ட சலுகையும் வழங்குவதில்லை என முடிவு செய்துள்ளது. மேலும் மாநில அரசுகள் வேண்டுமென்றால் சலுகைகளை வழங்கலாம் எனவும் தெரிவித்துள்ளது. இந்நிலையில் மாநில அரசுகள் மத்தியில் டெஸ்லா நிறுவனத்தை தங்கள் மாநிலத்திற்கு இழுப்பது குறித்து போட்டி நிலவி வருகிறது. இது குறித்து விரிவாகக் காணலாம் வாருங்கள்.
இந்தியா தற்போது ஆட்டோமொபைல் சந்தையில் உலக அளவில் மூன்றாவது பெரிய நாடாக இருக்கிறது. அமெரிக்கா, சீனாவிற்குப் பிறகு இந்தியாவில் தான் அதிகமான வாகனங்கள் விற்பனையாகி வருகிறது. இவ்வளவு பெரிய மார்க்கெட்டை விட்டு வைக்க டெஸ்லா நிறுவனம் விரும்பவில்லை. அதனால் இந்தியாவிற்குள் டெஸ்லா நிறுவனம் தன் காலடி தளத்தைப் பதிக்க முடிவு செய்துள்ளது.

இதற்காக டெஸ்லா நிறுவன அதிகாரிகள் எல்லாம் இந்திய அரசின் அதிகாரிகளைக் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சந்தித்துப் பேசினார். இந்தியாவின் கொள்கைப்படி இந்தியாவிற்குள் தயாரிக்கப்படும் கார்களுக்கு மட்டுமே குறைவான வரிகளும் வெளிநாட்டு தயாரித்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு அதிகமான வரிகளும் இருக்கிறது.
இதனால் இந்தியாவிற்குள் டெஸ்லா நிறுவனம் தனது ஆலையை நிறுவி கார்களை தயாரித்தால் மட்டுமே இந்தியாவில் குறைந்த விலையில் கார்களை விற்பனை செய்ய முடியும். இதனால் இந்தியாவில் தனது ஆலையே நிறுவ டெஸ்லா நிறுவனம் முடிவு செய்துவிட்டது. இதற்காக இடம் தேடும் பணி தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.
இந்நிலையில் மத்திய அரசு டெஸ்லா நிறுவனம் இந்தியாவிற்குள் வருவதற்காக டெஸ்லா நிறுவனத்திற்குச் சிறப்பாக எந்த சலுகைகளையும் வழங்க முடியாது, என்றும் வழக்கமாக மற்ற இந்திய நிறுவனங்களுக்கு வழங்கும் அதே சலுகை தான் டெஸ்லாவிற்கும் கிடைக்கும் என்றும், தேவைப்பட்டால் மாநில அரசுகள் வேண்டுமானால் அவர்கள் பங்கிலிருந்து சலுகைகளை அறிவித்துக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.
இதுவரை டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் எந்த பகுதியில் தனது ஆலையை நிறுவப் போகிறது என்று முடிவு செய்யாத நிலையில் தற்போது மாநில அரசுகள் மத்தியில் டெஸ்லா நிறுவனத்தைத் தனது மாநிலத்திற்குள் ஈர்க்க பல்வேறு போட்டிகள் நடந்து வருகிறது. மாநில அரசுகள் சலுகைகளை அறிவிக்கலாம் என மத்திய அரசு கூறியுள்ள நிலையில் டெஸ்லா நிறுவனத்திற்குத் தேவையான சலுகையை அறிவிக்க மாநில அரசுகள் போட்டியிட்டு வருகின்றன.
தமிழகத்தைப் பொறுத்தவரைச் சென்னை துறைமுகம் இருப்பதால் அங்கிருந்து தெற்காசிய நாடுகளான இந்தோனேசியா சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்குத் தனது கார்களை டெஸ்லா நிறுவனம் சுலபமாக ஏற்றுமதி செய்யலாம். அதே நேரம் சென்னை போன்ற பெருநகரம் இந்தியாவின் மற்ற பெரும் நகரங்களுடன் இணைப்பில் இருப்பதால் சென்னையில் தயாரிக்கப்படும் கார்கள் இந்தியா முழுவதும் எளிதாக விற்பனைக்குக் கொண்டு செல்ல முடியும்.
இதனால்தான் ஏற்கனவே ஹூண்டாய் போன்ற பல முக்கியமான ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தமிழகம் மற்றும் சென்னையை மையமாக வைத்து தனது ஆலையை நிறுவியுள்ளது. இதேபோல டெஸ்லா நிறுவனமும் தமிழகத்தைத் தேர்வு செய்ய அதிகமான வாய்ப்புகள் உள்ளன. இப்படி நடந்தால் தமிழகத்திற்குள் டெஸ்லா நிறுவனத்திற்கும் லாபம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
அதே நேரம் ஆந்திரா மற்றும் கர்நாடக மாநில அரசுகளுக்கும் டெஸ்லா நிறுவன ஆலையை தங்கள் மாநிலத்தில் நிறுவ வேண்டும் என்று ஆசை இருக்கிறது. அதற்காக அந்த மாநில அரசுகளும் போட்டியிட்டு வருகின்றன. டெஸ்லா நிறுவனம் இதுவரை தனக்கான தேவைகளை வெளிப்படையாக அறிவிக்கவில்லை தற்போது மாநில அரசுடன் பேச்சுவார்த்தையில் மட்டுமே இருக்கிறது.
டெஸ்லா நிறுவனம் தனக்கான தேவைகளுடன் முன் வரும்போது அந்த தேவைகளைச் செய்து கொடுக்கும் மாநிலத்தில் தான் டெஸ்லா நிறுவனம் தனது ஆலையை அமைக்க அதிகமான வாய்ப்புகள் உள்ளன. தமிழகத்திற்கு டெஸ்லா நிறுவனம் வருவதற்குத் தமிழக அரசு டெஸ்லா நிறுவனம் கேட்கும் வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டும். செய்து கொடுக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவிற்குள் டெஸ்லா நிறுவனம் வருவது இந்தியாவின் பொருளாதாரத்தை மிகப்பெரிய அளவில் வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்லும். டெஸ்லா நிறுவனம் எந்த மாநிலத்தில் தனது ஆலையை அமைக்கிறதோ அந்த மாநிலத்தில் சிறப்பான வளர்ச்சிகள் இருக்கும் என எதிர்பார்க்கலாம். தமிழகத்திற்கு இந்த வாய்ப்பு கிடைக்குமா எனப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








