சென்னையில் மஹிந்திரா எலெக்ட்ரிக் காரை வாங்கியவருக்கு ஏற்பட்ட பரிதாப நிலைமை! நடுரோட்ல போராட்டம் பண்ணறாரு!
மகேந்திரா எக்ஸ்யூவி 400 எலெக்ட்ரிக் காரை வாங்கிய ஒருவர் அந்த கார் அடிக்கடி ரிப்பேர் ஆனதால் கார் ஷோரூம் எதிரே ரோட்டில் அமர்ந்து தர்ணா செய்த சம்பவம் சமீபத்தில் சென்னையில் நடந்துள்ளது. மூன்று மாதத்தில் மூன்று முறை இந்த கார் நடுரோட்டில் நின்று விட்டதால் கடுப்பாகி இந்த முடிவை அவர் எடுத்துள்ளார். இது குறித்த விரிவான தகவல்களை காணலாம் வாருங்கள்.
சென்னை தாம்பரத்தை அடுத்த சிட்லபாக்கம் பகுதியை சேர்ந்தவர் ராம்ராஜேஷ் இவர் சென்னை குரோம்பேட்டை பகுதியில் உள்ள மகேந்திரா கார் ஷோரூமில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூபாய் 21 லட்சம் மதிப்புள்ள மஹிந்திரா எக்ஸ்யூவி 400 எலெக்ட்ரிக் காரை வாங்கியுள்ளார். எலெக்ட்ரிக் கார் மீது தற்போது மக்களுக்கு மோகம் அதிகமாகி உள்ளதால் அந்த மோகம் ராம்ராஜேஷ்கும் ஏற்பட்டு இந்த காரை அவர் வாங்கியுள்ளார்.

இவர் தினந்தோறும் இந்த காரில் தனது அலுவலகத்திற்கு சென்று வருவது வாடிக்கையாக வைத்துள்ளார். இவர் கார் வாங்கி மூன்று மாதம் ஆன நிலையில் ஒவ்வொரு மாதமும் ஒரு முறையாவது இந்த கார் நடுரோட்டில் நின்றுவிடும் சூழல் ஏற்பட்டுள்ளது. காரில் மீண்டும் மீண்டும் ஏற்பட்ட இந்த பிரச்சனையால் கார் நடுரோட்டில் நின்றுள்ளது. இதனால் இவருக்கு பெரும் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது.
முதல் இரண்டு முறையும் கடுப்பாகி இந்த காரை சர்வீஸ் சென்டருக்கு கொண்டு சென்று ரிப்பேர் செய்த ராஜேஷ் மூன்றாவது முறை நிற்கும் போது எரிச்சலின் உச்சகட்டத்திற்கு சென்றுவிட்டார். அவர் கார் வாங்கிய ஷோரூமை தொடர்பு கொண்டு தான் இப்படி நடுரோட்டில் நின்று விட்டதாக கூறியுள்ளார். கார் ஷோரூம் ஊழியர்களும் இந்த காரை எடுத்துச் செல்ல ஆட்களை அனுப்புவதாக தெரிவித்திருந்தனர்.

இதன் பின்னர் அவர் புகார் அளித்து ஆறு மணி நேரம் ஆன பின்பும் கார் ஷோரூமிலிருந்து இந்த காரை எடுத்துச் செல்ல யாரும் வரவில்லை. இதனால் ராமராஜேஷ் பொறுமையை இழந்துவிட்டார். பின்ன கார் ஷோரூம் ஊழியர்கள் வந்து காரை ஷோரூமிற்கு எடுத்து சென்றபோது, இவர் கார் ஷோரூம் வாசலில் தன் காருடன் சாலை அமர்ந்து தர்ணாவில் ஈடுபட தொடங்கினார்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போக்குவரத்துகள் எல்லாம் பாதிக்கப்பட்டது. இதை அறிந்து போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சம்பவம் குறித்து அவரிடம் விசாரணை நடத்தினர். அப்பொழுது அவர் கார் வாங்க பல லட்சம் செலவு செய்ததாகவும் தனக்கு சிறப்பான கார் கிடைக்கவில்லை எனவும் புகார் கூறினார். மேலும் தனது கார் அடிக்கடி நடுரோட்டில் நின்று விடுவதாகவும் வேதனையுடன் தெரிவித்தார்.
இதையடுத்து போலீசார் அவருடன் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி அவரது தர்ணாவை கலைத்தனர். அப்பொழுது அவர் போலீசாரிடம் கூறும் போது தான் இந்த மகேந்திரா எக்ஸ்யூவி 400 எலெக்ட்ரிக் காரை கடனில் வாங்கியதாகவும் தற்போது மாதம் ரூபாய் 33,000 இஎம்ஐ கட்டி வருவதாகவும் தெரிவித்தார்
இவர் கார் வாங்கும் போது பலர் கார்களை விற்பனை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு பொய்களை கூறி காரை விற்பனை செய்ததாக மகேந்திரா ஷோரூம் உரிமையாளர்கள் மீதும் குற்றம் சாட்டியுள்ளார். இவரது கார் ஏன் நடுவழியில் நின்றது என்ற தொழில்நுட்ப தகவல்கள் எதுவும் இல்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: குறிப்பிட்ட சம்பவத்தில் தவறு யார் மீது என்ற தகவல் இதுவரை வெளியே தெரியவில்லை. ஆனால் பெட்ரோல் காரை பயன்படுத்திய பலருக்கு எலெக்ட்ரிக் காரை பயன்படுத்தும்போது இப்படியான சிக்கல்கள் வருகிறது. எலெக்ட்ரிக் காரை பயன்படுத்தும் முன் அதை முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும். அதே நேரம் டீலர்களும் எலெக்ட்ரிக் காரை விற்பனை செய்யும் போது இல்லாத விஷயங்களையும் வாடிக்கையாளருக்கு தெரிவித்து விற்பனையை செய்கின்றனர் இதையும் தவிர்க்க வேண்டும்..


Click it and Unblock the Notifications








