லாக் ஆன காருக்குள் சிக்கிய 3வயது குழந்தை.. இப்படிதான் மீட்டெடுத்தாங்களா! ஒவ்வொருத்தரும் தெரிஞ்சு வச்சுக்கணும்!
விளையாட்டும், குறும்புத் தனமும் நிறைந்தவர்களே சிறுவர்கள். இதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இருக்காது என நம்புகின்றோம். இதனால்தான் அவர்களை எங்கும் தனியே விட்டுச் செல்லக் கூடாது என்று அறிவுறுத்தப்படுகின்றது. குறிப்பாக, வீடு, கார்களில் தனியாக விட்டுச் செல்லவதை அறவே தவிர்க்க வேண்டிய செயல் ஆகும். ஏன் என்பதற்கு சான்றாகவே ஓர் நிகழ்வு தற்போது அரங்கேறி இருக்கின்றது. அது என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
சிறுவர்கள் தொடங்கி செல்லப் பிராணிகள் வரை என யாரையும் தனியே காரில் விட்டுச் செல்லக் கூடாது என பல காலமாக கூறப்பட்டு வருகின்றது. இதை மீறி செய்தவர்கள் பலர் சொல்ல முடியா துயரங்களுக்கு ஆளாகி இருக்கின்றனர். இருப்பினும், இப்போதும் ஒரு சிலர் இந்த தவறை செய்த வண்ணம் இருக்கின்றனர். அந்தவகையில் பஞ்ஜாப் மாநிலம், லூதிாயானாவில் ஓர் சம்பவம் நிகழ்ந்திருக்கின்றது.

மூன்று வயது குழந்தை ஒன்று சென்ட்ரல் லாக்கிங் வசதிக் கொண்ட காரில் தனி ஆளாக சிக்கி கொண்ட அதிர்ச்சிகரமான சம்பவமே இங்கு அரங்கேறி இருக்கின்றது. இந்த குழந்தையை பத்திரமாக மீட்டெடுத்த பரபரப்பான சம்பவம் பற்றிய தகவலே தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது.
மற்ற பேரண்ட்ஸ்களுக்கு வவிழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக அந்த குழந்தையின் தந்தையே டுவிட்டர் பதிவின் வாயிலாக இந்த தகவலை பகிர்ந்திருக்கின்றார். சுந்தர் தீப் எனும் நபருக்கே இந்த மோசமான சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. இவர், சம்பவத்தன்று தன்னுடைய ஃபோக்ஸ்வேகன் டி-ராக் காரில் குடும்பத்துடன் வெளியே செல்ல புறப்பட்டு இருக்கின்றார்.

அவரும் அவருடைய முதல் குழந்தையும் புறப்படுவதற்காக வெளியே வந்துவிட்டநிலையில், அவருடைய மனைவியும் மற்ற குழந்தையும் வெளியில் வராமல் இருந்திருக்கின்றனர். அவர்களுக்காக காத்திருந்த நேரத்திலேயே அந்த அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. சுந்தர் தீப்பின் கைகளில் இருந்து சாவியை பிடிங்கிச் சென்றுக் காருக்குள் நுழைந்த அந்த குழந்தை கண்ணிமைக்கும் நேரத்தில் காரின் கதவை அடைத்துக் கொண்டது.
மீண்டும் திறக்கச் சொல்லியும் அந்த குழந்தையால் காரை திறக்க முடியவில்லை. ரிமோட்டில் உள்ள அன்லாக் பொத்தானை அழுத்தச் சொன்னபோது, அந்த குழந்தை தவறுதலாக லாக் பட்டனை தொடர்ச்சியாக அழுத்தி இருக்கின்றது. இதனால், அந்த காரில் இருந்து எச்சரிக்கை ஒலி எழும்பி இருக்கின்றது.

இது மேலும் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. இதனால், அக்கம் பக்கத்தில் இருந்தவர்களும் சம்பவத்தில் சூழ்ந்திருக்கின்றனர். என்ன செய்வது என்று புரியாமல் நின்றுக் கொண்டிருந்த அந்தசூழலிலேயே கார் கண்ணாடியை உடைத்துவிடலாம் என்கிற ஐடியா அவருக்கு வந்திருக்கின்றது. அந்த நேரத்தில் அதை உடைப்பதற்கான எந்த பொருளும் கைகளில் இல்லை என கூறப்படுகின்றது.
இந்த நிலையிலேயே அருகில் இருக்கும் பஞ்சர் ஷாப் அவருடைய நினைவிற்கு வந்திருக்கின்றது. அங்கு உடனடியாக சென்றாக சுந்தர் தீப், ஓர் சிறிய சுத்தியலை வாங்கி வந்து ஜன்னல் கண்ணாடியை உடைத்திருக்கின்றார். ஆனால், அது உடனே உடையவில்லை. சில முயற்சிகளுக்கு பின்னரே அது உடைந்திருக்கின்றது.
இந்த நிலையிலேயே காரின் கதவுகள் மேனுவலாக திறக்கப்பட்டு குழந்தை மீட்டெடுக்கப்பட்டு இருக்கின்றது. இன்றைய நவீன கால கார்களில் பயன்படுத்தப்படும் ஜன்னல் கண்ணாடிகள் அதிக உறுதியானவை அவற்றை வெளிப்புறத்தில் இருந்து உடைப்பது என்பது அவ்வளவு சுலபமான செயல் அல்ல. அதேவேளையில், சந்தையில் இதுபோன்ற கண்ணாடிகளை உடைப்பதற்கென தனித்துவமான கருவிகள் விற்பனைக்குக் கிடைக்கின்றன.
இந்த கருவி சுந்தர்தீப் இடத்தில் இருந்திருக்கின்றன. ஆனால், அது காருக்குள் இருக்கும் குளோவ் பாக்ஸிற்குள் இருந்திருக்கின்றது. எனவேதான் அது இருந்தும் பயனில்லாமல் போயிருக்கின்றது. இத்தகைய கருவியை காருக்குள் ஒன்றும், வீட்டுக்குள் ஒன்றும் வைத்திருக்க வேண்டும் என்பதையே இந்த சம்பவம் நமக்கு உணர்த்துகின்றது.
அதேவேளையில், சிறுவர்கள் இடத்தில் தேவையின்றி கார் போன்றவற்றின் சாவியையும் கொடுக்கக் கூடாது என்பதையும் இந்த சம்பவம் நமக்கு தெரியப்படுத்துகின்றது. அதேநேரத்தில், இந்தியா மற்றும் உலக நாடுகளில் இதுபோன்று சம்பவங்கள் தொடர்கதையாகிக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக, ஆன் செய்யப்படாமல் காருக்குள் இவ்வாறு நேரிட்டால் மிகப் பெரிய ஆபத்தான சூழல் ஏற்பட்டு விடும்.
குறிப்பாக, ஏசி ஆஃப் செய்யப்பட்டும், ஜன்னல்கள் அடைக்கப்பட்ட நிலையிலும், உச்சி வெயிலில் ஓர் கார் நிறுத்தப்பட்டு அதற்குள் ஓர் ஜீவன் சிக்கும் எனில் அது இறக்கும் நிலைக்கு தள்ளப்படும். அந்த நேரத்தில் கார் ஓர் மைக்ரோவனைப் போல் செயல்படும். குறிப்பாக, ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு மூச்சுத் திணறல் என மிக கடுமையான கொடுமைகளுக்கு ஆளாக நேரிடும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த சூழல் வெறும் பத்தே நிமிடங்களில் உயிரைப் பறிக்க செய்யும் அளவிற்கு மிக மோசமானது. எனவேதான், ஒரு போதும் குழந்தை அல்லது செல்லப் பிராணிகளை காருக்குள் வேறு ஆட்கள் இல்லாத நிலையில் தனியாக விட்டு செல்ல வேண்டாம் என நாங்கள் அறிவுறுத்துகின்றோம்.


Click it and Unblock the Notifications









