காரை பார்த்தாலே புக் செய்ய தோணுது!! இந்த பிரெஞ்சு-ஸ்டைல் காரை எப்போது முன்பதிவு செய்யலாம்? நேரம் அறிவிப்பு!
சிட்ரோன் சி3 ஏர்கிராஸ் எஸ்யூவி (Citroen C3 Aircross SUV) காருக்கான முன்பதிவுகளும், டெலிவிரிகளும் இந்தியாவில் துவங்கப்பட உள்ள நேரம் அறிவிக்கப்பட்டு உள்ளது. அவற்றையும், பண்டிகை காலத்தை முன்னிட்டு வரவிருக்கும் புதிய சிட்ரோன் சி3 ஏர்கிராஸ் காரை பற்றியும் இனி விரிவாக பார்க்கலாம்.
பிரெஞ்சு கார் நிறுவனமான சிட்ரோன் இந்திய சந்தைக்கு புதியது ஆகும். கடந்த 2021ஆம் ஆண்டில் முதல் காராக சி5 ஏர்கிராஸை அறிமுகப்படுத்திய சிட்ரோன் நிறுவனம் அதன் பின் மக்கள் பலரால் வாங்க இயலக்கூடிய விலையில் சி3 ஹேட்ச்பேக் காரை கடந்த 2022இல் இந்தியாவில் அறிமுகம் செய்தது. அதன்பின் சிட்ரோன் சி3 காரின் எலக்ட்ரிக் வெர்சனும் இசி3 என்கிற பெயரில் விற்பனை வந்தது.

இந்த நிலையில், சி5 ஏர்கிராஸை போன்று சி3 மாடலிலும் ஏர்கிராஸ் வெர்சனை விற்பனைக்கு கொண்டுவரும் முயற்சியில் சிட்ரோன் இறங்கியுள்ளது. வரவிருக்கும் விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை மற்றும் தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களை டார்கெட் செய்து இந்தியாவில் விற்பனைக்கு வரும் சி3 ஏர்கிராஸ் காரின் முன்பதிவுகள் மற்றும் டெலிவிரிகள் எப்போது துவங்கும் என்பது குறித்த விபரங்களை சிட்ரோன் அறிவித்துள்ளது.
அதன்படி, சிட்ரோன் சி3 ஏர்கிராஸ் கார்களின் முன்பதிவுகள் வருகிற செப்டம்பர் மாதத்தில் இருந்து துவங்கப்பட உள்ளது. அதனை தொடர்ந்து, அக்டோபர் மாதத்தில் இருந்து முன்பதிவு செய்தவர்களுக்கு கார் டெலிவிரி கொடுக்கும் பணிகள் ஆரம்பிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் சிட்ரோனின் 4வது தயாரிப்பாக களமிறங்கும் சி3 ஏர்கிராஸ் முதன்முதலாக நம் நாட்டில் கடந்த ஏப்ரல் மாதத்தில் வெளியீடு செய்யப்பட்டது.

புதிய சிட்ரோன் ஏர்கிராஸின் முக்கிய சிறப்பம்சம் அதன் 5+2 இருக்கை செட்-அப் ஆகும். சிட்ரோன் சி3 போன்ற அளவில் சிறியதான ஹேட்ச்பேக் கார்களில் 5 இருக்கைகள் வழங்கப்படுவது வழக்கம். ஆனால் சி3 ஏர்கிராஸ் காரின் பின்பக்க பூட் ஸ்பேஸ் சுமார் 500-லிட்டர் கொள்ளளவிற்கும் அதிகமாக உள்ளதால் அங்கேயும் இரு இருக்கைகளை சிட்ரோன் வழங்கியுள்ளது. இந்த இருக்கைகளில் அமரும் பயணிகள் ஒருவரையொருவர் நேரெதிராக பார்த்தப்படி பயணி செய்வர்.
இந்த 2 இருக்கைகள் தேவையில்லை என்றால் அங்கிருந்து நீக்கிக் கொள்ளலாம். இந்த 2 இருக்கைகள் வேண்டவே வேண்டாம் என 5 இருக்கைகளுடன் சி3 ஏர்கிராஸை வாங்க விரும்புவோர்க்கும் அதே பெரிய அளவிலான பூட் ஸ்பேஸ் பகுதி கிடைக்கும். இதன் காரணமாகவே, வழக்கமான சி3 காரை ஹேட்ச்பேக் என கூறும் சிட்ரோன் நிறுவனம் சி3 ஏர்கிராஸை எஸ்யூவி என அழைக்கிறது. இதனால், எஸ்யூவி கார்களுக்கே உண்டான சவுகரியம், மதிப்பு மற்றும் கண்ட்ரோல் இந்த காரிலும் கிடைக்கும்.

குறிப்பாக, காருக்குள் இடவசதி ஆனது இந்தியாவில் எந்தவொரு காம்பெக்ட் எஸ்யூவி காரிலும் இந்த அளவிற்கு இல்லை என சொல்லலாம். கேபினுக்குள் 10.2-இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் திரை, 7 இன்ச்சில் ஓட்டுனருக்கான திரை, மேற்கூரையில் ஏசி துளைகள் உள்பட ஏகப்பட்ட அம்சங்கள் வழங்கப்படுகின்றன. காரின் முன்பக்கத்தில், பிளவுப்பட்ட வடிவில் ஹெட்லேம்ப் செட்-அப் மற்றும் ஃபாக்ஸ் ஸ்கிட் தட்டுகள் இடம்பெறுகின்றன.
சி3 ஏர்கிராஸில் 17-இன்ச் அலாய் சக்கரங்கள் பொருத்தப்படுகின்றன. பொருட்களை கட்டி எடுத்து செல்ல உதவியாக மேற்கூரையில் கம்பிகளுடன் விற்கப்படும் இந்த காருக்கு பல்வேறு நிறங்களில் பெயிண்ட் தேர்வுகள் வழங்கப்பட உள்ளன. இதில் சில ட்யூயல்-டோன் பெயிண்ட் தேர்வுகளும் அடங்கும். அதேபோல், காருக்கு உள்ளேயும் டேஸ்போர்டை 2 விதமான கலர் ஆப்ஷன்களில் பெறலாம்.

சி3 ஹேட்ச்பேக் காரை போல், சி3 ஏர்கிராஸ் எஸ்யூவி காரும் ஒரேயொரு 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் உடன் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளது. அதிகப்பட்சமாக 108 பிஎச்பி மற்றும் 190 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த டர்போ பெட்ரோல் என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: சி5 ஏர்கிராஸ் மூலம் இந்தியாவில் களமிறங்கினாலும் சிட்ரோனின் இந்திய பயணம் சி3 ஹேட்ச்பேக் காரின் அறிமுகத்திற்கு பின்பே துவங்கியது என சொல்ல வேண்டும். ஏனெனில், நம் நாட்டு மக்கள் பெரும்பாலானோர்க்கு ஏற்ற விலையில் சி3 ஹேட்ச்பேக் விற்கப்படுகிறது. தற்போது, அத்தகைய மாடலை எஸ்யூவியாக கொண்டுவர சிட்ரோன் திட்டமிட்டுள்ளது. இந்த காரும் இந்திய சந்தையில் விற்பனையில் ஜொலிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications









