இந்தியர்களை கவருமா இந்த பிரெஞ்சு ஸ்டைல் கார்... புதிய சிட்ரோன் சி3 -க்கு பதிலா வேறெந்த கார்களை வாங்கலாம்?
சிட்ரோன் சி3 ஹேட்ச்பேக் காரின் புதிய ஏர்கிராஸ் வெர்சன் சமீபத்தில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. எஸ்யூவி உடலமைப்பை கொண்ட காராக களமிறக்கப்பட்டு இருக்கும் சி3 ஏர்கிராஸுக்கு இந்திய சந்தையில் பலத்த போட்டி காத்திருக்கிறது. அவை என்னென்ன என்பதையும் பற்றியும், அவற்றின் மத்தியில் சி3 ஏர்கிராஸ் சாதிக்குமா? என்பதை பற்றியும் இனி விரிவாக பார்க்கலாம்.
இந்தியாவில் விற்பனையில் சி3 ஏர்கிராஸ் (C3 Aircross) காருக்கு ஹூண்டாய் க்ரெட்டா, மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா, கியா செல்டோஸ், டொயோட்டா ஹைரைடர், ஸ்கோடா குஷாக், ஃபோக்ஸ்வேகன் டைகுன் மற்றும் எம்ஜி அஸ்டர் உள்ளிட்டவை முக்கிய போட்டி மாடல்களாக விளங்குகின்றன. சி3 ஏர்கிராஸ் காரை பற்றிய முழுமையான விபரங்களை இன்னும் சிட்ரோன் நிறுவனம் வெளியிடவில்லை.

நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி பார்த்தோமேயானால், சி3 ஏர்கிராஸ் சரியாக ஹூண்டாய் க்ரெட்டாவின் நீளத்தில் இருக்கும். ஏனெனில் இரண்டின் நீளமும் ஒன்றே (4300மிமீ). கிராண்ட் விட்டாரா, ஹைரைடர், அஸ்டர், செல்டோஸ் உள்ளிட்டவை கூடுதல் நீளமானவை. குஷாக் & டைகுன் கார்கள் நீளம் குறைவானவை. அதேபோன்று அகலத்திலும் மேற்கூறப்பட்ட போட்டி கார்களின் அகலத்தில் தான் சி3 ஏர்கிராஸ் உள்ளது. ஆனால் குஷாக் & டைகுன் கார்கள் அகலம் குறைவானவை.
சி3 ஏர்கிராஸின் உயரம் 1654மிமீ. கிராண்ட் விட்டாரா, ஹைரைடர், அஸ்டர் கார்களின் நீளமும் ஏறக்குறைய இதே அளவாகும். ஆனால் க்ரெட்டா, செல்டோஸ், குஷாக் மற்றும் ஃபோக்ஸ்வேகன் கார்கள் சி3 ஏர்கிராஸை விட உயரம் குறைவானவை. பின்பக்கத்தில் பூட் ஸ்பேஸ் ஆனது இந்த புதிய சிட்ரோன் காரில் சுமார் 511 லிட்டர்களாக வழங்கப்பட்டுள்ளது. இந்த அளவிற்கான இடவசதியை பின்பக்கத்தில் மேற்கூறப்பட்ட மற்ற எந்த போட்டி காரும் கொண்டிருக்கவில்லை என்பதை இங்கு பதிவு செய்தே ஆக வேண்டும்.

சக்கரங்களின் அளவு அனைத்து கார்களிலும் ஒன்றே, 17 இன்ச். பாதுகாப்பிற்கு முக்கியமான ஏபிஎஸ், இபிடி உள்ளிட்டவை சி3 ஏர்கிராஸ் உள்பட மேற்கூறப்பட்ட அனைத்து கார்களிலும் வழங்கப்பட்டுள்ளன. ஏர்பேக்குகள் மற்ற கார்களில் 6 கொடுக்கப்படுகின்றன. ஆனால் சி3 ஏர்கிராஸில் 2 மட்டுமே வழங்குவதாக சிட்ரோன் தெரிவித்துள்ளது. அதேபோன்று மற்ற எஸ்யூவி கார்களில் வழங்கப்படும் இணைய வசதி, வாய்ஸ் கமெண்ட், சன்ரூஃப் உள்ளிட்டவையும் சி3 ஏர்கிராஸ் காரில் வழங்கப்படவில்லை என்றே நமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.
டச் ஸ்க்ரீன் ஆனது புதிய சி3 ஏர்கிராஸில் 10 இன்ச்சில் வழங்கப்பட்டுள்ளது. அஸ்டர், குஷாக், டைகுன் கார்களிலும் இதே அளவில்தான் வழங்கப்படுகின்றன. க்ரெட்டா & செல்டோஸ் கார்களில் சற்று பெரியதாக 10.25 இன்ச்களில் கொடுக்கப்படுகிறது. ஆனால் மாருதி - டொயோட்டா கூட்டணியில் உருவாக்கப்பட்ட கிராண்ட் விட்டாரா, ஹைரைடர் கார்களில் 9 இன்ச்களில் மட்டுமே வழங்கப்படுகிறது. 360-கோண கேமிரா ஆனது க்ரெட்டா, குஷாக் & டைகுன் கார்கள் உள்பட புதிய சி3 ஏர்கிராஸிலும் இடம்பெறவில்லை.

என்ஜினை பொறுத்தவரையில், புதிய சி3 ஏர்கிராஸில் 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் & 1.2 லிட்டர் டர்போ என 2 விதமான பெட்ரோல் என்ஜின்கள் தேர்வுகளாக வழங்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த என்ஜின்களுடன் மேனுவல் கியர்பாக்ஸை மட்டுமே பெற முடியும். ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு இல்லை. ஆனால் மற்ற போட்டி எஸ்யூவி கார்களில் ஐஎம்டி, டிஎஸ்ஜி என மாடர்ன் கியர்பாக்ஸ் தேர்வுகள் கூட கிடைக்கின்றன. ஹைரைடர் & கிராண்ட் விட்டாரா கார்கள் ஹைப்ரீட் தேர்விலும் கிடைக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: சி3 ஹேட்ச்பேக் காரை எஸ்யூவி உடலமைப்பில் கொண்டுவர வேண்டும் என நினைத்து சிட்ரோன் சி3 ஏர்கிராஸை களமிறக்கி உள்ளது. ஆனால் தொழிற்நுட்ப அம்சங்களை வழங்குவதில் இந்த நிறுவனம் கோட்டை விட்டுள்ளதுபோல் தான் தெரிகிறது. அதேபோன்று வெறும் மேனுவல் தேர்வில் மட்டுமே கார் கிடைக்கும் என்பது எந்த அளவிற்கு வாடிக்கையாளர்களை ஈர்க்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். காரின் விலையை குறைவாக நிர்ணயிக்க இந்த யுக்திகளை சிட்ரோன் கையாண்டு இருக்கலாம்.


Click it and Unblock the Notifications









