10 மணிநேரம் கூட விற்பனையில் இல்லை... ஐரோப்பியர்கள் போட்டி போட்டு வாங்கும் எலக்ட்ரிக் கார்!! விலை தான் மேட்டரு!
சிட்ரோன் உலகளவில் பிரபலமான பிரெஞ்சு கார் பிராண்ட் என்பது நமக்கு தெரிந்ததே. அந்த வகையில் சிட்ரோனில் இருந்து ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தப்பட்ட மைக்ரோ எஸ்யூவி காரான மை அமி பஹ்கி (My Ami Buggy) முன்பதிவு துவங்கப்பட்ட முதல் 10 மணிநேரங்களிலேயே முழுவதுமாக விற்று தீர்ந்துள்ளது. அப்படி இந்த புதிய சிட்ரோன் காரில் என்ன உள்ளது என்பதை இனி இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.
விலை குறைவான கார்களுக்கு எந்தவொரு நாட்டிலும் நல்ல வரவேற்பு கிடைக்கும். ஏனெனில் எல்லா நாடுகளிலும் மிடில்-கிளாஸ் வர்க்கத்தினர் இருக்கத்தான் செய்கின்றனர். இதனை நன்கு புரிந்து வைத்துள்ள பிரெஞ்சு கார் நிறுவனமான சிட்ரோன் அதன் பிராண்டில் இருந்து புதிய மை அமி பஹ்கி என்ற மைக்ரோ எஸ்யூவி காருக்கான முன்பதிவுகளை குறிப்பிட்ட நாட்டு சந்தைகளில் துவங்கியது.

பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், பெல்ஜியம், போர்ச்சுகல், இங்கிலாந்து, லக்ஸம்பர்க் மற்றும் க்ரீஸ் என்பவை அந்த குறிப்பிட்ட நாடுகள் ஆகும். ஆனால் இப்போது இந்த நாடுகளுக்கு சென்று சிட்ரோன் மை அமி பஹ்கி எலக்ட்ரிக் காரை வாங்க நினைத்தாலும் முடியாது. ஏனெனில் இந்த எலக்ட்ரிக் காருக்கு நிர்ணயிக்கப்பட்ட புக்கிங்ஸ் அனைத்தும் வெறும் 10 மணிநேரங்களுக்கு உள்ளாக நிறைவடைந்துள்ளன.
அதாவது, இத்தனை மை அமி பஹ்கி கார்களுக்கான முன்பதிவுகளை மட்டும் ஏற்போம் என்கிற திட்டத்தில் இந்த எலக்ட்ரிக் காருக்கான முன்பதிவுகளை சிட்ரோன் துவங்கியது. நிர்ணயிக்கப்பட்ட அத்தனை மை அமி பஹ்கி கார்களும் 10 மணிநேரத்திற்கு உள்ளாக புக் ஆகியுள்ளன. சிட்ரோன் மை அமி பஹ்கி எலக்ட்ரிக் காருக்கு முன்பதிவுகள் துவங்கப்படுவது இது ஒன்றும் முதல்முறையல்ல. ஏற்கனவே ஒருமுறை துவங்கப்பட்டது.

ஆனால் அப்போது தாய் நாடான பிரான்ஸ், பெல்ஜியம் மற்றும் ஸ்பெயினில் மட்டுமே முன்பதிவுகளை சிட்ரோன் ஏற்றுக்கொண்டது. ஆனால் இப்போது இந்த 3 நாடுகள் உள்பட கூடுதலாக 5 நாடுகள் என மொத்தம் 8 நாடுகளில் சிட்ரோன் மை அமி பஹ்கி மைக்ரோ எலக்ட்ரிக் காருக்கான முன்பதிவுகள் துவங்கப்பட்டுள்ளன. 2வது முறையும் இந்த எலக்ட்ரிக் காரை மக்கள் போட்டி போட்டு புக் செய்துள்ளதால், அடுத்த முறை மேலும் சில நாடுகளிலும் இந்த காருக்கான புக்கிங்கை துவங்க சிட்ரோன் திட்டமிட்டுள்ளது.
இதன்படி, அடுத்த முறை துருக்கி மற்றும் மொராக்கோ நாடுகளிலும் மை அமி பஹ்கி மைக்ரோ எலக்ட்ரிக் காருக்கான முன்பதிவுகள் துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு முறை புக்கிங் துவங்கும்போதும், ஆயிரம் கார்கள் கூட கிடையாது, சில நூறு மை அமி பஹ்கி கார்களுக்கான முன்பதிவுகளை மட்டுமே சிட்ரோன் ஏற்கிறது. இதனால்தான் முன்பதிவுகள் துவங்கப்பட்ட சில மணிநேரங்களில் காருக்கான புக்கிங்ஸ் அனைத்தும் நிறைவடைந்து விடுகிறது போல.

மை அமி பஹ்கி எலக்ட்ரிக் காருக்கு கிடைத்துவரும் சிறப்பான வரவேற்பிற்கு முக்கிய காரணம் இதன் விலை ஆகும். ஐரோப்பிய நாடுகளில் 7,790 யூரோக்களில் இருந்து 10,450 யூரோக்களில் இந்த சிட்ரோன் எலக்ட்ரிக் கார் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு வெறும் ரூ.7 இலட்சம் - ரூ.9.30 லட்சம் மட்டுமே. மைக்ரோ கார் என்பதால் உட்பக்கத்தில் மிகவும் குறைவான எண்ணிக்கையில் மட்டுமே இருக்கைகளை கொண்ட இந்த எலக்ட்ரிக் காரில் 5.4kWh பேட்டரி தொகுப்பு பொருத்தப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: உலகில் பல்வேறு மைக்ரோ எலக்ட்ரிக் கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. சீனாவிற்கு சென்று பார்த்தால், இவ்வாறான அளவில் சிறிய கார்களை நூற்றுக்கணக்கில் பார்க்கலாம். ஆனால் இந்த குறிப்பிட்ட சிட்ரோன் மாடலுக்கு இந்த அளவிற்கு நல்ல வரவேற்பு கிடைப்பதற்கு முக்கிய காரணம், ஏற்கனவே கூறியதுபோல் விலை மற்றும் கவர்ச்சிக்கரமான தோற்றம். மைக்ரோ கார்களை ஸ்டைலிஷாக வடிவமைப்பது கடினம். ஆனால் இந்த வேலையை சிட்ரோன் சிறப்பாக முடித்துள்ளது.


Click it and Unblock the Notifications









