நிறைய கார் நிறுவனங்களுக்கு சென்னை தான் பக்கம் போல... சிட்ரோன் கார்களும் ஏற்றுமதியை துவங்கின!!
தமிழ்நாட்டில் திருவள்ளூர் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் சிட்ரோன் சி3 கார்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பணிகள் அதிகாரப்பூர்வமாக துவங்கியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களையும், சிட்ரோன் சி3 காரை பற்றியும் இனி முழுமையாக பார்க்கலாம்.
பிரெஞ்சு நாட்டை சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான சிட்ரோன் இந்திய சந்தையில் நுழைவதற்கு பல வருடங்களாக முயற்சி செய்து, ஒருவழியாக கடந்த 2021ஆம் ஆண்டில் களம் புகுந்தது. இந்த பிரெஞ்சு கார் பிராண்டில் இருந்து முதலாவதாக அறிமுகப்படுத்தப்பட்ட கார் சி5 ஏர்கிராஸ். ரூ.30 - 35 லட்சத்தில் சற்று பிரீமியம் தர காராக கொண்டுவரப்பட்டதினால் சிட்ரோன் சி5 ஏர்கிராஸை பெரியதாக யாரும் கண்டுக்கொள்ளவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

ஆனால் அதன்பின் இந்திய சந்தைக்கு கொண்டுவரப்பட்ட சி3 ஹேட்ச்பேக் கார் சிட்ரோன் பிராண்டை நன்கு பிரபலப்படுத்தி உள்ளது. இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால், சி5 ஏர்கிராஸை ஓர் சம்பிரதாயத்திற்கு அறிமுகப்படுத்தியதே தவிர்த்து, சிட்ரோனின் முதல் மாஸ் மார்கெட் தயாரிப்பு சி3 தான். இந்திய சந்தையில் நுழைந்தவுடன் சிட்ரோன் செய்த முதல் காரியம், தமிழ்நாட்டில் திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு தொழிற்சாலையை வாங்கியது ஆகும்.
இந்த தொழிற்சாலையில் மேற்கூறப்பட்ட இரு சிட்ரோன் கார்களும் தயாரிக்கப்படுகின்றன. இந்த நிலையில் திருவள்ளூர் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் சிட்ரோன் சி3 கார்கள் முதல்முறையாக இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து சென்னை அருகே என்பதால், தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்ட சி3 கார்கள் சென்னை காமராஜர் துறைமுகம் வழியாக வெளிநாடுகளுக்கு கப்பலில் அனுப்பப்பட்டுள்ளன.

இந்த வகையில், சென்னைக்கு அருகே உற்பத்தி செய்யப்படும் சி3 கார்கள் மற்ற ஆசிய நாடுகள் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் விற்பனை செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. சிட்ரோன் சி3 காரில் 1.2 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் மற்றும் 1.2 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என இரு விதமான பெட்ரோல் என்ஜின்கள் தேர்வுகளாக வழங்கப்படுகின்றன. இதில் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 81 பிஎச்பி மற்றும் 115 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.
அதுவே டர்போ என்ஜின் மூலமாக 109 பிஎச்பி மற்றும் 190 என்எம் டார்க் திறன் வரையிலான ஆற்றலை பெற முடியும். இந்த இரு பெட்ரோல் என்ஜின்களுடனும் மேனுவல் கியர்பாக்ஸ் மட்டுமே தேர்வாக வழங்கப்படுகிறது. மற்றப்படி, ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு எதுவும் வழங்கப்படுவதில்லை. அறிமுகம் செய்யப்பட்ட சமயத்தில் சி3 காரின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலையாக ரூ.5.70 லட்சத்தை சிட்ரோன் நிர்ணயித்தது.

இந்த குறைந்த விலையே வாடிக்கையாளர்கள் பலரை வெகுவாக கவர்ந்தது. தற்போதும் சிட்ரோன் சி3 காரின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை பெரியதாக அதிகமில்லை, ரூ.6.16 லட்சம் தான். அதிகப்பட்சமாக ரூ.8.25 லட்சம் வரையில் விலையை இந்த ஹேட்ச்பேக் கார் கொண்டுள்ளது. சி3 மாடலை விரைவில் எலக்ட்ரிக் வெர்சனிலும் விற்பனை செய்யும் திட்டத்தில் சிட்ரோன் உள்ளது. இசி3 என்ற பெயரில் இந்த எலக்ட்ரிக் கார் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து
இந்தியாவின் முக்கிய துறைமுகமான சென்னை காமராஜர் துறைமுகத்தில் இருந்து சிட்ரோன் மட்டுமின்றி, பல்வேறு உலகின் முன்னணி கார் பிராண்ட்களும் தங்களது கார்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி வருகின்றன. சமீபத்தில் கூட, இந்தியாவில் உற்பத்தி செய்து அதிகளவில் கார்களை ஏற்றுமதி செய்வதாக நிஸான் நிறுவனத்தை சென்னை சுங்கவரி துறை பாராட்டி விருது ஒன்றை அளித்தது நினைவுக்கூரத்தக்கது.


Click it and Unblock the Notifications









