எல்லாரும் கிரெட்டா காரை தான் தேடி போறாங்க!! ஹூண்டாய் செம்ம குஷியில் இருக்கும்!
இந்தியாவில் எஸ்யூவி கார்களுக்கு அதிக அளவில் தேவை உள்ளது. இதனை பயன்படுத்திக் கொண்டு, அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும் காம்பெக்ட் எஸ்யூவி கார்களை பற்றிதான் இந்த செய்தியில் பார்க்கவுள்ளோம். இந்தியாவில் தற்சமயம் மொத்தம் 7 விதமான காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
அவற்றுள் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படுபவையாக ஹூண்டாய் மோட்டார்ஸின் கிரெட்டா முதலிடத்தில் உள்ளது. கடந்த 2023 ஜுலை மாதத்தில் மொத்தம் 14,062 கிரெட்டா கார்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன. 2022 ஜூலை மாதத்தில் 12,625 கிரெட்டா கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் கிரெட்டா கார்களின் விற்பனை ஆனது 11.38% அதிகரித்துள்ளது.

ஆனால், கடந்த 2023 ஜூன் மாதத்தில் சற்று அதிகமாக 14,447 கிரெட்டா கார்களை ஹூண்டாய் நிறுவனம் விற்பனை செய்திருந்தது. இதன்படி, கிரெட்டா கார்களின் மாதம்-மாதம் விற்பனை 2.66% குறைந்துள்ளது. கிரெட்டா காரை கடைசியாக 2020ஆம் ஆண்டில் ஹூண்டாய் நிறுவனம் பெரிய அளவில் அப்டேட் செய்தது. அதன்பின், கிரெட்டா கார்களின் விற்பனை டாப் கியரில் செல்ல ஆரம்பித்தது. ஆனால், கடந்த 3 வருடங்களாக பெரியதாக எந்த அப்டேட்டும் கிரெட்டாவுக்கு வழங்கப்படாமல் உள்ளது.
ஆனால் இந்த நிலை மிக விரைவில் மாறவுள்ளது. ஏனெனில் கிரெட்டாவின் ஃபேஸ்லிஃப்ட் காரை அறிமுகம் செய்யும் பணிகளில் ஹூண்டாய் நிறுவனம் ஈடுப்பட்டு வருகிறது. தற்சமயம் சோதனை ஓட்டங்களில் உட்படுத்தப்பட்டு வரும் கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட் கார் அடுத்த 2024 ஜனவரி மாதத்தில் சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கிரெட்டாவுக்கு அடுத்து இந்தியாவில் அதிக பேரால் வாங்கப்படும் காராக கியா செல்டோஸ் விளங்குகிறது.

கடந்த ஜூலை மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட செல்டோஸ் கார்களின் எண்ணிக்கை 9,740 ஆகும். ஆனால் இதற்கு முந்தைய ஜூன் மாதத்தில் வெறும் 3,578 செல்டோஸ் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. சமீபத்தில்தான் செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் பின்னரே செல்டோஸின் விற்பனை மீண்டும் சூடுப்பிடிக்க ஆரம்பித்துள்ளது.
வெறும் 3,578 செல்டோஸ் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்ட கடந்த ஜூன் மாதத்தில், கிரெட்டாவுக்கு அடுத்து 2வது இடத்தை மாருதி சுஸுகியின் கிராண்ட் விட்டாரா பிடித்திருந்தது. அந்த மாதத்தில் சுமார் 10,486 கிராண்ட் விட்டாரா கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. ஆனால், செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் காரின் அறிமுகத்தால், கிராண்ட் விட்டாரா கார்களின் விற்பனை சற்று குறைந்துள்ளது. கடந்த ஜூலை மாதத்தில் மொத்தம் 9,079 கிராண்ட் விட்டாரா கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன .

கிராண்ட் விட்டாரா காம்பெக்ட் எஸ்யூவி காரை கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மாருதி சுஸுகி நிறுவனம் சந்தையில் அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது. இவை மூன்றும் தான் தற்போதைக்கு அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும் காம்பெக்ட் எஸ்யூவி கார்களாகும். இவற்றிற்கு அடுத்து டொயோட்டாவின் ஹைரைடர் கார்கள் கடந்த ஜூலை மாதத்தில் 3,387 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன.
ஹைரைடர் கார்களின் டெலிவிரிகளும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்துதான் துவங்கின. கடந்த 2023 ஜூன் மாதத்தில் 2,821 ஹைரைடர் கார்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன. ஹைரைடருக்கு அடுத்து ஸ்கோடா ஆட்டோவின் குஷாக் இந்த வரிசையில் 5வது இடத்தில் உள்ளது. கடந்த ஜூலையில் விற்பனை செய்யப்பட்ட குஷாக் கார்களின் எண்ணிக்கை 2,394 ஆகும். கடைசி 6வது மற்றும் 7வது இடங்களில் ஃபோக்ஸ்வேகன் டைகுன் மற்றும் எம்ஜி அஸ்டர் கார்கள் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: கடந்த ஜூலை மாதத்தில் மொத்தம் 41,524 காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் 2022 ஜூலையில் வெறும் 26 ஆயிரம் கார்களும், 2023 ஜூன் மாதத்தில் 35,805 கார்களுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இதன்படி பார்க்கும்போது, மாதத்திற்கு மாதம் இந்தியாவில் காம்பெக்ட் எஸ்யூவி கார்களின் விற்பனை அதிகரிப்பதை அறிய முடிகிறது.


Click it and Unblock the Notifications









