கார் வாங்கும் போது வெயிட்டிங் பிரியடில் எவ்வளவு ஊழல் நடக்குது தெரியுமா? பலர் இதுல பணத்தை இழந்திருக்காங்க!
கார் வாங்குவது என்பது பலருக்கு வாழ்நாள் கனவு, தான் இதுவரை சேர்த்து வைத்த பணத்தை எல்லாம் வைத்து கார் வாங்குவார்கள். ஆனால் இன்று இந்திய கார் விற்பனை மார்கெட் இருக்கும் சூழ்நிலையில் பணம் இருந்தால் மட்டும் போதாது நீங்கள் விரும்பும் காரை வாங்கக் கொஞ்சம் பொறுமையும் அவசியம் தேவைப்படுகிறது.
ஒவ்வொரு கார் நிறுவனமும் தங்கள் கார்களுக்கான காத்திருப்பு காலங்களை வைத்திருக்கிறது. அதாவது இன்று போய் நீங்கள் கார் வாங்கவேண்டும் எனப் பணம் கொடுத்து புக் செய்தீர்கள் என்றால் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு தான் உங்கள் கைக்கு அந்த கார் கிடைக்கும்.

இந்த காத்திருப்பு காலம் சில வாரங்களிலிருந்து சில மாதங்கள், ஏன் வருடங்கள் வரை கூட ஆகிறது. இந்த காத்திருப்பு காலம் தான் வாடிக்கையாளர்களைச் சோதிக்கும் ஒரு பகுதி. ஆனால் வாடிக்கையாளர்கள் என்ன செய்ய முடியும்? காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை.
ஆனால் கார் தயாரிப்பு நிறுவனங்களும், அதை விற்பனை செய்யும் டீலர்களும் இந்த காத்திருப்பு காலத்தை வைத்து ஒரு பெரும் ஊழலையே சில இடங்களில் நடத்தி வருகின்றனர். இதன் மூலம் அவர்கள் தங்கள் லாபத்தை அதிகமாக்கிக் கொள்கின்றனர். இந்த சூழ்ச்சியில் வாடிக்கையாளர்கள் சிக்க வைக்கப்படுகின்றனர். அதைப் பற்றி இங்கு விரிவாகக் காணலாம் வாருங்கள்.
மார்கெட்டிங் கார்: ஒரு காருக்கான காத்திருப்பு காலம் என்பதையே ஒரு மார்கெட்டிங் யுக்தியாக கார் தயாரிப்பு நிறுவனங்கள் கையாளுகிறது. ஒரு காருக்கு 4 மாதங்கள், 6 மாதங்கள், 1 வருடம் காத்திருப்பு காலம் இருந்தால் அதை வைத்தே மக்கள் பலர் இந்த காரை வாங்க அதிகமாக புக்கிங் செய்துள்ளனர். இந்த காருக்கான டிமாண்ட் அதிகம்.
இதை வைத்து வாடிக்கையாளர்கள் மனதில் இந்த காருக்கான பெரிய பிராண்ட் இமேஜை உருவாக்கின்றனர். நீங்கள் இதைக் கேட்டதும் அதிகமாக மக்கள் வாங்குகின்றனர். அதனால் இது நல்ல காராக தான் இருக்கும் என நினைப்பீர்கள். இதனால் விளம்பரங்களில் கூட காத்திருப்பு காலத்தின் தகவல்களைக் கொட்டை எழுத்தில் பதிக்கின்றனர்.
டெலிவரி ஊழல்: இது முற்றிலும் டீலர்ஷிப் தரப்பில் நடக்கும் ஒரு ஊழல் ஒரு காரை ஒரு வாடிக்கையாளர் புக்கிங் செய்ய வருகிறார் என்றால் அவருக்கு காத்திருப்பு காலத்தை அறிவிக்க வேண்டியது டீலர்களின் கடமை. ஆனால் குறிப்பிட்ட வாடிக்கையாளர் காத்திருப்பு காலத்திற்கு முன்னரே காரை வாங்க விரும்பியது தெரிந்தால் சிலர் இந்த ஊழலில் ஈடுபடுகின்றனர்.
அவரிடம் பேசி இதற்கு முன்பு புக் செய்தவருக்கு வந்த காரை அவருக்குக் கொடுப்பதற்கு டீலர்கள் அவரிடம் எக்ஸ்ட்ரா பணம் வாங்கிக்கொள்கின்றனர். மஹிந்திரா எக்ஸ்யூவி 700, மஹிந்திரா தார் ஆகிய கார்களுக்கு உள்ள அதிக காத்திருப்பு காலங்கள் போல உள்ள கார்களுக்கு தான் இப்படியான ஊழல் அதிகம் நடக்கிறது.
டாப் வேரியன்ட்: ஒரு வாடிக்கையாளர் குறிப்பிட்ட காரின் லோ வேரியன்டை வாங்க நினைத்து டீலரை அணுகியிருப்பார். ஆனால் அந்த காரின் லோ வேரியன்டிற்கு காத்திருப்பு காலம் அதிகமாக இருப்பதால் டீலரே அவர்களிடம் பேசி டாப் வேரியன்டிற்கு குறைவான காத்திருப்பு காலம் என்பதைக் கூறி அவர்களை டாப் வேரியன்டை புக் செய்ய வைத்துவிடுவர். குறைந்த பட்ஜெட்டில் கார் வாங்க நினைத்தவருக்கு பட்ஜெட் எகிறிப் போய்விடும்.
சப்ளை செயின்: பொதுவாக கார்கள் தயாரிக்கப்படும் அளவை விட புக்கிங் செய்யப்படும் அளவு அதிகமாக இருந்தால் காத்திருப்பு காலம் வரும். முழு கொள்ளளவில் தயாரித்தால் பெரும்பாலான கார்களுக்கு காத்திருப்பு காலமே தேவையில்லை. ஆனால் முழு கொள்ளளவில் பெரும்பாலான கார்களின் தயாரிப்பு நடைபெறுவதில்லை.
இதற்குக் காரணம் சப்ளை செயின் பிரச்சனை தான். ஒரு காரை தயாரிக்க லட்சக்கணக்கான உதிரிப்பாகங்கள் தேவைப்படும். அதில் ஒன்று இல்லை என்றாலும் கார் தயாரித்து வெளியில் வராது. உதிரிப் பாகங்கள் அந்த ஆலையிலும் தயாரிக்கப்படலாம் அல்லது வெளியிலும் வாங்கப்படலாம் இதில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டாலும் காத்திருப்பு காலம் ஏற்படும்.
உதாரணமாக ரஷ்யா- உக்ரைன் போர் துவங்கிய பின்பு செமி கண்டெக்டர் தட்டுப்பாடு அதிகமாக ஏற்பட்டது. இதற்குக் காரணம் நியான் கேஸ் தட்டுப்பாடு தான், இந்த கேஸ் உக்ரைனில்தான் அதிகமாகத் தயாரிக்கப்படுகிறது. இப்படியான பிரச்சனைகள் காரணமாகவும் கார்களுக்கான காத்திருப்பு காலம் அதிகமாகும். இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications








