இனி தயக்கமே இல்லாம ரோட்டோர மெக்கானிக்கிடம் வண்டிய சர்வீஸ் பண்ணிக்கலாம்.. உத்தரவாதத்துக்கு பிரச்னையே வராது!
புதுசா வண்டி வாங்கின உடனேயே பலர் பல விதமான அறிவுரைகளை கூறுவார்கள். அந்தவகையில், "புது வண்டியை, உற்பத்தி நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் சென்டரில் மட்டும் கொஞ்சம் காலத்துக்கு சர்வீஸ் விட வேண்டும். அப்போதான் அந்த வண்டிக்கான வாரண்டியை கிளைம் செய்யும்போது எந்த சிக்கலும் வராது" என நம்மில் பலர் சொல்லி கேட்டிருப்பீர்கள்.
இதன் விளைவாக சின்ன சின்ன பிரச்னைக்குக்கூட அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் மையங்களை நாடி, பல நூறுகளை இழந்தவர்கள் பலர் இங்கு இருக்கின்றனர். சாதாரணமான சாலையோர ஒர்க்ஷாப்புகள் ரூ. 50ஐ மட்டுமே கட்டணமாக வசூலிக்கும் வேலைக்குகூட, அதிகாரப்பூர்வ சர்வீஸ் மையங்கள் ரூ. 300 - ரூ 500 என கட்டணத்தை தீட்டிவிடும்.

சில பிரீமியம் கார் சர்வீஸ் மையங்கள் ஆயிரக் கணக்கான ரூபாயை லேபர் கட்டணமாக வசூல் செய்துவிடும். வேலை பெருசாக இல்லை என்றாலும், அதிக அளவு கட்டணத்தை சிறிதும் தயக்கமின்றி அதிகாரப்பூர்வ சர்வீஸ் மையங்கள் வசூல் செய்துவிடுகின்றன. இந்த கட்டணத்தை பார்த்து புலம்பாதவர்களே இருக்க முடியாது.
இந்த நிலையிலேயே, மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை (Department of Consumer Affairs) சூப்பரான அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றது. 'பழுதுபார்க்கும் உரிமை' எனும் தளத்தை அது அறிமுகம் செய்திருக்கின்றது. இந்த தளம் நீங்கள் உங்கள் வாகனத்தை மூன்றாம் நபர் ஒர்க்ஷாப்பில் வைத்து சர்வீஸ் செய்திருந்தாலும், உத்தரவாதத்தை பெற்றுக் கொள்ள உதவும்.

ஏற்கனவே இந்த தளம் பயன்பாட்டிற்கு வந்துவிட்டது. முதல் கட்டமாக இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களே இணைக்கப்பட்டு உள்ளன. ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் நிறுவனங்களே இதில் தற்போது இணைந்திருக்கின்றன. விரைவில் மற்ற நிறுவனங்களும் இந்த தளத்தில் தங்களை இணைத்துக் கொள்ள இருக்கின்றன.
இதேபோல், நான்கு சக்கர வாகன உற்பத்தியாளர்களும் விரைவில் இதில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கான பணியில் நுகர்வோர் விவகாரத் துறை மிக தீவிரமாக களமிறங்கி இருக்கின்றது. இந்த தளத்தில், ரிப்பேரான வாகனத்தை சரியான முறையில் சரிசெய்துக் கொடுப்பதற்கான அனைத்து வழிக்காட்டுதல்களையும் அந்தந்த வாகன உற்பத்தி நிறுவனங்களும் வழங்கும்.
இதன்படி, எந்த ஒரு நபரும் தங்களின் வாகனத்தை சர்வீஸ் செய்து கொள்ள முடியும். இந்த திட்டத்தை வெறும் ஆட்டோமொபைல்ஸ் துறையோடு நுகர்வோர் விவகாரத் துறை நிறுத்திக் கொள்ளப் போவதில்லை. அது, விவசாய உபகரணங்கள், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் பிற பயன்பாட்டு சாதனங்களுக்கும் விரிவாக்கம் செய்துக் கொண்டிருக்கின்றது.
இந்த அறிவிப்பு வாகன உரிமையாளர் மற்றும் மின்சாதன பொருள் பயன்பாட்டாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. குறிப்பாக, செல்போன் பயன்பாட்டாளர்களை இந்த தகவல் குஷியில் ஆழ்த்தி உள்ளது. மத்திய நுகர்வோர் துறையின் இந்த நடவடிக்கையால் வரும் காலத்தில் கணிசமான அளவு பணத்தை மிச்சப்படுத்திக் கொள்ள முடியும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சில அதிகாரப்பூர்வ சர்வீஸ் மையங்கள் சர்வீஸே செய்யவில்லை என்றாலும், பிரச்னை போயிட்ட நூற்றுக் கணக்கான ரூபாய்க்கான பில்லை போட்டு கையில் கொடுத்திடுவாங்க. அதுவே, சாலையோர மெக்கானிக்கிடம் சென்றால், கொடுப்பதை வாங்கிக் கொண்டு, "பிரச்னை பெருசா ஒன்னும் இல்ல சார், வண்டிய பாத்து வச்சுக்கோங்கனு" பெருந்தன்மையோடு சொல்லுவாங்க.


Click it and Unblock the Notifications









