டீசல் கார்களை கட்டாயம் இப்படி ஓட்டக் கூடாது?.. கார் உற்பத்தியாளர்கள்கூட சொல்லி தராத விஷயம்!
இந்தியாவில் முன்பை விட இப்போது பல மடங்கு குறைவான எண்ணிக்கையிலேயே டீசல் வாகனங்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. இதற்கு மாசு உமிழ்வு விதிகள் மிகக் கடுமையானதாக மாற்றப்பட்டிருப்பதே மிக முக்கிய காரணமாகும். பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு எதிராக எடுக்கப்பட்டு வரும் அதிரடி நடவடிக்கைகளால் டீசல் வாகனங்களே பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, மாசு உமிழ்வைக் கட்டுப்படுத்தும் விதமாக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் சிலவற்றால் கடந்த காலங்களில் விற்பனையில் கொடிக் கட்டி பறந்துக் கொண்டிருந்த டீசல் கார்கள்கூட இப்போது விற்பனைக்குக் கிடைக்காத நிலையை எட்டி இருக்கின்றன. ஆம், சந்தையில் இருந்து பல டீசல் கார்கள் வெளியேற்றப்பட்டு இருக்கின்றன.

குறிப்பாக, சிறிய டீசல் எஞ்ஜின் கொண்ட தேர்வுகளே இதில் அதிகளவில் பாதிப்புக்குள்ளாகி உள்ளன. புதிய மாசு உமிழ்வு விதிகள் டீசல் கார்களை அதிக காஸ்ட்லியானதாக மாற்றிவிடும் என்கிற காரணத்தினாலும், அப்படி காஸ்ட்லியானதாக டீசல் வாகனங்கள் மாறும் எனில் அவற்றிற்கு வரவேற்புக் கிடைக்காது என்கிற காரணத்திலேயே நிறுவனங்கள் அவற்றை மனமே இல்லாமல் வெளியேற்றி இருக்கின்றன.
இவ்வாறு விற்பனையில் இருந்து மெல்ல மெல்ல டீசல் கார்கள் அகற்றப்பட்டு வருவதால் எதிர்காலத்தில் இவை விற்பனைக்குக் கிடைக்காத நிலை வந்துவிடுமோ என அஞ்சப்படுகின்றது. இத்தகைய டீசல் வாகனங்களை பத்திரமாக பாதுகாப்பது நம்முடைய கடமையாகும். ஆனால், நம்மில் பலர் இந்த டீசல் கார்களை எப்படி எல்லாம் ஓட்டக் கூடாதோ, அப்படிதான் பயன்படுத்தி வருகின்றார்.

இதன் காரணமாக, அந்த டீசல் வாகனம் விரைவில் பழுதுக்கும், அதிக மாசை வெளியேற்றும் வாகனமாகவும் மாறிவிடுகின்றன. இதனைத் தவிர்த்து நீண்ட நாட்கள் உழைக்க செய்ய அந்த டீசல் வாகனங்களை எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா? இதற்கான சில வழிக்காட்டுதல்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.
குறைவான எரிபொருளில் கட்டாயம் டீசல் வாகனங்களை இயக்கக் கூடாது: இந்த விதி அனைத்து வாகனங்களுக்கும் பொருந்தும். எரிபொருளில் ஓடும் கார்களில் அந்த எரிபொருளே லூப்ரிகேன்ட் ஆயிலாக ஃப்யூவல் பம்ப் மற்றும் எஞ்ஜினின் எரியூட்டும் பகுதியில் செயல்படுகின்றது. இந்த மாதிரியான சூழலில் நாம் முழுமையாக டிரை ஆகும் அளவிற்கு வாகனத்தை ஓட்டினால், ஆயிலுக்கு பதிலாக அந்த பகுதியில் காற்று நிரப்பப்பட்டு லூப்ரிகேஷன் தடுக்கப்படுகின்றது. இதன்விளைவாக அப்பாகம் அதிக தேய்மானத்திற்கு ஆளாக நேரிடுகின்றது.

இதன் விளைவு எஞ்ஜினின் முக்கிய பாகத்தின் ஆயுள் விரைவில் குறைய நேரிடும். இதுதவிர, முழுமையாக எரிபொருள் பயன்படுத்தப்படுவதனால் ஃப்யூவல் டேங்கின் அடிப்பகுதியில் தேங்கி இருக்கும் கசடுகள் (துரு, அழுக்கு போன்றவை) எஞ்ஜினுக்குள் நுழைய நேரிடுகின்றது. இவை எஞ்ஜினுக்குள் நுழைவது அதனை மேலும் பாதிப்படையச் செய்யலாம். எனவேதான் டீசல் அல்லது பெட்ரோல் என எந்த வாகனமாக இருந்தாலும் எரிபொருள் முழுமையாக டிரை ஆகும் அளவிற்கு வாகனத்தை ஓட்டக் கூடாது என கூறப்படுகின்றது.
எஞ்ஜினை ஆன் செய்த உடனேயே ஆக்சலரேஷனை அழுத்து அழுத்து என அழுத்தக் கூடாது: இந்த நடைமுறையும் டீசல், பெட்ரோல் என இரண்டிற்கும் பொருந்தும். ஒரு எஞ்ஜின் ஆன் செய்யப்பட்ட பிறகு அதை சில மணி நேரங்கள் சூடேற அனுமதிக்க வேண்டும். இதற்காக பொறுமையுடன் காத்திருத்தல் வேண்டும். இவ்வாறு செய்வதன் வாயிலாக எஞ்ஜினின் முக்கிய பாகங்கள் பொறுமையாக சூடேறி நீடித்து உழைக்கக் கூடியதாக மாறும்.
மேலும், சிறந்த செயல்திறனையும் நம்மால் பெற முடியும். இதுவே ஆன் செய்த உடனேயே ஆக்சலரேஷனை அழுத்தோ அழுத்தென அழுத்தினால் அது விரைவில் பாதிப்படையக் கூடும். இதையே கோல்டு ரெவ் (Cold Revv) செய்யும் முறை என்கின்றனர். இந்த நிலையில் உயவு குறைவாக இருக்கும், பிஸ்டன்கள், பிஸ்டன் ரிங், வால்வுகள் மற்றும் சிலிண்டர்கள் போன்றவற்றை இது பாதிப்படையச் செய்யும்.
உச்ச கியரில் இருக்கும்போது குறைந்த ஆர்பிஎம்மில் பயணிக்கக் கூடாது: எந்தெந்த கியருக்கு என்னென்ன வேகத்தில் செல்ல முடியுமோ அதை சரியாக கடைபிடித்தல் வேண்டும். உச்ச கியரில் இருக்கும்போது குறைவான ஆர்பிஎம்மில் வாகனத்தை இயக்கினால் எஞ்ஜினின் முக்கிய மிகக் கடுமையாக பாதிப்படையத் தொடங்கும். இந்த செயலை லஃக்கிங் (Lugging) என அழைக்கின்றனர். குறிப்பாக, கியரை இது மிகக் கடுமையாக சேதப்படுத்தும்.
டிபிஎஃப்ஐ சுத்தமாக வைத்துக் கொள்ளவும்: டிபிஎஃப் அல்லது டீசல் துகள் வடிகட்டி என்று இது அழைக்கப்படுகின்றது. பங்க்குகளில் நிரப்பப்படும் டீசல் 100 சதவீதம் சுத்தமானதாக இருக்கும் என்று கூறிவிட முடியாது. அப்படியே அது சுத்தமானதாக இருந்தாலும் நம்முடைய வாகனத்தின் ஃப்யூவல் டேங்க் சுத்தமானதாக இருக்கும் என உறுதியாக கூறிவிட முடியாது.
ஏதேனும் ஓர் வழியில் எரிபொருள் வாயிலாக அழுக்கு, தூசி போன்றவை ஃப்யூவல் பம்ப் மற்றும் எஞ்ஜினுக்குள் நுழைய நேரிடும். இதனைத் தவிர்க்கவே டீசல் துகள் வடிகட்டி உதவுகின்றது. இந்த அம்சம் செயலற்ற நிலையில் உங்கள் டீசல் வாகனம் இருக்கும் எனில் அதை மாற்றிய பின்னரே பயன்படுத்த வேண்டும். இல்லை எனில் செலவையும், சிக்கலையும் அது பெரிதாக்கிவிடும்.
அதிக புகை வெளியேற்றத்தை அலட்சியம் செய்ய வேண்டாம்: உங்கள் டீசல் வாகனம் வழக்கத்திற்கு மாறாக திடீரென புகையை வெளியேற்றுகிறதா.. இதை அசால்டாக எடை போட வேண்டாம். ஆரம்பத்திலேயே இதை சரி செய்யவில்லை எனில் உங்களுடைய டீசல் கார் புகை வண்டியாக மாறிவிடும். எதிர்பார்த்திராத அளவிற்கு மாசை அது ஏற்படுத்தத் தொடங்கும்.
மிகப் பெரிய கோளாறு எஞ்ஜினில் ஏற்பட தொடங்குகின்றது என்பதற்கான அறிகுறியே இந்த அதிக புகை வெளியேற்றம் என்பது குறிப்பிடத்தகுந்தது. மேலும், வெள்ளை புகை குளிரூட்டி கருவி சிக்கலையும், நீல புகை எண்ணெய் எரிப்பில் இருக்கும் சிக்கலையும் குறிக்கிறது என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த நிலையில் டீசல் காரை வெளியில் எடுத்துச் செல்வது கூடவே கூடாது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் டீசல் வாகனங்கள் மீது மட்டுமல்ல பெட்ரோல் வாகனங்களுக்கு எதிராகவும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் அடிப்படையிலேயே சமீபத்தில் பிஎஸ் 6 கட்டம் இரண்டு விதிகள் நாட்டில் அமல்படுத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து பிஎஸ்7-ஐ அறிமுகம் செய்வதற்கான பணிகளை அறசு முன்னெடுத்து வருகின்றது. 2025க்குள் இதுவும் பயன்பாட்டிற்கு வந்துவிடும்.


Click it and Unblock the Notifications









