பெட்ரோல்/டீசலுக்கு காலாவதி தேதி இருக்கிறதா? காலாவதியான பெட்ரோலை கண்டுபிடிப்பது எப்படி?
பெட்ரோல்/ டீசல்களுக்கு காலாவதி காலம் இருக்கிறதா? அப்படி இருந்தால் அதைக் கண்டுபிடிப்பது எப்படி? காலாவதி காலத்திற்குப் பிறகு பெட்ரோல்/டீசல் என்னவாகும்? இதுகுறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்
இன்று பெட்ரோல்/டீசல் விற்கும் விலைக்கும் அதை வாங்குவது என்று நினைத்தாலே தலைச் சுற்றும், ஆனால் இன்று வாகனங்களை ஓட்டுவதற்கு அதை வாங்குவதை விட வேறு வழியில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்தா பெட்ரோல் விலை இன்று வெகுவாக உயர்த்துவிட்டது. வருங்காலத்தில் பெட்ரோல் விலை மேலும் உயரும் என்பது எல்லோரும் தெரிந்த ஒரு அதிர்ச்சியான தகவல். நிலைமை இப்படி இருக்கும் போது சிலருக்கு தற்போது பெட்ரோல்/ டீசலை வாங்கி மொத்தமாக வைத்துக்கொண்டால் விலை கூடிய பிறகு அதைப் பயன்படுத்தலாம் என்று தோன்றும்.

உண்மையில் இது சாத்தியமா என்றால் இல்லை. பெட்ரோல் / டீசல்களுக்கு காலாவதி காலம் இருக்கிறது. ஆம் நாம் எப்படி ஒரு பொருளை வாங்கும் போது அதற்கு காலாவதி காலத்தை செக் செய்கிறோமோ அதே போல பெட்ரோல் டீசலுக்கும் காலாவதி காலம் இருக்கிறது. இந்த காலாவதி காலம் பெட்ரோல்/ டீசல் வாங்கும் போது கொடுக்கப்படாது. இந்த காலாவதி காலம் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் நாம் பெட்ரோல்/டீசல் குறித்து சில விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
பெட்ரோல்/டீசல் எல்லாம் கச்சா எண்ணெய்யிலிருந்து எடுக்கப்படுகிறது. இது பல ஆயிரம் ஆண்டுகளாக மண்ணுக்குள் கிடைந்த பொருட்களிலிருந்து எடுக்கப்படுகிறது. இப்படியாக எடுக்கப்படும் கச்சா எண்ணெய் அப்படியே இருக்கும் போது அதற்குக் காலாவதி தேதி கிடையாது. ஆனால் அது பெட்ரோலாக மாறிய பின்பு அதன் தன்மை மாறிவிடுகிறது. அதனால் அதற்குக் காலாவதி தேதி வந்துவிடுகிறது.
பொதுவாக பெட்ரோல் தயாராகி 6 மாதங்கள் வரை அது அதன் தன்மையை மாற்றாமல் இருக்கும். அதற்கு சரியான இடத்தில் காற்று புகாமல் சேமிக்கப்பட்டு 20 டிகிரிக்கு மிகாமல் இருக்கும் வெப்பத்திலேயே இருக்க வேண்டும். இப்படி இருந்தால் 6 மாதங்கள் வரை பெட்ரோலின் தன்மை மாறாமல் இருக்கும். இதுவே சரியான இடத்தில் வைத்துப் பராமரிக்காமல் இருந்தாலோ அல்லது வெப்பம் அதிகமாக இருந்தாலோ அது குறைவான காலத்திலேயே தனது தன்மையை மாற்றிவிடும்.
இதுவே டீசலுக்கு 12 மாதங்கள் வரை காலாவதி காலம் இருக்கிறது. இதுவும் முறையாகப் பராமரித்தால் தான். பராமரிக்கவில்லை என்றால் காலாவதி காலம் 6 மாதமாகக் கூட குறைந்துவிடும். காலாவதி காலம் என்பது அதன் தன்மை மாறுவது தான். தன்மை மாறுகிறது என்றால் அது பயன்படுத்த முடியாத நிலைக்குச் செல்லும் என அர்த்தம் கிடையாது. மாறாக இது தனது திறனைக் குறைத்துவிடும். மேலும் அதில் வேதியியல் மாற்றங்கள் ஏற்பட்டுவிடும் என்பதால் அது வாகனத்திற்குள் சென்றால் இன்ஜினிற்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
இதனால் காலாவதியான பெட்ரோல்/டீசல்களை பயன்படுத்துவது வாகனத்தின் இன்ஜினிற்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஒரு வேளை நீங்கள் உங்கள் வாகனத்தை 6 மாதங்களுக்கு மேல் எடுக்காமல் வைத்திருக்கிறீர்கள் என்றால் வாகனத்தின் பெட்ரோல் டேங்கில் பெட்ரோல் அப்படி இருந்தால் மீண்டும் வாகனத்தை எடுக்கும் போது அந்த பெட்ரோலை எல்லாம் நீக்கிவிட்டு புதிதாக பெட்ரோலை வாங்கி வாகனத்தில் நிரப்பிப் பயணிப்பது உங்கள் வாகனத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தாத வண்ணம் இருக்கும்.
தற்போது மார்கெட்டிற்கு வரும் பெட்ரோல்/டீசல்கள் எல்லாம் அதிக தேவை காரணமாக அது தயாரிக்கப்பட்ட ஒரு மாதத்திற்குள்ளாகவே இது விற்பனைக்கு வந்துவிடுகிறது. அதனால் பெட்ரோல் பங்கில் வாங்கும் பெட்ரோல்/டீசலின் காலாவதி குறித்து நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. இனி நீங்கள் பெட்ரோல்/டீசலை வாங்கி பயன்படுத்தும் போது அதன் காலாவதி குறித்து கவனமாக இருங்கள். தேவையில்லாமல் காலாவதியான பெட்ரோலை பயன்படுத்தி உங்கள் வாகனங்களின் இன்ஜின்களை கெடுத்துக்கொள்ளாதீர்கள். இதுகுறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications