ஏர்பேக் உசுர காப்பாத்த மட்டுமல்ல எடுக்கவும் செய்யும்.. தயவு செஞ்சு இந்த விஷயங்களை மட்டும் செய்யாதீங்க!
கார்களில் வழங்கப்படும் மிக முக்கியமான உயிர் பாதுகாப்பு கருவியாக ஏர்-பேக் (Airbags) இருக்கின்றது. இப்போது விற்பனையில் இருக்கும் நவீன கால கார்களில் இந்த அம்சம் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. குறைந்தபட்சம் இரட்டை ஏர்-பேக்காவது ஓர் காரில் இடம் பெற்றிருக்க வேண்டும் என்பது அரசின் விதியாகும்.
அதேவேளையில், சில வாகன உற்பத்தி நிறுவனங்கள் குறிப்பிட்ட சில கார் மாடல்களில் மிக தாராளமாக ஆறு ஏர் பேக்குகளை ஸ்டாண்டர்டு அம்சமாக வழங்கிக் கொண்டிருக்கின்றன. உயிர்களை காப்பதில் முக்கிய பங்கினை ஏர் பேக்குகள் வகிக்கின்ற காரணத்தினாலேயே இந்த அளவு அதிக முக்கியத்துவம் ஏர் பேக்கிற்குக் கொடுக்கப்படுகின்றது.

இந்த அம்சம் கொண்ட கார்களில் செய்யக் கூடாதவை என சில இருக்கின்றன. அவை என்ன?, ஏன் இதை எல்லாம் செய்யக் கூடாது?, இதற்கு பின்னால் மறைந்திருக்கும் ஆபத்துகள் என்ன என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் விரிவாக தொகுத்து வழங்கி இருக்கின்றோம். இதுகுறித்த பதிவிற்குள் போகலாம்.
புல் பார்களை கார்களில் பொருத்தக் கூடாது: புல் பார்கள் வாகனங்களில் ஏற்படும் சிராய்ப்புகளையும், விபத்துகளின்போது ஏற்படும் பெருத்த சேதங்களையும் தடுக்க உதவலாம், அதேவேளையில், இது ஏர் பேக்கின் முக்கிய பணியையும் தடுக்கும் என்பதை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஏர் பேக்கை வெடிக்கச் செய்வதற்கான தூண்டுகோள் காரின் முகப்பு பகுதியிலேயே இடம் பெற்றிருக்கும்.

அவை விபத்துகளின்போது தானாகவே தூண்டப்படும். தாக்கத்தை முன் பக்கம் உள்வாங்கிக் கொள்வதால் அது தூண்டப்படுகின்றது. இந்த மாதிரியான செயலையே புல் பார்கள் தடுக்கின்றன. மோதலின்போது அனைத்து தாக்கத்தையும் புல் பார்கள் தாங்கிக் கொள்கின்றன. இதன் விளைவு ஏர்பேக் வெடிக்காமல் கடுமையான பாதிப்பை பயணிகளுக்கு ஏற்படுத்துகின்றது. இதனைத் தவிர்க்கவே புல் பார்கள் பயன்படுத்தக் கூடாது என கூறப்படுகின்றது.

கால்களை டேஷ்-போர்டு மீது வைத்தல் கூடாது: முன் பக்கத்தில் அமர்ந்து பயணிக்கும் பயணிகள் டேஷ்போர்டுமீது கால் வைத்துக் கொண்டு பயணிப்பதை நாம் பார்த்திருப்போம். இது மிகுந்த ஆபத்தானது. திடீரென ஏர்-பேக் வெடிக்க செய்யும் எனில் அது காலின் எலும்பையே நொறுக்கிவிடும். ஆகையால், இதுபோன்று டிராவல் செய்வது கூடவே கூடாது.

சிறுவர்களுக்கான இருக்கையை முன் இருக்கையில் பயன்படுத்துதல்: ஏர் பேக் இருக்கும் கார்களில் நாம் செய்யக் கூடாத மிக முக்கியமான விஷயங்களில் இதுவும் ஒன்றாகும். முன் பக்க இருக்கையில் குழந்தைகளுக்கான இருக்கையைப் பொருத்தக் கூடாது, அதில், குழந்தைகளையும் அமர வைக்கக் கூடாது. ஏர் பேக் வெடிப்பின்போது அது குழந்தைகளைக் கடுமையாகப் பாதிக்கச் செய்யும். எனவே இந்த செயலையும் தவிர்த்துவிடுவது நல்லது.

டேஷ்போர்டின்மீது அலங்காரப் பொருட்களை வைப்பதை தவிர்க்கவும்: ஓர் பட்டாசு வெடிக்கும்போது அதன் மீது ஓர் கல்லோ அல்லது வேறு ஏதேனும் பொருள் இருந்தால் என்னவாகும்?, அதைபோலவே டேஷ்போர்டு மீது வைக்கப்படும் பொருளும் இருக்கும். ஏர் பேக் வெடிக்கும்போது அந்த பொருட்கள் தூக்கி வீசப்படும். இது கூடுதல் ஆபத்தை ஏற்படுத்த வழிவகுக்கும். எனவே டேஷ்போர்டுமீது தேவையில்லா பொருட்களை வைப்பதை தவிர்த்துவிடவும்.

ஸ்டியரிங் வீலுடன் நெருக்கமாக உட்காரக் கூடாது: ஓட்டுநரின் பாதுகாப்பு கருதி ஏர்-பேக் ஸ்டியரிங் வீலில் கொடுக்கப்பட்டு இருக்கும். இது வெடிக்கும்போது அதிக வேகத்துடன் வெடிக்கும். இந்த மாதிரியான சூழலில் நாம் மிக நெருக்கமாக அமர்ந்திருந்தால், அது நம்மை மிக மோசமாக தாக்கக் கூடும். இதனால் மிகப் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்றாலும், அது நம்மை பலமடங்கு அதிகமாக கஷ்டப்பட செய்துவிடும். எனவே ஸ்டியரிங் வீலுக்கு நெருக்காமாக அமர்வதை தவிர்க்கவும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏர்பேக்குகள் உயிரை பாதுகாக்கும் அம்சம் ஆகும். அதை எப்படி பயன்படுத்த வேண்டுமோ அந்த வகையில் மட்டுமே பயன்படுத்தினால் மிக சூப்பரான பாதுகாப்பை நம்மால் பெற்றுக் கொள்ள முடியும். மேலே பார்த்த எந்தவொரு செயலை செய்தாலும் அது நம்மை அதிக இன்னல்களுக்கு ஆளாக்கி விடும். ஆகையால், மேலே கண்ட விஷயங்களை கட்டாயம் ஏர்பேக் உள்ள கார்களில் தவிர்த்துவிடுவதே நல்லது.


Click it and Unblock the Notifications









