நம் கைகளுக்கு எட்டாத தூரத்திற்கு போகஇருக்கும் செடான் கார்கள்! எவ்ளோ கொடுத்தாலும் ஏப்ரல்ல இருந்துவாங்க முடியாது
நம்முடைய கைகளுக்கு எட்டாத தூரத்திற்கு ஒரு சில கார் மாடல்கள் வெகு விரைவில் செல்ல இருக்கின்றன. விரைவில் இந்தியாவில் புதிய மாசு உமிழ்வு விதி நடைமுறைக்குக் கொண்டு வரப்பட இருக்கின்றது. தற்போது நடைமுறையில் இருக்கும் பிஎஸ் 6 மாசு உமிழ்வு விதியின் இரண்டாம் கட்டமே விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது.
இப்போது இருப்பதைக் காட்டிலும் பல மடங்கு அதிக கெடுபிடியான விதிகளுடன் இது உருவாக்கப்பட்டு இருக்கின்றது. இதன் விளைவாக சில கார் மாடல்கள் இந்தியாவில் விற்பனைக்கு தகுதியற்றவையாக மாற இருக்கின்றன. இதன் பலனாக அவற்றிற்கு இந்த ஆண்டு ஏப்ரலுடன் மூடு விழா கொண்டாடப்பட இருக்கின்றது. அதாவது, புதிய விதிக்கு ஏற்ப அப்கிரேட் செய்யாமல் சிறிய எஞ்ஜின் கொண்ட கார் மாடல்களை சந்தையில் இருந்து வெளியேற்ற வாகன உற்பத்தியாளர்கள் திட்டம் போட்டு இருக்கின்றனர்.

அந்தவகையில், கட்டாயம் இந்த கார் மாடல்கள் எல்லாம் சந்தையை விட்டு வெளியேற்றப்பட உள்ளன என சில பிரபல கார் மாடல்கள் பட்டியலிடப்பட்டு உள்ளன. அந்த பட்டியலில் இருந்து மிக மிக பிரபலமான ஐந்து செடான் ரக கார் மாடல்களை தேர்ந்தெடுத்து, அவற்றை பற்றிய விபரங்களையே இந்த பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். இந்த செடான் கார்களை 2023 ஏப்ரலில் இருந்து எவ்வளவு கூடுதல் தொகைக் கொடுத்தாலும் வாங்க முடியாது.
ஒருவேளை நீங்கள் வாங்கியிருந்தாலும் அதை பதிவு செய்வது மிக மிக கடினம் ஆகும். புதிய விதிகள் காற்று மாசுபாட்டைக் கட்டுக்குள் கொண்டு வரும் விதமாக மத்திய அரசின் தீவிர முயற்சியின்கீழ் கொண்டு வரப்பட உள்ளது. எனவே எந்த விதிவிளக்கும் இந்த விஷயத்தில் அளிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய விதிகளுக்கு உட்படாத வாகனங்கள் கட்டாயம் விற்பனையில் இருந்து விற்பனையில் இருந்து அகற்றப்பட உள்ளன. சரி, வாருங்கள் நாம் விரிவான பதிவிற்குள் போகலாம்.

ஹோண்டா சிட்டி 4 ஆம் தலைமுறை (Honda City 4th Gen)
புதிய பிஎஸ்6 மாசு உமிழ்வு விதி இரண்டாம் கட்டம் காரணமாக இந்தியாவில் இருந்து வெளியேற்றப்பட இருக்கும் கார் மாடல்களில் ஹோண்டா சிட்டி 4 ஆம் தலைமுறையும் ஒன்று. இந்த மாடலின் இரு பெட்ரோல் வேரியண்டுகள் சந்தையை விட்டு வெளியேற்றப்பட எக்கசக்க வாய்ப்புகள் உள்ளன. எஸ்வி மற்றும் வி ஆகியவையே அந்த வேரியண்டுகள் ஆகும். இரண்டும் 1.5 லிட்டர் பெட்ரோல் மோட்டார் தேர்விலேயே விற்பனைக்குக் கிடைக்கின்றன. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மட்டுமே வழங்கப்படுகின்றது. இதன் மைலேஜ் திறன் லிட்டருக்கு 17.4 கிமீ ஆகும். 9.49 லட்ச ரூபாய் தொடங்கி ரூ. 9.99 லட்ச ரூபாய் வரையிலான விலையில் இது விற்பனைக்குக் கிடைக்கின்றது. இரண்டும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும்.

ஹோண்டா சிட்டி 5 ஆம் தலைமுறை (Honda City 5th Gen Diesel)
ஹோண்டா சிட்டி 5 ஆம் தலைமுறையில் விற்பனைக்குக் கிடைக்கும் சில டீசல் வேரியண்டுகள் புதிய மாசு உமிழ்வு விதியின் காரணமாக சந்தையில் இருந்து வெளியேற்றப்பட உள்ளன. 1.5 லிட்டர் ஐ-டிடெக் டீசல் மற்றும் 1.5 லிட்டர் ஐ-விடெக் பெட்ரோல் இரு விதமான மோட்டார் தேர்வுகளில் ஹோண்டா சிட்டி 5 ஆம் தலைமுறை விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதில், பெட்ரோல் மட்டுமே ஏப்ரலில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கும். டீசல் முழுமையாக அகற்றப்பட இருக்கின்றது. இது 24.1 கிமீ வரை மைலேஜ் தரும். வி, விஎக்ஸ் மற்றும் இசட்எக்ஸ் ஆகிய மூன்று விதமான ட்ரிம்களே விற்பனையில் இருந்து அகற்றப்பட உள்ளன.

ஹூண்டாய் வெர்னா டீசல் (Hyundai Verna Diesel)
ஹூண்டாய் வெர்னா டீசல் வேரியண்டுகள் சிலதே விரைவில் விற்பனையில் இருந்து அகற்றப்பட இருக்கின்றது. ஒட்டுமொத்தமாக ஐந்து விதமான வேரியண்டுகள் விற்பனையில் இருந்து அகற்றப்பட இருக்கின்றது. எஸ் பிளஸ் (S+), எஸ்எக்ஸ் (SX), எஸ்எக்ஸ் ஏடி (SX-AT), எஸ்எக்ஸ் ஓ (SX-O) மற்றும் எஸ்எக்ஸ் (ஓ) ஏடி (SX(O)AT) இந்த தேர்வுகளே நாட்டில் இருந்து அகற்றப்படுவதற்கான லிஸ்ட்டில் உள்ளன. இந்தியாவின் மிகவும் ஸ்டைலான செடான் ரக கார் மாடல்களில் வெர்னாவும் ஒன்று. இதில் இருந்து இத்தனை வேரியண்டுகள் விற்பனையில் இருந்து அகற்றப்பட இருப்பது இந்தியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
ஸ்கோடா ஆக்டேவியா (Skoda Octavia)
இந்தியாவில் விற்பனையில் இருக்கும் மிகவும் பிரபலமான செடான் ரக கார் மாடல்களில் ஸ்கோடா ஆக்டேவியாவும் ஒன்று. இந்த கார் மாடல் ஒட்டுமொத்தமாக நாட்டை விட்டே அகற்றப்பட இருக்கின்றன. பிற கார் மாடல்களைப் போல் ஒரு சில வேரியண்டுகள் மட்டுமே அகற்றப்படப்போவதில்லை. இந்த கார் 2.0 லிட்டர் டிஎஸ்ஐ எஞ்ஜின் தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இத்துடன், 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகின்றது. இத்தகைய வசதிக் கொண்ட காரையே விற்பனையில் இருந்து அகற்ற ஸ்கோடா பிளான் போட்டு இருக்கின்றது.

ஸ்கோடா சூப்பர்ப் (Skoda Superb)
புதிய மாசு உமிழ்வு விதி காரணமாக இந்தியாவில் இருந்து வெளியேற்றப்பட இருக்கும் கார் மாடல்களில் ஸ்கோடா சூப்பர்ப்-ம் ஒன்று. தற்போது மக்கள் மத்தியில் எஸ்யூவி ரக கார்களுக்கு வரவேற்பு அதிகரித்துக் காணப்படுவதால், இந்த செடானுக்கான வரவேற்பு சற்றே குறைந்துக் காணப்படுகின்றது. ஆகையால், இதற்கு பிரியா விடை கொடுக்க ஸ்கோடா திட்டமிட்டுள்ளது. ஸ்போர்ட்லைன் மற்றும் எல்அண்ட்கே இரண்டையும் அது வெளியேற்ற இருக்கின்றது. இந்த மாடலிலும் நிறுவனம் 2.0 லிட்டர் டிஎஸ்ஐ எஞ்ஜினையே பயன்படுத்தி உள்ளது என்பது கவனிக்கத்தகுந்தது.


Click it and Unblock the Notifications









