48 மாசத்துக்கு ரூ. 3,500 கட்டினா போதும் இந்த குட்டி எலெக்ட்ரிக் காரை சொந்தமாக்கிடலாம்... கோமெட்டை விட குட்டி!
இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் மிக மிக சிறிய தோற்றம் கொண்ட எலெக்ட்ரிக் காராக எம்ஜி கோமெட் இவி (MG Comet EV) இருக்கின்றது. இது ஓர் 2.97 மீட்டர் நீளம் கொண்ட குட்டியான எலெக்ட்ரிக் காராகும். இதையே நாம் அனைவரும் உலகின் மிக சிறிய கார் என எண்ணிக் கொண்டிருக்கின்றோம்.
ஆனால், இதைவிட மிக சிறிய எலெக்ட்ரிக் காரை பிரபல கார் உற்பத்தி நிறுவனமான ஃபியட் (Fiat) விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. டோபிலோனோ (Topolino) என பெயர் கொண்ட மிக மிகக் குட்டியான எலெக்ட்ரிக் காரையே ஃபியட் இந்த உலகில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது.

இதன் ஒட்டுமொத்த நீளமே 2.53 மீட்டர் மட்டுமே ஆகும். எனவே, எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் காரைக் காட்டிலும் இது மிகக் குட்டியாக இருக்கும் என்பது தெளிவாக தெரிகின்றது. இந்த வாகனத்தின் டாப் ஸ்பீடும் எம்ஜி கோமெட் இவி-யை விட குறைவாகவே இருக்கின்றது.
எம்ஜி கோமெட் இவி மணிக்கு 100 கிமீ வேகத்தில் பயணிக்கும். அதேவேளையில், ஃபியட் டோபோலினோவோ மணிக்கு 45 கிமீ வேகத்தில் பயணிக்கும். முழுக்க முழுக்க நகர்புற பயன்பாட்டை மட்டுமே மையக் கருத்தாகக் கொண்டு இந்த கார் உருவாக்கப்பட்டு, தற்போது வெளியீடு செய்யப்பட்டு இருக்கின்றது.

இந்த காரணத்தினாலேயே மிகக் குறைவான ரேஞ்ஜ் தரக் கூடிய காராக ஃபியட் டோபோலினோ இருக்கின்றது. இந்த எலெக்ட்ரிக் காருக்கான முன் பதிவு பணிகள் ஏற்கனவே இத்தாலியில் தொடங்கிவிட்டன. முதல் கட்டமாக இந்த நாட்டிலேயே ஃபியட் டோபோலினோ விற்பனைக்குக் களமிறக்கப்பட இருக்கின்றது. இதற்கு பின்னரே உலக நாடுகள் பிறவற்றில் இது விற்பனைக்கு வரும் என கூறப்படுகின்றது.
அந்தவகையில் இந்தியாவிலும் இந்த கார் விற்பனைக்கு வருமா என கேட்டால், இது விற்பனைக்கு வருவதற்கான எந்தவொரு சாத்தியக் கூறும் துளியளவும் தென்படவில்லை. இருப்பினும், இந்த கார் இந்தியர்களின் எதிர்பார்ப்பை தூண்ட செய்யும் வகையில் அமைந்திருக்கின்றது. அதன் குட்டியான தோற்றம், பைக்கை போன்ற பயன்பாட்டு வசதி என ஏகப்பட்ட சிறப்பு வசதிகளை டோபோலினோ கொண்டிருப்பதே இதற்கான காரணம் ஆகும்.

ஃபியட் டோபோலினோ நிறுவனத்தின் இரண்டாவது எலெக்ட்ரிக் கார் மாடலே இதுவாகும். 500இ, இதுவே நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் காராகும். இந்த காரில் 5.5 kWh லித்தியம் அயன் பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 75 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.
இந்த காாரை ரெண்டு விதமான கூரைகள் தேர்வில் வாங்கிக் கொள்ள முடியும். கேன்வாஸ் வகை துணிக் கொண்ட ரூஃப் அல்லது கண்ணாடியாலான ரூஃப் இந்த இரு தேர்வுகளிலேயே ஃபியட் டோபோலினோ விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. வழக்கமான உலோகத்தாலான ரூஃப் வசதி இந்த காரில் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

இத்துடன், கதவு வைத்த தேர்வு மற்றும் கதவே இல்லாத தேர்வு என் இரு ஆப்ஷன்களும் இந்த கார்களில் வழங்கப்பட இருக்கின்றது. இது ஓர் சுவாரஷ்யமான ஆப்ஷன் ஆகும். இதுமட்டுமில்லைங்க இன்னும் பல சிறப்பு வசதிகளைத் தாங்கிய வாகனமாகவே இந்த டோபோலினோ விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது.
குரோம் பூச்சுக் கொண்ட மிர்ரர்கள், யுஎஸ்பி ஃபேன், ப்ளூடூத் ஸ்பீக்கர் மற்றும் பிரீமியம் தர இருக்கைக் கவர் உள்ளிட்டவையும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த காரை மிக மிகக் குறைவான விலையில் விற்பனைக்கு டோபோலினோ விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது என்பதும் கவனிக்கத்தகுந்தது.

8,065 அமெரிக்க டாலர்கள் இந்த காருக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இந்திய ரூபாய் மதிப்பில் இதன் விலை 6.70 லட்சம் மட்டுமே ஆகும். இந்த காரின் பக்கம் வாடிக்கையாளர்களை ஈர்க்க வேண்டும் என்பதற்காக ஃபியட் நிறுவனம் மிக மிக குறைவான மாதத் தவணை திட்டத்தை இத்தாலியர்களுக்காக அறிமகம் செய்திருக்கின்றது.
மாதம் 42 அமெரிக்க டாலர்கள் என 48 மாத தவணை திட்டத்தை அறிமுகம் செய்திருக்கின்றது. அதாவது, மாதம் ஒன்றிற்கு ரூ. 3,500 மட்டுமே செலுத்தும் திட்டத்தின்கீழ் ஃபியட் டோபோலினோவை வாங்கிக் கொள்ள முடியும். இத்தாலியில் ஃபியட் டோபோலினோவிற்கு மிகப் பெரிய வரவேற்பு ஏற்கனவேக் கிடைக்கத் தொடங்கிவிட்டது. இப்போதே 19 வாரங்கள் வரை காத்திருக்கும் அளவிற்கு ரிசர்வேஷன் இந்த காருக்குக் கிடைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இந்த கார் விற்பனைக்கு வரும்பட்சத்தில் டூ-வீலருக்கு பதிலாக பலர் இந்த காரை வாங்கி பயன்படுத்தத் தொடங்குவர். அந்த அளவிற்கு குறைவான விலையைக் கொண்டதாகவே ஃபியட் டோபோலினோ இருக்கின்றது. இதை பார்க் செய்ய பெரிய அளவில் பார்க்கிங் ஸ்பேஸ் தேவைப்படாது என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆனால், இந்த கார் விற்பனைக்கு வருவதற்கான சாத்தியங்கள்தான் துளியளவும் தென்படவில்லை.


Click it and Unblock the Notifications









