இந்தியாவின் முதல் ஃபார்முலா இ ரேஸின் இறுதி முடிவுகள் - 7வது இடத்திற்கு தள்ளப்பட்ட லோக்கல் கை மஹிந்திரா!!
இந்தியாவின் முதல் ஃபார்முலா இ பந்தயம் ஹைதராபாத்தில் நடைப்பெற்று வருவதை பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். நேற்று (பிப்.10) மாலை ப்ரீ பிராக்டிஸ் போட்டி உடன் துவங்கிய இந்த ரேஸ் பந்தயத்தின் இறுதி முடிவுகள் வெளிவந்துள்ளன. அவற்றை பற்றி முழுமையாக இனி இந்த செய்தியில் பார்ப்போம்.
வெளியாகியுள்ள இறுதி முடிவுகளின்படி, அமெரிக்காவை சேர்ந்த ரேசிங் நிறுவனமான டி.எஸ் பென்ஸ்கே -வின் ஜியன்-எரிக் வெர்ஜ்னே முதலிடத்தை பெற்று ஹைதராபாத் இ-பிரிக்ஸ் பந்தயத்தின் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். வெர்ஜ்னேவிற்கு அடுத்து 2வது இடத்தை என்விஷன் ரேசிங் நிறுவனத்தின் நிக் காஸ்ஸிடி பிடித்துள்ளார். இத்தனைக்கும், காஸ்ஸிடி இறுதி லேப்-ஐ கிட்டத்தட்ட 2% கூடுதல் ஆற்றல் உடன் துவங்கினார்.

இருப்பினும் கடைசியில், ஜியன்-எரிக் வெர்ஜ்னே முதலிட அரியணையை பெற்றுள்ளார். 2014ஆம் ஆண்டில் இருந்து நடைபெறும் ஃபார்முலா இ பந்தயத்தில் இரு முறை சாம்பியன் பட்டம் பெற்றவராக விளங்கும் ஜியன்-எரிக் வெர்ஜ்னே ஃபார்முலா இ ரசிகர்களால் சுருக்கமாக JEV என அழைக்கப்படுகிறார். ஃபார்முலா 1 பந்தயத்தை போல் ஃபார்முலா இ பந்தயங்களிலும் உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள நிறுவனங்கள் மற்றும் அவைகளின் டிரைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
நடைபெற்ற ஹைதராபாத் இ-பிரிக்ஸ் போட்டியில், ஜாகுவார் டிரைவர் சாம் பேர்டு நிஸானின் டிரைவர் சசா ஃபெனெஸ்ட்ராஸை ஓவர்டேக் செய்யும்போது போல்சிட்டர் நிறுவனத்தின் டிரைவர் மிட்ச் எவன்ஸ் உடன் மோதலுக்கு உள்ளானார். இந்த நிகழ்விற்கு பிறகே ஜியன்-எரிக் வெர்ஜ்னே பந்தயத்தில் முன்னிலை வகிக்க துவங்கினார். இந்த நிகழ்வானது பந்தயம் முடிவதற்கு சில லேப்களுக்கு முன்னர் தான் நடந்தது.

அதாவது, பந்தயத்தின் கடைசி சில லேப்களில்தான் வெர்ஜ்னேவின் கை ஓங்க ஆரம்பித்தது. மேற்கூறப்பட்ட மோதலினால் மஸராட்டியின் டிரைவர் மேக்ஸ் கந்தெரும் பந்தயத்தில் சில இடங்கள் பின் தள்ளப்பட்டார். இந்த மோதலினால் மேக்ஸ் கந்தெர் மற்றும் நிஸானின் ஃபெனெஸ்ட்ராஸ் பந்தயத்தில் இருந்து ஓய்வு எடுத்து கொண்டனர். மேலும், இந்த மோதலினால் 7வது லேப் வரையில் முன்னிலை வகித்து வந்த போல்சிட்டரின் எவன்ஸ் பின்னுக்கு தள்ளப்பட்டார்.
போல்சிட்டர் குழு எவன்ஸிடம் அட்டாக் மோட்-இல் செல்லுங்கள் என்று கூறியதுதான் இந்த மோதலுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. ஆனால் மறுப்பக்கம், இந்த மோதலினால் என்விஷனின் டிரைவர் செபாஸ்டியன் பியூமி மற்றும் ஜியன்-எரிக் வெர்ஜ்னே பந்தயத்தில் வேகமாக முன்னேறி சென்றனர். இத்துடன் ஹைதராபாத் இ-பிரிக்ஸில் நடைபெற்ற சுவாரஸ்யமான சம்பவங்கள் நின்றுவிடவில்லை. ஏனெனில் அடுத்த சம்பவம் ஹூசைன் சாகர் ஏரிக்கு அருகே நடந்தது.

முந்தைய மோதலுக்கு பிறகு, யார் முன்னிலை வகிப்பது என்ற போட்டி டிரைவர்கள் வெர்ஜ்னே மற்றும் பியூமிக்கு இடையே ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் என்விஷனின் பியூமி முன்னிலை வகித்தார். அதன்பின் அவரை டி.எஸ் பென்ஸ்கேவின் வெர்ஜ்னே முந்தினார். இதில் கோபமடைந்த பியூமி அட்டாக் மோடிற்கு சென்றார். இவ்வாறு இவர்கள் இருவருக்கும் இடையே பலத்த போட்டி நடைபெற்று கொண்டிருந்த சமயத்தில் இரு மெக்லாரன் கார்கள் அடுத்தடுத்து மோதலுக்கு உள்ளாகின.
மெக்லாரனின் ஜாக் ஹூக்ஸின் கார் டிராக்கில் தானாக மோதியது. அதன்பின் மற்றொரு மெக்லாரன் டிரைவரான ரெனெ ராஸ்ட் தனது காரை ஜாக் டென்னிஸ் நிறுவனத்தின் டிரைவர் அண்ட்ரேட்டியின் காருடன் மோதினார். மொத்தம் 32 லேப்களை (1 லேப் கூடுதலாக) கொண்ட பந்தயம் கடைசி லேப்பிற்கு வந்தது. அந்த சமயத்தில் ஜியன்-எரிக் வெர்ஜ்னேவின் எலக்ட்ரிக் ரேஸ் காரில் சார்ஜ் மிகவும் குறைவாகவே இருந்தது.

ஆனால் அந்த சமயத்தில் என்விஷனின் காஸ்ஸிடியின் காரின் பேட்டரியில் வெர்ஜ்னே காரை காட்டிலும் 4-5% சார்ஜ் அதிகமாக இருந்தது. ஆனால், கடைசி லேப்-இன் 3வது வளைவில் பிரெஞ்சு ரேஸரான ஜியன்-எரிக் வெர்ஜ்னே தைரியமான முடிவை எடுத்து காஸ்ஸிடியை முந்த முயன்று அதில் வெற்றியும் பெற்றார். அவர் அந்த முடிவு எடுத்த போது, போட்டி முடிவதற்கு 1 வினாடி கூட இல்லை, வெறும் 0.4 வினாடி மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.
வெர்ஜ்னே மற்றும் காஸ்ஸிடி முதல் மற்றும் 2வது இடங்களை பிடிக்க, 3வது இடத்தில் என்விஷனின் மற்றொரு டிரைவரான பியூமி வந்தார். ஆனால் மோதலுடன் டிரைவ் செய்த காரணத்தினால் அவருக்கு தண்டனையாக அவரை 15வது இடத்திற்கு தள்ளினர். ஏற்கனவே கூறியதுதான், இந்தியாவில் நடைபெற்ற முதல் ஃபார்முலா இ பந்தய போட்டி இதுவாகும். ஆனால் இந்த போட்டியில் இந்திய நிறுவனமான மஹிந்திரா பெரியதாக சோபிக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். மஹிந்திராவின் டிரைவர் ஆலிவர் ரோவ்லாண்ட் 7வது இடத்தையும், மஹிந்திராவின் மற்றொரு டிரைவர் லுகாஸ் டி கிராஸ்ஸி 14வது இடத்தையும் பிடித்தனர்.


Click it and Unblock the Notifications









