உண்மையான பென்ஸ் கார்களே தோற்றுப் போகும்!! நம்ம மெக்கானிக்குகளின் திறமைக்கு அளவே இல்ல!
2022ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ஃபோர்ஸ் குர்கா வாகனம் ஒன்று மெர்சிடிஸ் பென்ஸ் ஜி-வேகன் வாகனம் போன்று மாடிஃபை செய்யப்பட்டுள்ளது. இந்த கஸ்டமைஸ்டு குர்கா வாகனம் தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதன் மூலம் கிடைக்கப் பெற்ற விபரங்களை இனி பார்க்கலாம்.
மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி-வேகன், இந்தியா மட்டுமின்றி உலகளவில் பிரபலமான மெர்சிடிஸ் வாகனம் எனலாம். பிரபலமான வாகனம் என்பது மட்டுமில்லாமல், விலையுயர்ந்த வாகனமும் கூட. லக்சரி விலையிலான ஆஃப்-ரோடு வாகனங்கள் என்று எடுத்து பார்த்தால், அதில் ஜி-வேகன் முன்னிலையில் இருக்கிறது.

இந்தியாவில் ஜி-வேகன் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆனது தற்சமயம் ரூ.4 கோடி என்ற அளவில் உள்ளது. இவ்வளவு விலை கொடுத்து ஜி-வேகன் வாகனத்தை வாங்கும் அளவிற்கு நம் நாட்டில் அனைவரும் பணக்காரர்கள் கிடையாது. அதனாலேயே, ஜி-வேகனை வாங்க முடியாவிடினும், குறைந்தது மஹிந்திரா தார், மாருதி சுஸுகி ஜிம்னி போன்ற வாகனங்களை வாங்குகின்றனர்.
அதேநேரம் சிலரோ, தங்களது வாகனத்தை ஜி-வேகனை போன்று கஸ்டமைஸ் செய்துக் கொள்கின்றனர். செயல்படுதிறனில் ஜி-வேகனை போன்று மாற்றுக் கொள்வது செலவு மிகுந்த காரியம். அதாவது, ஜி-வேகனுக்கு இணையான என்ஜின் & கியர்பாக்ஸை பொருத்துவதற்கு கோடி கணக்கில் கூட செலவு செய்ய வேண்டிவரும்.

இதனால், குறைந்தப்பட்சம் தோற்றத்திலாவது தங்களது வாகனத்தை ஜி-வேகனை போன்று மாற்றிக் கொள்கின்றனர். அவ்வாறு கஸ்டமைஸ் செய்யப்பட்ட ஃபோர்ஸ் குர்கா வாகனத்தை பற்றித்தான் இந்த செய்தியில் பார்க்க போகிறோம். ஆஃப்-ரோடு எஸ்யூவி வாகனங்கள் என்றாலே தார் மற்றும் ஜிம்னி வாகனங்கள் தான் முதலாவதாக நமது நினைவிற்கு வரும்.
ஆனால், ஃபோர்ஸ் குர்காவும் அவற்றிற்கு இணையான சிறப்பான ஆஃப்-ரோடு எஸ்யூவி வாகனமே. மெர்சிடிஸ் ஜி-வேகன் போன்று கஸ்டமைஸ் செய்யப்பட்டுள்ள இந்த குறிப்பிட்ட குர்கா வாகனத்தின் வெளிப்பக்கம் முழுவதுமாக மாற்றப்பட்டுள்ளது. முன்பக்கத்தில் இந்த வாகனம், மெர்சிடிஸ் லோகோ உடன் புதிய கிரில் பகுதியை கொண்டுள்ளது.

எல்இடி ஹெட்லைட்கள் மாற்றப்படவில்லை என்றாலும், டர்ன் இண்டிகேட்டர்கள் ஜி-வேகனில் இருப்பதை போன்று பொருத்தப்பட்டுள்ளன. முன்பக்க பம்பர் மேட் கருப்பு நிறத்தில் இருந்து வெள்ளை நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. முன் பம்பர் மட்டுமில்லை, இந்த குர்கா வாகனம் முழுவதுமே பளிச்சிடும் வெள்ளை நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
விபத்தின்போது, முன் கண்ணாடியை பாதுகாக்கும் வகையில் ரோல் பார் பொருத்தப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக, ஃபோர்ஸ் நிறுவனம் வழங்கும் ஸ்னோர்கில் நீக்கப்பட்டுள்ளது. இந்த கஸ்டமைஸ் குர்கா வாகனத்திற்கு மெர்சிடிஸ் லோகோ உடன் 17-இன்ச் அலாய் சக்கரங்கள் வழங்கப்பட்டுள்ளன. வாகனத்தின் உட்பக்கம் முழுவதுமாக சிவப்பு நிறத்திலான லெதரால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மெர்சிடிஸ் ஜி-வேகன் ஆசையை பலர் இவ்வாறே போலியாக நிறைவேற்றிக் கொள்கின்றனர். இருப்பினும், ஃபோர்ஸ் குர்காவின் ஆற்றலையும் குறைத்து மதிப்பிடக் கூடாது. ஜி-வேகன் அளவிற்கு இல்லையென்றாலும், இந்த குறிப்பிட்ட வெள்ளை நிற குர்கா வாகனம் சாலைக்கு சென்றால் நிச்சயமாக அனைவரையும் கவர்ந்திழுக்கும்.


Click it and Unblock the Notifications









