டிராஃபிக்ல ஓட்றதுக்கு ஏத்த குட்டி எலெக்ட்ரிக் காரின் விலை இவ்ளோதானா! பைக் வாங்கறதுக்கு பதிலா இதை வாங்கலாம்!
ஜென்சால் எலெக்ட்ரிக் வாகனங்கள் (Gensol Electric Vehicles) நிறுவனம் புதிய எலெக்ட்ரிக் கார் (Electric Car) ஒன்றின் டீசர் வீடியோவை (Teaser Video) தற்போது வெளியிட்டுள்ளது. வரும் 2024ம் ஆண்டு மார்ச் மாதம், அதாவது இன்னும் சுமார் 3 மாதத்தில், இந்த எலெக்ட்ரிக் கார் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வழக்கமான கார்களை போல், அல்லாமல் சற்று வித்தியாசமான தோற்றத்தில் இந்த எலெக்ட்ரிக் கார் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது வெறும் 2 கதவுகளுடன் இந்த எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம். எனினும் இந்த எலெக்ட்ரிக் காரில், அதிநவீன வசதிகளுக்கு (Features) சற்றும் பஞ்சமிருக்காது.

இதில், சிங்கிள்-பேன் சன்ரூஃப் மற்றும் பெரிய டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் போன்ற வசதிகள் மிகவும் முக்கியமானவையாக இருக்கலாம். இந்த எலெக்ட்ரிக் கார் சிறிய தோற்றத்தில் இருக்கும் என்பதால், நகர பகுதிகளில் ஓட்டுவதற்கு மிகவும் ஏற்றதாக இருக்கும். அளவில் சிறியது என்பதால், போக்குவரத்து நெரிசல் மற்றும் பார்க்கிங் இடவசதி போன்ற பிரச்னைகளை எளிதாக சமாளிக்கலாம்.
அதே நேரத்தில் இந்த எலெக்ட்ரிக் காரின் டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) 200 கிலோ மீட்டர் என்ற அளவில் இருக்கும். டாப் ஸ்பீடு மணிக்கு 80 கிலோ மீட்டர் என்ற அளவில் இருக்கும். டிரைவிங் ரேஞ்ச் பார்ப்பதற்கு சற்று குறைவாக தோன்றினாலும் கூட, நகர பகுதிகளில் ஓட்டுவதற்கு இது போதுமானதுதான்.

எம்ஜி கோமெட் இவி (MG Comet EV) மற்றும் டாடா டியாகோ இவி (Tata Tiago EV) ஆகிய எலெக்ட்ரிக் கார்களுடன், இந்த எலெக்ட்ரிக் கார் போட்டியிடும். இதில், எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் காரானது, 7.98 லட்ச ரூபாய் என்ற ஆரம்ப விலையில் (Price) கிடைக்கிறது. இதன் ரேஞ்ச் 230 கிலோ மீட்டராக உள்ளது.
மறுபக்கம் டாடா டியாகோ இவி எலெக்ட்ரிக் காரானது, 8.69 லட்ச ரூபாய் என்ற ஆரம்ப விலையில் கிடைக்கிறது. இந்த எலெக்ட்ரிக் கார் மொத்தம் 2 விதமான பேட்டரி ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது. இதில் ஒன்றின் டிரைவிங் ரேஞ்ச் 250 கிலோ மீட்டர் ஆகவும், மற்றொன்றின் டிரைவிங் ரேஞ்ச் 315 கிலோ மீட்டர் ஆகவும் உள்ளது.
இந்த 2 எலெக்ட்ரிக் கார்களையும் விட, ஜென்சால் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் காரின் டிரைவிங் ரேஞ்ச் குறைவுதான். அதற்கு ஏற்ப விலையும் குறைவாக இருக்கும் என்றே கருதப்படுகிறது. அதாவது ஜென்சால் எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை அனேகமாக வெறும் 6 லட்ச ரூபாய் என்ற அளவில்தான் இருக்கும் என கருதப்படுகிறது. ஆனால் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்போதுதான், அதிகாரப்பூர்வமான விலை அறிவிக்கப்படும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஜென்சால் நிறுவனத்தின் இந்த எலெக்ட்ரிக் கார் தொலை தூர பயணங்களுக்கு ஏற்றதாக இருக்காது. மாறாக நகர பயன்பாடுகளுக்கு மட்டுமே ஏற்றதாக இருக்கும். தினசரி அலுவலகம் செல்வோர், நகர பகுதிகளில் அடிக்கடி காரில் பயணம் செய்தாக வேண்டிய தேவை உள்ளவர்கள் இந்த எலெக்ட்ரிக் காரை வாங்குவது குறித்து பரிசீலனை செய்யலாம்.


Click it and Unblock the Notifications








