கோவாவுக்கு போனோமா வந்தோமானு மட்டும் இருங்க... உள்ளூர் நபர்களுக்கே போலீஸ்காரவங்க என்ன செஞ்சிருக்காங்க பாருங்க!
இந்தியர்கள், வெளிநாட்டினர் என பலதரப்பட்ட மக்கள் குழுமும் இடமே கோவா. நம்ம ஊரு இளைஞர்கள் பலருக்கு இங்கு செல்ல வேண்டும் என்பதே பெரும் கனவாகவே உள்ளது. ஆனால், முன்பு போல் தற்போது கோவா இல்லை. கடும் கிடுக்குபிடிகள் அங்கு போடப்பட்டு இருக்கின்றன.
குறிப்பாக, சாலை விதிகளைக் கட்டாயம் பின்பற்றியே ஆக வேண்டும். எந்த கோக்குமாக்கு தனமும் செய்ய முடியாது. தலைக் கவசம் அணிவது தொடங்கி சீட் பெல்ட் போடுவது வரை என அனைத்து விதிகளும் தீவிரமாக போலீஸாரால் கண்கானிக்கப்பட்டு வருகின்றது. தவறு செய்பவர்கள் இந்தியர், வெளிநாட்டினர் என எவராக இருந்தாலும் பாராபட்சம் இன்றி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

சமீபத்தில்கூட தலைக் கவசம் இல்லாமல் இருசக்கர வாகனத்தில் பயணித்த வெளிநாட்டு சுற்றுலா பயணியை காவலர் ஒருவர் மடக்கிப்பிடித்து அபராதம் விதித்தார். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகியது. இந்த நிலையில் சமூக வலைதளத்தில் வைரலாகிய வீடியோவையே அடிப்படையாகக் கொண்டு உள்ளூர் இளைஞர்கள் இருவர் மீது கோவா காவல்துறை மிகக் கடுமையான நடவடிக்கையை எடுத்திருக்கின்றது.
இளைஞர்கள் சாலையில் கெத்துக் காட்டும் விதமாக கார் சென்றுக் கொண்டிருக்கும்போதே அதன் கதவுகளை திறந்துவிட்டு இருக்கின்றனர். இவ்வாறு சில மீட்டர் தூரம் காரை அவர்கள் காரை இயக்கியும் இருக்கின்றனர். இளைஞர்களின் இந்த செயலைக் கண்டிக்கும் விதமாகவே கோவா காவல்துறையினர் வீடியோவில் இடம் பெற்றிருந்த காரின் நம்பர் பிளேட்டை ஆதாரமாகக் கொண்டு விதிமீறலில் ஈடுபட்ட இளைஞர்களைக் கைது செய்திருக்கின்றனர்.

இது மிகவும் ஆபத்தான செயல் ஆகும். ஆகையால், போலீஸாரின் நடவடிக்கையும் மிகவும் கடுமையானதாக உள்ளது. மேலும், அவர்கள் பயன்படுத்திய வாகனத்தையும் காவல்துறையினர் பறிமுதல் செய்திருக்கின்றனர். காவல்துறையின் இந்த கடுமையான நடவடிக்கையை வைத்து பார்க்கையில் கோவாவிற்கு போனோமா, ஊரை சுற்றி பார்த்தோமா திரும்பி வந்தோமா என்றிருக்க வேண்டும் என்பதை தெளிவாகக் காட்டுகின்றது.
குறிப்பாக சாலை விதிமீறலில் ஈடுபடவேக் கூடாது என்பதற்கான ஓர் சம்பவமாகவே இந்த நிகழ்வு அமைந்து உள்ளது. இதுபோன்று வீடியோவை அடிப்படையாகக் கொண்டு வாகன போக்குவரத்து விதிமீறல்வாதிகள் மீது காவல்துறை நடவடிக்கை எடுப்பது முதல் முறையல்ல. ஏற்கனவே இதுமாதிரியான சம்பவங்கள் பல கோவாவிலும் சரி, நம்முடைய மாநிலத்திலும் சரி அதிகளவில் அரங்கேறி இருக்கின்றன.

சொல்லப்போனால் போலீஸார் மடக்கிப்பிடித்து செல்லாண்களை வழங்குவதற்கு பதிலாக வைரல் வீடியோ, போக்குவரத்து சிசிடிவி கேமிரா காட்சிகளின் அடிப்படையிலேயே அதிகளவில் செல்லாண்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த சம்பவத்தில் மாருதி சுஸுகி ரிட்ஸ் காரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. காரின் நான்கு கதவுகளும் திறந்த நிலையில் இயக்கப்பட்டு இருக்கின்றது.
இதனால்தான் இந்த காரையும் காவல்துறையினர் தூக்கி இருக்கின்றனர். இளைஞர்களின் கண்டிக்கத்தக்க செயலைப் பார்த்து அதிர்ந்துபோன சக வாகன ஓட்டி ஒருவர் எடுத்த வீடியோவே தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது.. இதை அடுத்தே, வீடியோவை அடிப்படையாகக் கொண்டு மாருதி சுஸுகி ரிட்ஸ் கார் மீதும், அதனை ஓட்டி வந்தவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருக்கின்றன.
என்னென்ன பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கின்றது என்பது துள்ளியமாக விளக்கப்படவில்லை. தற்போது, "தேடப்பட்டு வந்த விதிமீறல்வாதிகள் சிக்கிவிட்டனர். அவர்கள் மீது முதல் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது" என்கிற தகவலை மட்டும் கோவா காவல்துறை வெளியிட்டு இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இதுபோன்று அக்கறையற்ற நிலையில் செயல்படுவது நமக்கு மட்டுமல்ல சக வாகன ஓட்டிகளுக்கும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். எனவேதான் இதுபோன்ற சம்பவங்களை ஊக்குவிக்கக் கூடாது என்பதற்காக காவல்துறையினர் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதுவும், இந்த சம்பவம் கோவாவின் முக்கிய தேசிய நெடுஞ்சாலையான போர்வோரிம்-இல் அரங்கேறியதாகக் கூறப்படுகின்றது. இதுவும் கடுமையான நடவடிக்கைக்கு மற்றுமொரு முக்கியமான காரணமாகும். கோவாவின் முக்கிய சாலைகளில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications









