இன்சூரன்ஸ் இல்லையா?.. நெடுஞ்சாலையிலேயே மடக்கி வச்சு இன்சூரன்ஸை போட போறாங்க..
நாட்டில் இன்சூரன்ஸ் இல்லாமல் இயங்கும் வாகனங்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்திருப்பதாகவும், அத்தகைய வாகனங்களைப் பிடிக்கும் இடத்திலேயே காப்பீட்டை வழங்குவதற்கான புதிய திட்டத்தை அரசு வகுத்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.
தற்போது நாட்டில் பயன்பாட்டில் உள்ள வாகனங்கள் பல, இன்சூரன்ஸ் இல்லாமல் இயங்கிக் கொண்டிருப்பதாக அதிர்ச்சியான தகவல் வெளியாகி உள்ளது. 40 சதவீதம் முதல் 50 சதவீதம் வரையிலான வாகனங்கள் இந்தியாவில் காப்பீடு இல்லாமல் இயங்கிக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகின்றது. இந்த வாகனங்களைக் கண்டறிந்து உடனக்குடன் இன்சூரன்ஸை வழங்கவே மத்திய அரசாங்கம் தற்போது திட்டம் போட்டு இருக்கின்றது.

இன்சூரன்ஸ் இல்லாமல் வாகனங்கள் இயக்கப்படுவது மோசமான சூழலை குறிக்கும் வகையில் உள்ளது. விபத்துகளின்போது ஏற்படும் பெரும் இழப்புகளை தவிர்க்க இன்சூரன்ஸ் திட்டம் பேருதவியாக இருக்கின்றது. இன்னும் தெளிவாகக் கூற வேண்டும் என்றால், விபத்தின்போது ஏற்படும் இழப்புகள் நம்மால் மீட்டெடுக்க முடியாத அளவில் இருக்கும்.
இத்தகைய சூழலைச் சமாளிக்க காப்பீட்டு திட்டங்கள் பெரும் உதவியாக இருக்கின்றன. ஆனால், இதனை பெரும்பாலான வாகனங்களின் உரிமையாளர்கள் உணராத சூழலே தென்படுகின்றது. இதன் விளைவாகவே அவர்கள் காப்பீடு இல்லாத வாகனங்களைக் கொண்டு சுற்றி வந்த வண்ணம் இருக்கின்றனர். இத்தகைய வாகனங்களையே நெடுஞ்சாலைகளில் வைத்து தேடி கண்டறியும் முயற்சியில் அரசாங்கம் களமிறங்க இருக்கின்றது.

மேலும், பிடிக்கப்பட்ட அந்த இடத்திலேயே வைத்து இன்சூரன்ஸை வழங்கவும் அரசு திட்டமிட்டு இருக்கின்றது. இன்சூரன்ஸுக்கான கட்டணம் ஃபாஸ்டேக் வாயிலாக பிடித்தம் செய்ய இருப்பதாக கூறப்படுகின்றது. குறைந்தபட்சம் மூன்றாம் நபர் காப்பீட்டு திட்டமே வாகனங்கள் பிடிக்கப்படும்போது வழங்கப்பட இருப்பதாக நம்பத் தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
மூன்றாம் நபக் காப்பீட்டு திட்டம் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவம் மற்றும் சிகிச்சைக்கான செலவுகளை வழங்க உதவியாக இருக்கும். எனவேதான் குறைந்தபட்ச இந்த திட்டத்தை காப்பீடே இல்லாமல் நெடுஞ்சாலையில் இயங்கிக் கொண்டிருக்கும் வாகனங்களுக்கு வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. புதிய திட்டத்தைத் தொடர்ந்து போக்குவரத்து காவல்துறையினர்களுக்கு கையடக்க கருவி ஒன்று வழங்கப்பட இருக்கின்றது.

இந்த கருவி வாயிலாக வாகனம் மற்றும் அந்த வாகனத்தின் உரிமையாளர் பற்றிய அனைத்து தகவல்களையும் போலீஸாரால் அறிந்துக் கொள்ள முடியும். குறிப்பாக, வாகனத்தின் விதிமீறல் வரலாறுகள், இன்சூரன்ஸ் திட்டம் மற்றும் லைசென்ஸ் வேலிடிட்டி போன்ற முக்கிய தகவல்கள் பலவற்றை அறிந்துக் கொள்ள முடியும்.
இந்த கருவி வாயிலாக இன்சூரன்ஸ் இல்லாமல் இயங்கும் வாகனங்கள் கண்டறியப்பட்டு அவற்றிற்கு பிடிக்கும் இடத்திலேயே இன்சூரன்ஸை வழங்க இருக்கின்றனர் காவல்துறையினர். ஃபாஸ்டேக்கில் தொகை போதிய அளவில் இல்லை என்றால் என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரியவில்லை. இதற்கும் வேறு வழிகள் உருவாக்கப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தற்போது அதிகாரிகளுக்கு சம்பவ இடத்திலேயே இன்சூரன்ஸை வழங்குவது பற்றிய ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்கான கூட்டம் மிக சமீபத்தில் நடைபெற்றது. ஜிஐசி நடத்திய இந்த கூட்டத்தில் ஸ்பாட் இன்சூரன்ஸ் பற்றி மிக தீவிரமாக ஆலோசிக்கப்பட்டது. மார்ச் 17 ஆம் தேதி அன்று இதுபற்றி மேலும் விவாதிக்கப்பட இருக்கின்றது.
ஆகையால், கூடிய விரைவில் நிகழ் இடத்திலேயே இன்சூரன்ஸ் இல்லாத வாகனங்களுக்கு காப்பீட்டை வழங்கும் புதிய விதி உருவாக்கப்பட்டு அமலுக்குக் கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. உலக அளவில் சாலை விபத்தில் உயிரிழக்கும் பத்து பேர்களில் ஒருவர் இந்தியாவில் இறப்பதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
இந்த மாதிரியான சூழலில் குடும்பத்தின் முக்கிய உறுப்பினரை இழந்து தவிக்கும் அந்த குடும்பத்திற்கு ஆறுதலாக கணிசமான உதவிகளை வழங்கிட காப்பீட்டு திட்டங்கள் பெரும் உதவியாக இருக்கின்றன. இது இல்லாமல் வாகனங்கள் இயங்குவது பெருத்த கவலையை ஏற்படுத்தக் கூடிய மற்றும் அதிர்ச்சியான தகவலாக இருக்கின்றது.


Click it and Unblock the Notifications
