பெட்ரோல், டீசல் காரை எலெக்ட்ரிக் காரா மாத்தினா பணம்! அரசின் அதிரடி அறிவிப்பால் பொதுமக்கள் உற்சாகம்!
உலகம் முழுவதும் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்கள் (Electric Vehicles) மிகவும் வேகமாக பிரபலமடைந்து வருகின்றன. பெட்ரோல் (Petrol) மற்றும் டீசல் (Diesel) மூலம் இயங்கும் வாகனங்கள் சுற்றுச்சூழலை மிக கடுமையாக மாசுபடுத்துவதால், பல்வேறு நாடுகளின் அரசுகளும் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவித்து வருகின்றன.
ஆனால் எலெக்ட்ரிக் வாகனங்களில் பயன்படுத்தப்படும் லித்தியம் அயான் பேட்டரிகளின் (Lithium-ion Battery) விலை மிகவும் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக எலெக்ட்ரிக் வாகனங்களின் விலையும் அதிகமாக இருக்கிறது. எனவே எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற வேண்டும் என்ற எண்ணம் பலருக்கும் இருந்தாலும், அவர்களால் அதை சாத்தியப்படுத்த முடிவதில்லை. எனவே உலகின் பல்வேறு நாடுகளின் அரசுகளும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுபவர்களுக்கு மானியங்கள் மற்றும் சலுகைகளை வழங்கி வருகின்றன.

சூப்பரப்பு!
இந்த வரிசையில் அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் அதிரடியான சலுகை ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. கலிபோர்னியா மாகாணத்தில் தற்போது புதிய மசோதா ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் கார்களை வைத்திருப்பவர்கள், அதனை எலெக்ட்ரிக் கார்களாக மாற்றி கொண்டால், அவர்களுக்கு 2 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் கிடைப்பதற்கு இந்த மசோதா வழிவகை செய்கிறது. அதாவது இந்திய மதிப்பில் சுமார் 1.65 லட்ச ரூபாய் கிடைக்கும்.
இதுதான் புத்திசாலித்தனம்!
அமெரிக்காவில் ஒரு புதிய எலெக்ட்ரிக் காரின் விலை சராசரியாக 66 ஆயிரம் டாலர்கள் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இது இந்திய மதிப்பில் சுமார் 55 லட்ச ரூபாய் ஆகும். ஆனால் பெட்ரோல், டீசலில் இயங்க கூடிய காரை எலெக்ட்ரிக் காராக மாற்றினால் சராசரியாக 14 ஆயிரம் டாலர்கள் மட்டுமே செலவாகிறது. இது இந்திய மதிப்பில் சுமார் 12 லட்ச ரூபாய் ஆகும். எனவே புதிதாக ஒரு எலெக்ட்ரிக் காரை வாங்குவதை காட்டிலும், ஏற்கனவே உள்ள பெட்ரோல், டீசல் காரை எலெக்ட்ரிக் காராக மாற்றி கொள்வது புத்திசாலித்தனமான ஒன்றாக கருதப்படுகிறது.

அதுக்குதான் பணம் தர்றாங்க!
ஆனால் இதற்கும் மக்கள் பணம் செலவழிக்க வேண்டும். எனவேதான் அவர்களை ஊக்குவிக்கும் விதமாக இந்திய மதிப்பில் சுமார் 1.65 லட்ச ரூபாய் வழங்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் பலர் தங்கள் பெட்ரோல், டீசல் கார்களை எலெக்ட்ரிக் கார்களாக மாற்றி கொள்ள முன்வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மசோதா மூலமாக மற்றொரு நன்மையும் கிடைக்கும் என அரசு எதிர்பார்க்கிறது.
மக்கள் மத்தியில் அமோக வரவேற்பாம்!
அதாவது கலிஃபோர்னியா மாகாணத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் கார்களை எலெக்ட்ரிக் கார்களாக மாற்றும் தொழில் துறை நன்கு வளர்ச்சியடையும் என கருதப்படுகிறது. இதன் காரணமாக இந்த துறையில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் எனவும் அரசு எதிர்பார்க்கிறது. எனவே இந்த மசோதாவிற்கு கலிஃபோர்னியா மாகாண மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக அங்கிருந்து வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவிலும்...
இந்தியாவிலும் கூட எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு மானியம், சாலை வரியில் இருந்து விலக்கு என இதேபோல் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை அதிகரித்த வண்ணம் உள்ளது. ஹூண்டாய் ஐயோனிக் 5 (Hyundai Ioniq 5) மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி400 (Mahindra XUV400) என இந்திய சந்தையில் வெகு சமீபத்தில் 2 முக்கியமான எலெக்ட்ரிக் கார்கள் விற்பனைக்கு களமிறக்கப்பட்டுள்ளன.
தொடங்கியது புரட்சி!
பொதுமக்கள் மத்தியில் எலெக்ட்ரிக் கார்களுக்கு கிடைக்க தொடங்கியுள்ள பிரம்மாண்டமான வரவேற்புதான் இதற்கு முக்கியமான காரணம். இதில், மஹிந்திரா எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் காருக்கு 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகள் குவிந்துள்ளன. அதே நேரத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட டாடா டியாகோ எலெக்ட்ரிக் காருக்கு (Tata Tiago EV) 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகள் கிடைத்துள்ளன. இந்தியாவில் எலெக்ட்ரிக் கார் புரட்சி தொடங்கி விட்டதை இந்த எண்கள் நமக்கு உணர்த்துகின்றன.


Click it and Unblock the Notifications