நூற்றுக் கணக்கான கோடி ரூபாய்களை புல்லட் ப்ரூஃப் காரை வாங்க செலவழித்ததா மத்திய அரசாங்கம்? ஏன்.. ஏன்?..
மத்திய அரசாங்கம் நூற்றுக் கணக்கான கோடி ரூபாய்களை புல்லட் ப்ரூஃப் (Bullet Proof) காரை வாங்க செலவழித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது உண்மையா?, எதற்காக இத்தனை கோடிகளை அது வாரி இறைத்துள்ளது? என்பதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
ஜி20 உச்சி மாநாடு வெகு விரைவில் இந்தியாவில் நடைபெற இருக்கின்றது. அது செப்டம்பர் 8 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 10 தேதி வரை தலைநகர் டெல்லியில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் ஜி20 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகள் பலர் கலந்துக் கொள்ள இருக்கின்றனர்.

Image Courtesy: Trvlez அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்ளிட்ட பலர் இந்த மாநாட்டில் கலந்துக் கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தகுந்தது. இவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்வதில் அரசு தற்போது கடமைப்பட்டு உள்ளது. இப்போதே இந்த பணியில் மத்திய அரசாங்கம் தீவிரமாகக் களமிறங்கி இருக்கின்றது.
இதன் அடிப்படையிலேயே மிகப் பெரும் தொகையை புல்லட் ஃப்ரூஃப் கார்களுக்காக அரசு செலவழித்திருப்பபதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நூற்றுக் கணக்கான கோடி ரூபாய்களையே அரசு இதற்காக வாரி இறைக்க தொடங்கி இருப்பதாகவும் கூறப்படுகின்றது. ஆனால், துள்ளியமான செலவு பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை. சில தகவல்கள் 400 கோடி ரூபாய் வரை இதற்காக அரசு வாரி இறைத்திருப்பதாக தெரிவிக்கின்றன.

இதுமட்டுமில்லைங்க, உச்சி மாநாடு நடைபெற இருக்கும் நாட்களில் மிகப் பெரிய மாற்றங்கள் டெல்லியில் மேற்கொள்ளப்பட இருக்கின்றது. உச்சி மாநாடு நடைபெற இருக்கும் அந்த குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டும் டெல்லி முழுவதும் உள்ள அலுவலகங்கள், வணிக வளாகங்கள் மற்றும் சந்தைகளை தற்காலிமாக இழுத்து மூட டெல்லி அரசாங்கம் திட்டமிட்டு உள்ளது.
இந்த நடவடிக்கை வெளிநாட்டில் இருந்து வரும் விருந்தினர்களுக்கு தடையில்லா மற்றும் பாதுகாப்பான போக்குவரத்தை மேற்கொள்ள உதவியாக இருக்கும். இவர்களின் பாதுகாப்பை கூடுதலாக்கும் பொருட்டே அரசு புல்லட் ப்ரூஃப் கார்களையும் பயன்பாட்டிற்குக் களமிறக்க இருக்கின்றது. மெர்சிடிஸ் பென்ஸ், ஆடி, பிஎம்டபிள்யூ நிறுவனங்களின் புல்லட் ப்ரூஃப் வசதிக் கொண்ட கார்கள் அவர்களின் பயன்பாட்டிற்குக் களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

குறிப்பாக, மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்600 புல்மேன் குவார்டு (Mercedes Benz S600 Pullman Guard) வகை காரை முக்கிய தலைவர்களின் பயன்பாட்டிற்கு களமிறக்கப்படலாம் என்று யூகிக்கப்படுகின்றது. இந்த ஒற்றை காரின் விலை மட்டுமே தோராயமாக ரூ. 12 கோடிக்கும் அதிகம் என கூறப்படுகின்றது.
இந்த சொகுசு கார் கையெறி குண்டு, கண்ணி வெடி மற்றும் துப்பாக்கி தோட்டாக்களின் தாக்கத்தில் இருந்து பயணிகளைப் பாதுகாக்கும் வசதிக் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுபோன்ற அதீத பாதுகாப்பை வழங்கக் கூடிய கார்களே உலக தலைவர்களின் பாதுகாப்பான பயணத்திற்காக ஜி20 உச்சி மாநாட்டின்போது பயன்படுத்தப்பட இருக்கின்றது.
ஒரு சில கார்கள் வெளிநாட்டில் இறக்குமதி செய்யப்பட்டும் பயன்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், பாதுகாப்பு காரணமாக இதுகுறித்த எந்தவொரு தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை. ஜி20 உறுப்பு நாடுகளாக இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், தெற்கு ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, பிரேசில், கனடா, சீனா, ஃபிரான்ஸ், இந்தோனேசியா, ஜெர்மனி, இத்தாலி, மெக்சிக்கோ, சவுதி அரேபியா, தென் கொரியா, துருக்கி, அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அர்ஜென்டினா ஆகியவையே இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஜி20 மாநாட்டை முன்னிட்டு 3 நாட்களுக்கு 160 உள்நாட்டு விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டு இருக்கின்றது. உச்சி மாநாடு முதல் முறையாக இந்தியாவில் நடைபெற இருக்கின்றது. ஆகையால், உலக நாடுகளின் கவனம் அனைத்தும் இந்தியா மீதே இருக்கின்றது.


Click it and Unblock the Notifications
