குடும்பத்தோட கார்ல போறது எல்லாம் இனி கனவு தான் போல! ஃபேமிலி கார்களுக்கு 22% கூடுதல் செஸ் வரி!
இந்தியாவில் எஸ்யூவி கார்களுக்கு 28 சதவீதம் ஜிஎஸ்டி போக கூடுதலாக 22 சதவீதம் செஸ் வரி விதிக்கப்பட்டுள்ளது. இது எஸ்யூவி மற்றும் எம்பிவி ரக கார்களுக்கு பொருந்தும். கார் தயாரிப்பாளர்கள் அந்த காருக்கு என்ன பெயர் வைத்தாலும் மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ள வகையில் அந்த கார் இருந்தால் அதற்கு கூடுதல் செஸ் வரி விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் எஸ்யூவி கார்களுக்கான விளக்கம் ஒன்று அளிக்கப்பட்டது. அதன்படி எந்த கார் நான்கு மீட்டருக்கு அதிகமான நிளத்தில் இருந்தாலும், 1500 சிசிக்கு அதிகமான இன்ஜினை பயன்படுத்தினாலும், 170 மிமீ அளவுக்கு அதிகமான கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்ட காராக இருந்தாலும் அது எஸ்யூவி காராக கருதப்படும் என அறிவித்திருந்தது.

இந்நிலையில் எஸ்யூவி கார்களுக்கான கூடுதல் செஸ் வரி விதிப்பது குறித்து ஜிஎஸ்டி கவுன்சிலில் ஆலோசனை நடத்தப்பட்டது. அதன்படி இந்தியாவில் விற்பனையாகும் எஸ்யூவி ரக கார்களுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி வரி போக கூடுதலாக 22 சதவீதம் வரை செஸ் வரி விதிக்கப்பட்டுள்ளது.
இது அரசு நிர்ணயம் செய்தபடி அனைத்து ரக எஸ்யூவி ரக கார்களுக்கும் பொருத்தும். சில கார் தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் கார்களை எம்பிவி மற்றும் எக்ஸ்யூவி ரக கார்களாக வகைப்படுத்துகின்றனர். அந்த கார்களுக்கு இந்த வரி விதிப்பு பொருந்துமா என்ற கேள்வி பல மாநில அரசுகள் இடையே இருந்தது.

இதற்கு பதில் அளித்த ஜிஎஸ்டி கவுன்சில் எந்த கார் எஸ்யூவி ரக காரின் அம்சங்களை கொண்டிருந்தாலும் அந்த கார் எஸ்யூவி ரக காராகவே கருதப்படும். உதாரணமாக ஒரு கார் 4 மீட்டருக்கு அதிகமான நீளத்துடனும் 1500 சிசி இன்ஜினுக்கு அதிகமான திறன் கொண்ட இன்ஜினுடனும் 170 மிமீ உயரத்திற்கு அதிகமான கிரவுண்ட் கிளியரன்ஸ் உடனும் இருந்தால் அது எஸ்யூவி ரக கார் தான்.
தற்போது இந்தியாவில் வாகனங்களுக்கு செஸ் வரி விதிக்கப்பட்டு தான் வருகிறது. இந்த வரி ஏற்கனவே வாகனங்களுக்கு உள்ள ஜிஎஸ்டி வரி போக கூடுதலாக விதிக்கப்படும் வரியாகும். வாகனத்தின் வகைக்கு ஏற்ப ஒரு சதவீதம் முதல் 22 சதவீதம் வரை செஸ் வரி விதிக்கப்படுகிறது.

அதே நேரம் டொயோட்டா நிறுவனத்தின் இன்னோவா கிரைஸ்டா, இன்னோவா ஹைகிராஸ், கியா கேரன்ஸ் உள்ளிட்ட கார்கள் வரி விதிப்பிற்கு ஏற்ற ரக எஸ்யூவி கார்களாக கருதப்படும். இதனால் இந்த கார்களின் விலை உயர வாய்ப்பு இருக்கிறது. இந்த 22 சதவீத செஸ் வரி விதிப்பால் கார்களின் ஆன்-ரோடு விலை கணிசமான அளவு உயர்ந்து விடும்.
இதுபோக சில கார்கள் ஏற்கனவே 22 சதவீத செஸ் வரியுடனே விற்பனையாகி வருவதால் இந்த கார்கள் தற்போதைய வரி விதிப்பால் பாதிக்கப்பட போவதில்லை இந்த கார்களின் விலை ஏற்கனவே விற்பனையாகி வந்த அதே விலை தான் தொடரும். அதேநேரம் எலெக்ட்ரிக் வாகனங்கள் ஹைபிரிட் வாகனங்களுக்கு இந்த செஸ் வரி பொருந்தாது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வரி விதிப்பு என்பது குறிப்பிட்ட பொருள் விற்பனையாவதால் சமூகத்தில் ஏற்படும் மற்ற பாதிப்புகளை கணக்கிட்டு அதற்காக வசூலிக்கப்படுகிறது. எஸ்யூவி ரக கார்கள் ஆடம்பர கார்களாக இந்தியாவில் பார்க்கப்படுகிறது இதனால் தான் இதற்கு அதிகமான வரி விதிப்பு விதிக்கப்படுகிறது. கிட்டத்தட்ட காரின் விலையில் பாதி விலை வரியாக விதிக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications









