ராஜா சார் பாட்ட போட்டுட்டு மழை டைம்ல நைட் டிராவல் பண்ணலாம்னு இருக்கீகளா? அதுக்கு முன்னாடி சரிபார்க்க வேண்டியவை
மழைக் காலங்களில் வாகனம் ஓட்டுவது பெரும் சிரமமான ஒன்று. குறிப்பாக, கன மழையின்போது அது கூடுதல் சவாலானதாக மாறிவிடுகின்றது. எனவேதான் சில நேரங்களில் விமான சேவை, ரயில் சேவை என போக்குவரத்து சேவைகள் அனைத்தும் கன மழை பொழியும்போது ரத்து செய்யப்பட்டு விடுகின்றன.
மிக மோசமாகக் காற்று வீசும் என்பதாலும், சாலையை தெளிவாகக் காண்பதில் சிரமம் ஏற்படும் என்பதாலும் மழைக் காலங்களில் பயணங்களைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்படுகின்றது. அதிலும், மழைக் கால இரவு நேர பயணம் கூடவே கூடாது என கூறப்படுகின்றது. இருப்பதிலேயே மிகவும் ஆபத்தானது இதுவாகும்.

இருப்பினும், சில நேரங்களில் அவசிய தேவையின் காரணமாக மழைக் காலங்களில் நாம் பயணிக்க வேண்டி இருக்கின்றது. இந்த பயணத்த தவிர்க்க முடியாது என்பதை நாங்கள் அறிவோம். மேலும், இதுமாதிரியான மழைக்கால இரவு நேர பயணங்களின்போது சில யுக்திகளைக் கையாள்வதனால் நம்மால் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்துக் கொள்ள முடியம். அப்படி என்ன யுக்திகள் அவை என கேக்குறீங்களா?, வாங்க இதுகுறித்த தகவலைதான் இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம்.
மழைக்கால இரவு நேர பயணத்தைத் தொடங்கும் முன் உங்கள் வாகனம் இரவு நேர பயணத்திற்கு தயாராக இருக்கின்றதா என்பதை ஒரு முறை சோதித்துக் கொள்ளவும். குறிப்பாக, இரவு நேர பயணத்திற்கு தேவையான மிக முக்கியாமன அம்சங்களில் லைட்டுகள் ஒன்றாகும். ஹெட்லைட் மட்டுமல்ல பின் பக்கத்தில் உள்ள அனைத்து லைட்டுகளும் நல்ல நிலையில் ஒளிர்கிறதா என்பதை ஒரு முறை டெஸ்ட் செய்துக் கொள்ளவும்.

இதுதவிர, இன்டிகேட்டர்கள், பார்க்கிங் லைட்டுகள் உள்ளிட்டவையும் நல்ல நிலையில் இயங்குகின்றதா என்பதை ஒரு சோதித்துக் கொள்வதே நல்லது. இரவு நேரங்களில் சாலையைத் தெளிவாகக் காணவும், நம்முடைய திருப்பங்கள் மற்றும் நிறுத்தங்களை மற்ற வாகனங்களுக்கு தெளிவாகத் தெரிவிக்கவும் மின் விளக்குகளே பெரும் உதவியாக இருக்கின்றன.
ஆகையால், அவற்றின் சீரான இயக்கம் என்பது மிகவும் அவசியமானதாக இருக்கின்றது. கூடுதலாக உங்கள் பனி மின் விளக்கு இருந்தால் அதையும் ஒரு முறை சோதித்துக் கொள்ளவும். பனி காலங்களில் மட்டுமல்ல சில நேரங்களில் மழைக் காலங்களிலும் சாலைகள் புகைமூட்டமாகக் காணக்கூடும். இந்த மாதிரியான சூழலில் தெளிவாக பாதையைக் காண பனி மின் விளக்குகள் பெரும் உதவியாக இருக்கும்.
இதுதவிர, வைப்பர் மற்றும் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்டவையும் நல்ல நிலையில் இயங்குகின்றதா என்பதை ஒரு முறை சோதித்துக் கொள்ளுங்கள். இது ஏதேனும் ஒன்று சரியாக வேலை செய்யவில்லை என்றாலும் அந்த பயணத்தை சிறிதும் யோசிக்காமல் உடனடியாக தவிர்த்துவிடுவதே நல்லது. இரண்டும் மிகவும் முக்கியமானவை.
சாதாரணமான நேரங்களிலேயே இந்திய சாலைகளில் வாகனங்களை ஓட்டுவதே மிக சிரமமாக இருக்கும். இந்த நிலையில் மழைக் காலத்தைப் பற்றிச் சொல்ல வேண்டிய அவசியமே இருக்காது. ஆகையால், பிரேக் மற்றும் வைப்பரின் இயக்கம் மிக சிறப்பாக இருக்க வேண்டிய கட்டாயமாக பார்க்கப்படுகின்றது. தொடர்ந்து, டயர்கள் நல்ல இருக்கின்றதா என்பதையும் பார்த்துக் கொள்ளுங்கள்.
மழைக் காலங்களில் சாலைகளில் வழு வழுப்பானதாக மாறிவிடும். இதனை ஹைட்ரோ பிளானிங் என்பர். இந்த சூழல் மிகவும் ஆபத்தான சூழலை ஏற்படுத்திவிடும். எனவே உங்கள் டயரும் வழு வழுப்பானதாக இருக்கும் எனில் தயவு செய்து டயரை மாற்றிவிடுங்கள். அதுவே உங்களுக்கும் உங்களுடைய பயணத்திற்கும் நல்லது.
நீங்கள் பயணிக்கும் பாதையில் தண்ணீர் வேகமாக ஓடிக் கொண்டிருந்தாலோ, குளம் போல் தேங்கி இருந்தாலோ முன்னேறி செல்வதை உடனே தவிர்த்துவிடுங்கள். இரவோ, பகலோ எந்த நேரத்திலும் இந்த மாதரியான பாதையில் பயணிக்க வேண்டாம். ஆழம் தெரியாமல் நாம் முன்னேறினாலும் வாகனத்தை தண்ணீரில் இழக்க நேரிடும்.
சில நேரங்களில் சாலைகளே ஆறாக மாறிவிடுகின்றன. இது தெரியாமல் நாம் வாகனத்தை இயக்கத்தினால் நம் வாகனம் காட்டாற்று வெள்ளத்தில் சிக்க நேரிடும். இதுதவிர, வானிலை அறிக்கைகளைத் தொடர்ச்சியாகக் கேட்டபடி பயணிக்க வேண்டும். நீங்கள் மலைப் பாதையில் உங்கள் பயணத்தை மேற்கொள்கிறீர்கள் எனில் வானிலை முன்னறிவிப்புகளை அறிந்துக் கொள்வது கட்டாயம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இது அனைத்தும் எங்களுக்கு ஓகே, எங்களின் பயணத்திற்கு எந்த தடையும் இல்லை என கூறினால் நீங்கள் தாராளமாக உங்கள் பயணத்தைத் தொடங்கலாம். குறிப்பாக, உங்கள் வாகனத்தில் எரிபொருள் நிரப்பட்டு இருக்கின்றது என்பதை பார்த்துவிட்டு உங்களின் பயணத்தை உற்சாகத்துடன் ஸ்டார்ட் செய்யலாம்.


Click it and Unblock the Notifications








