ரிப்பேருனு போகும்போது கார் அதிக செலவு தருவதை தவிர்க்க வேண்டுமா! கார் உற்பத்தியாளர்கள் சொல்லி தர மறந்த டிப்ஸ்!
"நல்ல ஓடிட்டு இருந்த கார், திடீர்னு போன வாரம் அவசர அவசரமா வெளிய போயிட்டு இருந்த நேரத்துல நின்னுடுச்சுங்க. என்னனு பாக்கலாம்னு மெக்கானிக்கிட்ட கொண்டுபோன, அவங்க அது போயடுச்சு, இது போயிடுச்சுனு, ஒரு ஆள் நீளத்துக்கு பில்லை போட்டு கொடுத்துட்டாரு. பில் மட்டும் இல்லைங்க, அதுல வந்த தொகையும் ரொம்ப அதிகம்.
இதுக்கு செலவு செய்யபோயி அந்த மாசத்தோட பட்ஜெட்டே பெருசா அடி வாங்கிருச்சு. இப்படியான இன்னலை உங்கள் காரினால் சந்தித்தவரா நீங்க? ரிப்பேருக்கு கொண்டு போகும்போது இதுபோன்று ஏற்படும் பெரும் செலவுகளைத் தவிர்க்க சிறந்த வழிகள் சில உள்ளன. அவை என்ன? என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

ஆயிலை மாற்ற வேண்டும்: நம் உடலில் ஓடும் ரத்தத்தைப் போல எஞ்ஜினுக்கு ஆயில் மிகவும் முக்கியமானதாக இருக்கின்றது. ரத்தத்தைச் சுத்தப்படுத்தும் வேலையை கல்லீரல், சிறுநீரகம், இதயம் மற்றும் நுரையீரல்கள் மேற்கொள்கின்றன. ஆனால், எஞ்ஜினில் ஊற்றப்படும் ஆயிலைச் சுத்தம் செய்வதற்கு பணியாள் உள்ளே கிடையாது. ஆகையால், அதை மாற்றியே ஆக வேண்டும் எனப்து கட்டாயம். இதைச் செய்யும் தவறும்பட்சத்திலேயே வாகனம் சில சிக்கல்களைச் சந்திக்கத் தொடங்குகின்றது.
குறிப்பாக, நீண்ட நாட்களாக மாற்றப்படாத ஆயில், எஞ்ஜினின் உட்பக்கத்தின் முக்கிய கூறுகளை பதம் பார்க்கத் தொடங்கும். ஆரம்ப கட்டத்தில் இது பெரிதாக தெரியாது. திடீரென்றே தலை வலியை அது உருவாக்கும். ஒரு அடிகூட நகராத அளவிற்கு வாகனம் பழுதடைய நேரிடும். மேலும், செலவையும் பெருசாக வைக்கும். இதனால்தான் ஆயில் மாற்றம் கட்டாயம் என்கின்றனர்.

பேட்டரியை சுத்தமாக பார்த்துக் கொள்ள வேண்டும்: பேட்டரி இருக்கும் இடத்தில் தூசி அல்லது ஆயில் படர்வதனால் அது ஷார்ட் சர்க்யூட் ஆக வாய்ப்புகள் இருக்கின்றன. பேட்டரி செயலிழக்க நேரிட்டால் வாகனத்தின் பெரும்பாலான மின் கருவிகள் இயங்காமல் முடங்கிவிடும். குறிப்பாக ஸ்டார்ட் செய்வதுகூட இயலாத ஒன்றாக மாறிவிடும். இதுபோன்ற சிக்கலைத் தவிர்க்க பேட்டரியை சுத்தமாக வைத்திருப்பது அவசியமாக பார்க்கப்படுகின்றது.
கேபினுக்கான ஏர் ஃபில்டரை சரியான நேரத்தில் மாற்ற வேண்டும்: நீங்கள் கார் பயணத்தின்போது ஏசியை அதிகம் பயன்படுத்துவீர்களா? உங்கள் ஏசி சரியாக வேலை செய்ய வேண்டும் என்றாலோ, உங்கள் காரின் கேபின் ஃப்ரெஷ்ஷாக இருக்க வேண்டும் என்றாலோ, இந்த ஏர் ஃபில்டரின் ஆரோக்கியம் என்பது மிகவும் முக்கியமானது.

இதில் சிக்கல் ஏற்படும் எனில் அது ஏசி சிஸ்டத்தை பதம் பார்க்கத் தொடங்கிவிடும். இது பெரும் செலவை ஏற்படுத்த நேரிடலாம். எனவே ஒவ்வொரு 12 மாதங்களுக்கு ஒரு முறை கேபின் ஏர் ஃபில்டரை மாற்றுவதை வழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள். இதனால் மட்டுமே தடையில்லா ஏசி பயன்பாட்டை பெற முடியும்.
விண்ட்ஷீல்டு வைப்பர்: மழைக்காலத்தில் மட்டுமே இது தேவைப்படும் என அலட்சியம் காட்ட வேண்டாம். இந்தியாவில் எப்போது மழை வரும் என்பதை யூகிக்கவே முடியாது. அதேநேரத்தில் பல நாட்களுக்கு பயன்படுத்தாமல் அப்படியே வைப்பரை விடுவதனால், அதன் இயக்கத்தில் சுணக்கம் ஏற்படும். நாளடைவில் அது முழுமையாக இயங்காமலேயே போகும். இந்த நிலையில் சிக்காமல் இருக்க அடிக்கடி அதை இயக்கி பார்க்க வேண்டும். அது இயங்கவில்லை எனில் உடனடியாக அதில் தீர்வு காண வேண்டும்.

அனைத்து மின் விளக்குகளையும் சரி பார்க்கவும்: ஹெட்லைட் மட்டுமல்ல இன்டிகேட்டரும் மிகவும் முக்கியமானது. இதில், எந்த ஒன்று வேலை செய்யவில்லை என்றாலும் அதை உடனடியாக கவனித்தே ஆக வேண்டும். இதை செய்யும் தவறும்பட்சத்தில் தேவையற்ற விபத்து போன்ற சிக்கல்களைச் சந்திக்க நேரிடும்.
இன்டிகேட்டர் போடாமல் திரும்பிய வாகனங்களால் ஏற்பட்ட விபத்துகள் நாட்டில் அதிகம். இதேபோல், இரவு நேரத்தில் ஹெட்லைட் இல்லாத காரணத்தினாலும் சில வாகனங்கள் விபத்தைச் சந்தித்து இருக்கின்றன. விபத்து மற்றும் விபத்தினால் ஏற்படும் பெரும் இழப்புகளை தவிர்க்க இந்த லைட்டுகளின் இயக்கம் மிகவும் அவசியமானதாக பார்க்கப்படுகின்றது.

சஸ்பென்ஷன் சிஸ்டம்: உங்கள் காரில் சஸ்பென்ஷன் சரியாக இயங்கவில்லை அல்லது ஆயில் லீக் ஆகிறது போன்ற ஏதேனும் சிக்கலைக் கொண்டிருக்கும் எனில் அதில் உடனடியாக கவனத்தைச் செலுத்தி மாற்றுவதே நல்லது. இல்லை எனில் பெரும் பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும். சரியாக இயங்காத சஸ்பென்ஷன் கொண்டிருக்கும் வாகனம், அந்த வாகனத்திற்கு மட்டுமல்ல அதனுள் பயணிக்கும் பயணிகளுக்கும் சில பின் விளைவுகளை ஏற்படுத்தும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இதுதவிர, டயர் மற்றும் பிரேக் பேட் உள்ளிட்டவற்றின் மீதும் அதிக கவனத்தைச் செலுத்த வேண்டும். இவற்றில் ஏதேனும் சிக்கல் ஏற்படும் என்றாலும் மிகப் பெரிய செலவையே அவை பின்னாளில் வழங்கும். ஆகையால், எந்த சூழலிலும் சின்ன பிரச்னை தானே அப்புறமா பாத்துக்கலாம் என தள்ளிப் போட வேண்டாம். இது நாளடைவில் பெரிய தலைவலியை ஏற்படுத்திவிடும் என்பதை மறவாதீர்.


Click it and Unblock the Notifications
