ஹோண்டா சிட்டி இனி விற்பனைக்கு கிடைக்காதா?.. நிறுவனத்தின் இறுதி பதில் என்ன? இதோ முழு விபரம்!
கடந்த சில தினங்கள் பிரபல கார் உற்பத்தி நிறுவனமான ஹோண்டா (Honda), அதன் புகழ்பெற்ற செடான் வகை கார் மாடல்களான சிட்டி (City) மற்றும் அமேஸ் (Amaze) ஆகியவற்றை விற்பனையில் இருந்து அகற்ற இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்த தகவலின் உண்மை நிலவரம் என்ன? என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.
உலக புகழ்பெற்ற கார் நிறுவனமாக ஹோண்டா இருக்கின்றது. இந்த நிறுவனம் இந்தியாவில் நீண்ட காலம் கழித்து இப்போதே எஸ்யூவி கார் பிரிவில் தன்னுடைய புதுமுக தயாரிப்பை விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது. எலிவேட் எனும் கார் மாடலையே அது எஸ்யூவி கார் பிரிவில் நீண்ட நெடு இடைவேளைக்கு பின்னர் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.

இந்த கார் மாடலுக்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைக்கத் தொடங்கி இருக்கின்றது. அதேவேளையில், இதன் மற்ற கார் மாடல்களான சிட்டி மற்றும் அமேஸ் ஆகிய செடான் வகை கார் மாடல்களுக்கும் கணிசமான அளவில் நல்ல வரவேற்பு நாட்டில் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.
இந்த மாதிரியான சூழலிலேயே ஹோண்டா நிறுவனம் ஒட்டுமொத்தமாக அதன் செடான் கார் விற்பனைக்கு முற்று புள்ளி வைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன. இந்த மாதிரியான சூழலிலேயே நிறுவனத்தின் முடிவு என்ன? என்பது பற்றிய விபரங்கள் தற்போது தெரிய வந்திருக்கின்றது.

அதாவது, ஹோண்டா அதன் செடான் கார்களை சந்தைப்படுத்துவதை இந்தியாவில் ஒரு காலமும் நிறுத்தாது என்கிற தகவலே தற்போது வெளியாகி இருக்கின்றது. ஆகையால், சிட்டி மற்றும் அமேஸ் ஆகிய செடான் கார் மாடல்கள் தொடர்ந்து நாட்டில் விற்பனைக்குக் கிடைக்கும் என்பது உறுதியாகி உள்ளது.
இதனை எச்டி ஆட்டோ தளமும் அதன் செய்தியின் வாயிலாக உறுதி செய்திருக்கின்றது. இந்தியாவில் எஸ்யூவி ரக கார்களுக்கு நல்ல டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது. இதனால்தான் மஹிந்திரா நிறுவனம் முழுமையாக எஸ்யூவி கார் உற்பத்திக்கு மாறி இருக்கின்றது. இன்னும் சில நிறுவனங்கள் இதேபாணியைக் கையாள திட்டமிட்டுக் கொண்டிருக்கின்றன.

இந்த நிறுவனங்களில் ஒன்றாகவே ஹோண்டாவும் மாற இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அதாவது, முழுக்க முழுக்க எஸ்யூவி கார்களை மட்டுமே அது விற்பனைச் செய்யப் போவதாகவும், செடான் கார் பிரிவிற்கு முழுமையாக முற்று புள்ளி வைக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த வதந்திகளுக்கு அந்நிறுவனம் தற்போது முற்று புள்ளி வைத்திருக்கின்றது.
அதேவேளையில், விரைவில் எலிவேட்டைத் தொடர்ந்து இன்னும் சில எஸ்யூவி ரக கார் மாடல்களை அது விற்பனைக்குக் கொண்டு வரவும் திட்டமிட்டு இருக்கின்றது. இதன்படி 2030 ஆம் ஆண்டிற்குள் சுமார் ஐந்து புதிய எஸ்யூவி கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய அது பிளான் போட்டு இருக்கின்றது.
ஆகையால், ஹோண்டா வாயிலாக இந்தியாவிற்கு பெரும் எஸ்யூவி கார் மழைக் காத்துக் கொண்டிருப்பது உறுதியாகி இருக்கின்றது. அவற்றுடன், அமேஸ் மற்றும் சிட்டி ஆகிய கார் மாடல்களும் விற்பனையில் தொடரும். நிறுவனத்தின் ஆரம்ப நிலை மற்றும் விலை குறைவான கார் மாடலாக அமேஸ் இருக்கின்றது.
மாதந்தோறும் 3 ஆயிரத்திற்கும் அதிகமான யூனிட்டுகள் இந்த கார் மாடல் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றது. இந்த கார் மாருதி சுஸுகி டிசையர், ஹூண்டாய் அவுரா மற்றும் டாடா டிகோர் ஆகிய கார் மாடல்களுக்கு போட்டியாக சந்தையில் உள்ளது. இதேபோல், சிட்டி கார் மாடலும் பலதரப்பட்ட கார் மாடல்களுக்கு டஃப்பான போட்டியைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றது.
மிக முக்கியமாக பிரீமியம் அம்சங்கள் நிறைந்த கார் மாடலான ஃபோக்ஸ்வேகன் விர்சுஸ் மற்றும் ஸ்கோடா ஸ்லேவியா ஆகியவற்றிற்கு கடுமையான போட்டியை சிட்டி வழங்கிக் கொண்டிருக்கின்றது. இதுதவிர, புதிய தலைமுறை வெர்னாவிற்கும் இந்த கார் எதிராளியாக இருக்கின்றது. ஒவ்வொரு மாதமும் சுமார் 1,500க்கும் அதிகமான யூனிட்டுகள் சிட்டி விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் செடான் ரக கார்களுக்கு வரவேற்பு தொடர்ச்சியாக குறைந்த வண்ணம் இருக்கின்றது. அதேவேளையில், குறிப்பிட்ட சில இந்தியர்கள் மத்தியில் இப்போதும் செடான் கார் மீதான மோகம் குறைந்ததாக தெரியவில்லை. இதனால்தான் இந்த பிரிவிற்கு இந்தியாவில் மறைவு என்பது எப்போதும் கிடையாது என்கின்றனர் ஆட்டோ துறையைச் சேர்ந்த வல்லுநர்கள். மேலும், இந்த பிரிவில் எப்போதும் ஹோண்டா அதன் ராஜ்ஜியத்தை நிலை நாட்டியபடியே இருக்கும் எனவும் யூகிக்க முடிகின்றது.


Click it and Unblock the Notifications









