இந்தியருக்குள்ள இவ்ளோ திறமையா!.. துருப்பிடித்த ஹோண்டா சிட்டி காரா இவ்ளோ அழகா மாறி இருக்கு!.. புல்லரிக்குது!
துருவிற்கு இரையாக இருந்த ஹோண்டா சிட்டி காரை இந்திய இளைஞர் ஒருவர் மிகவும் அழகிய காராக மாற்றி இருக்கின்றார். புதிய தோற்றம் இந்தியாவில் பயன்பாட்டிலேயே இல்லாத போர்ஷே 356 ஸ்பீட்ஸ்டர் சூப்பர் காரை பிரதிபலிக்கும் வகையில் இருக்கின்றது. இதுபற்றிய கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
இந்திய இளைஞர் ஒருவர் துருவிற்கு இரையாக இருந்த ஹோண்டா சிட்டி காருக்கு புதிய வாழ்வை வழங்கி இருக்கின்றார். அதாவது, புதிய தோற்றத்திற்கு அதனை மாற்றி இருக்கின்றார். அவர் மேற்கொண்டிருக்கும் உருமாற்றம் யாரும் நம்ப முடியாத ஓர் செயலாக இருக்கின்றது. ஹோண்டா சிட்டி கார்தானா அது என ஆச்சரியத்துடன் கேட்கின்ற அளவிற்கு அதன் உருவம் மாற்றப்பட்டு இருக்கின்றது.

இளைஞர் ஹோண்டா சிட்டி காருக்கு போர்ஷே 356 ஸ்பீட்ஸ்டர் தோற்றத்தை வழங்கி இருக்கின்றார். இந்த கார் மாடலின் சிங்கிள் யூனிட்கூட இந்தியாவில் பயன்பாட்டில் இல்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையிலேயே டூப்ளிகேட்டிங் செயலின் வாயிலாக போர்ஷே 356 ஸ்பீட்ஸ்டர் நாட்டில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு இருக்கின்றது.
போர்ஷே 356 ஸ்பீட்ஸ்டர் ஓர் அரிய வகை காராகும். இதன் தோற்றத்திற்கே ஹோண்டா சிட்டி தற்போது மாற்றப்பட்டு இருக்கின்றது. மேற்கத்திய நாடுகளில் போர்ஷே 356 ஸ்பீட்ஸ்டர் ரூ. 4 கோடிக்கும் அதிகமான விலையில் விற்கப்பட்டு வருகின்றது. இதுபோன்று அதிக விலையைக் கொண்டதாக இருப்பதாலும், இந்திய சாலைக்கு ஏற்ற திறன் வெளிப்பாட்டு வசதிக் கொண்டிருக்காத காரணத்தினாலும் இதன் ஒற்றை யூனிட்கூட இந்தியாவில் பயன்பாட்டில் இல்லாத நிலை தென்படுகின்றது.

ஆமாங்க, சூப்பர் ஃபாஸ்ட் வேகத்தில் செல்லக் கூடிய தரமான கார் மாடலே போர்ஷே 356 ஸ்பீட்ஸ்டர் ஆகும். இத்தகைய காராகவே ஹோண்டா சிட்டி செடான் கார் மாற்றப்பட்டு இருக்கின்றது. காரின் உருவம் மற்றும் சேஸிஸில் மிகப் பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன.
ஆனால், எஞ்ஜின் விஷயத்தில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் அப்படியே உள்ளது. ஹோண்டா சிட்டியில் 1.5 லிட்டர் நேச்சுரல்லி அஸ்பைரேட்டட் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டாரே போர்ஷே காராக மாறியிருக்கும் வாகனத்தில் இடம் பெற்றிருக்கின்றது. புதிய தோற்றத்தைத் தொடர்ந்து காரின் இடம் குறுகளாகி இருக்கின்றது.

இதன் விளைவாக காரின் சப்-ஃப்ரேம் மறு வடிவமைப்பு செய்யப்பட்டு அதிலேயே ரேடியேட்டர் மற்றும் எஞ்ஜின் நிலை நிறுத்தப்பட்டு இருக்கின்றன. உண்மையான போர்ஷே 356போல் அது தெரிய வேண்டும் என்பதற்காக இன்னும் பல மாற்றங்களை இளைஞர் செய்திருக்கின்றார். மேலும், இந்த காரில் புஷ்ராட் சஸ்பென்ஷன் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
இத்துடன், பஜாஜ் பல்சர் பைக்கில் பயன்படுத்தப்படும் ஷாக் அப்சார்பர்களும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. உண்மையான போர்ஷே காரை பிரதிபலிக்க வேண்டும் என்பதற்காக இதன் பாடி பேனல்களை பிரத்யேகமாக கண்ணாடி இழைகளால் அவர் தயாரித்திருக்கின்றது. இது மிகவும் இலகுவானது. அதேவேளையில், சற்றே உறுதித் தன்மைக் கொண்டதாகக் காட்சியளிக்கின்றது.
ஹோண்டா சிட்டியில் இருந்து போர்ஷே காராக மாறி இருக்கும் இந்த வாகனத்தை இந்திய சாலையில் எந்த தடையும் இன்றி பயன்படுத்த முடியுமா?, என நீங்கள் கேள்வி கேட்டால், எங்களுடைய பதில், முடியாது என்பதே ஆகும். ஆமாங்க, இந்தியாவில் மாடிஃபிகேஷன் செய்யப்பட்ட கார்களை பயன்படுத்த எந்த அனுமதியும் இல்லை.
குறிப்பாக, ஓர் வாகனத்தின் உண்மையான தோற்றத்தை மாற்ற இந்திய மோட்டார் வாகன சட்டத்தில் இடம் இல்லை. வாகனம் வாங்கப்படும்போது எத்தகைய தோற்றத்தில் இருக்கின்றதோ, அதே தோற்றம் மற்றும் நிறத்தில் மட்டுமே ஆதன் ஆயுட்காலம் வரை இருத்தல் வேண்டும் என விதிகள் கூறுகின்றன.
அதேவேளையில் சில மாற்றங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுகின்றது. ஆனால், அந்த மாற்றம் பற்றிய தகவலை அவ்வாகனத்தின் பதிவு சான்றில் சேர்த்துவிட வேண்டும். அவ்வாறு செய்யும் பட்சத்தில் மட்டுமே அந்த மாற்றம் லீகல் ஆகும். இல்லை எனில் அந்த செயல் சட்ட சிக்கலை ஏற்படுத்தக் கூடியதாக மாறிவிடும். ஆகையால், வாகனங்களில் எந்த மாற்றத்தையும் செய்யாமல் இருப்பதே மிக சிறந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இதற்கு முன்னதாகவும் வாகனங்கள் மாடிஃபிகேஷனுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கின்றன. அந்தவகையில், கடந்த காலங்களில் டாடா நானோ கார் ஹெலிகாப்டர் தோற்றத்திற்கும், லோடு ஆட்டோவை தங்கும் வீடாகவும் இந்திய இளைஞர்கள் மாற்றி இருக்கின்றனர். இதுமட்டுமின்றி, எரிபொருளில் ஓடும் வாகனங்களை மின்சாரத்தில் இயங்கும் ஆட்டோக்களாகவும் இந்தியர்கள் மாற்றி இருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications









