விலை ரூ.11 லட்சம் தான்! பலர் போட்டி போட்டு வாங்க போகிற ஹோண்டா கார்!! ஷோரூமில் இருந்து வெளியான வீடியோ
ஹோண்டா எலவேட் (Honda Elevate) கார் இந்தியாவில் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று (செப் 04) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில், எலவேட் காரின் விலை குறைவான ஆரம்ப நிலை வேரியண்ட் எவ்வாறு இருக்கும்? அதன் சிறப்பம்சங்கள் என்னென்ன? என்பது குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.
உயரமான எஸ்யூவி கார்களை வாங்கும் எண்ணம் கடந்த சில வருடங்களில் நம் மக்களிடத்தில் வெகுவாக அதிகரித்துள்ளது. ஆனால் அதேநேரம், நன்கு அளவில் பெரியதான எஸ்யூவி கார்களை அதிக பேரால் வாங்க முடிவதில்லை. அளவில் சற்று சிறியதான காம்பெக்ட் எஸ்யூவி கார்களையே நிறைய பேர் வாங்குகின்றனர். நன்கு உயரமாக வடிவமைக்கப்படுவதால், பெரியவர்களாக இருந்தால் 5 பேரும், சிறியவர்களாக இருந்தால் 6 பேரும் சவுகரியமாக காம்பெக்ட் எஸ்யூவி காரில் பயணிக்க முடியும்.

இதுவே பெரும்பாலான வாடிக்கையாளர்களுக்கு போதுமானதாக உள்ளது. இவ்வாறு கஸ்டமரின் தேவை மாறிவருவதை உணர்ந்த கார் நிறுவனங்கள் காம்பெக்ட் எஸ்யூவி கார்களை வரிசையாக அறிமுகம் செய்ய ஆரம்பித்தன. டாடா மோட்டார்ஸ் எல்லாம் 2017ஆம் ஆண்டிலேயே அதன் நெக்ஸான் காம்பெக்ட் எஸ்யூவி காரை அறிமுகம் செய்துவிட்டது. இந்த கார் பிரிவில் தனக்கான ஓர் இடத்தை பிடிக்க ஹோண்டா பல்வேறு முயற்சிகளை செய்துள்ளது.
ஆனால் எதுவும் ஒர்க் அவுட் ஆனது போல் தெரியவில்லை. இருந்தாலும் ஹோண்டா தனது முயற்சிகளை கைவிடவில்லை. இந்த வகையில், ஹோண்டா அடுத்ததாக அறிமுகப்படுத்தும் கார் ஹோண்டா எலவேட் ஆகும். எஸ்.வி, வி, வி.எக்ஸ் மற்றும் இசட்.எக்ஸ் என மொத்தம் 4 விதமான வேரியண்ட்களில் இந்த ஹோண்டா சப்-காம்பெக்ட் எஸ்யூவி கார் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. எலவேட்டின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.10,99,900 - ரூ.15,99,900 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளன.

விலைகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே, ஹோண்டா எலவேட் கார்கள் டீலர்ஷிப் ஷோரூம்களை வந்தடைய துவங்கிவிட்டன. அவ்வாறு, டீலர்ஷிப் ஷோரூம் ஒன்றுக்கு வந்த ஹோண்டா எலவேட்டின் ஆரம்ப நிலை எஸ்.வி வேரியண்ட்டை விவரிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. விலை குறைவான வேரியண்ட் என்பதால், ஹோண்டா எலவெட்டில் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட சில அம்சங்கள் இந்த எஸ்வி வேரியண்ட்டில் இல்லை என்பது இந்த வீடியோவை பார்க்கும்போது தெரிகிறது.
இந்த காரின் வெளிப்பக்கத்தில், வீல் கவர்கள், ஃபாக் விளக்குகள், பின்பக்க டீஃபாக்கர், பின்பக்க விண்ட்ஷீல்டுக்கான வாஷர் & வைபர் உள்ளிட்டவை இல்லை. சுமாராக விற்பனையாகும் நிஸான் மேக்னைட் மற்றும் ரெனால்ட் கைகர் போன்ற காம்பெக்ட் எஸ்யூவி கார்களில் கூட பின் விண்ட்ஷீல்டுக்கான வாஷர் & வைபர் எண்ட்ரீ-லெவல் வேரியண்ட்டில் இருந்தே வழங்கப்படுகின்றன. கதவின் வெளிப்பக்க கைப்பிடிகள் தனியாக தெரியும் விதமாக இல்லாமல், காரின் உடல் நிறத்திலேயே வழங்கப்பட்டு உள்ளன.

ஆனால், இந்த குறைப்பாடுகளை வேறு விதமாக ஹோண்டா சரி செய்துள்ளது. அதாவது, எலவேட் எஸ்வி வேரியண்ட்டில் கூட எல்இடி ஹெட்லைட்கள், எல்இடி டெயில்லைட்கள் ஸ்டாண்டர்ட் ஆன அம்சமாக வழங்கப்பட்டு உள்ளன. அதேபோல், கீலெஸ் எண்ட்ரீ மற்றும் புஷ்-பொத்தான் ஸ்டார்ட் உள்ளிட்டவையும் எலவேட் எஸ்வி வேரியண்ட்டில் இடம்பெற்றுள்ளன. காருக்கு உள்ளே ஸ்டேரிங் சக்கரத்தில் கண்ட்ரோல்களை பார்க்கப் முடிகிறது.
டேஸ்போர்டில் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் இல்லை. பின்பக்கத்தை காட்டும் வெளிப்புற கண்ணாடிகள் எலக்ட்ரிக் மூலமாக அட்ஜெஸ்ட் செய்யக்கூடியவைகளாக உள்ளன. ஆனால், அவற்றை எலக்ட்ரிக் உதவியுடன் மடக்க முடியாது. இந்த கண்ணாடிகளை கண்ட்ரோல் செய்யக்கூடிய ஸ்விட்ச்களையும், விண்டோ ஸ்விட்ச்களையும் இதற்கு முன் பல ஹோண்டா கார்களில் பார்த்துள்ளோம். கதவுகளில் கப் ஹோல்டர்கள் உள்ளன. இருக்கைகளின் தலையணையை அட்ஜெஸ்ட் செய்ய முடிகிறது.

போதுமான அளவில் க்ளோவ் பாக்ஸ் உள்ளது. அதேபோல், பின்பக்க பூட் ஸ்பேஸ் பகுதியும் 458 லிட்டர்கள் கொள்ளளவில் போதுமான அளவிற்கு உள்ளது. எலவேட்டின் இந்த ஆரம்ப நிலை எஸ்வி வேரியண்ட்டில் 16 இன்ச்சில் இரும்பு சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. கிரவுண்ட் கிளியரென்ஸ் அளவு 220மிமீ. ஹோண்டா எலவேட் காரில் 1.5 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் மட்டுமே ஒரேயொரு என்ஜின் ஆப்ஷனாக வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜினை 6-ஸ்பீடு மேனுவல் அல்லது சிவிடி கியர்பாக்ஸ் உடன் பெறலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹோண்டா எலவேட்டின் விலை குறைவான எண்ட்ரீ-லெவல் வேரியண்ட் எஸ்வி என கூறினாலும், இதன் எக்ஸ்-ஷோரூம் விலை கிட்டத்தட்ட ரூ.11 இலட்சமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ஆன்-ரோடு விலை ரூ.12 இலட்சத்துக்கு வந்துவிடும். ரூ.12 இலட்சத்துக்கு வாங்கப்படும் காரில் மேற்கூறப்பட்ட அம்சங்கள் போதுமானதாக எங்களுக்கு தோன்றவில்லை. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? கமெண்ட் செய்யவும்.


Click it and Unblock the Notifications









