எத்தனை நாள் தவம்! நாடே காத்து கிடந்த காரின் டெலிவரி தொடங்கியது! மாருதி, ஹூண்டாய்க்கு குளிர் காய்ச்சல்!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த கார்களில் ஒன்று ஹோண்டா எலவேட் (Honda Elevate). மிட்-சைஸ் எஸ்யூவி (Mid-size SUV) ரகத்தை சேர்ந்த ஹோண்டா எலவேட் கார், நேற்றுதான் (செப்டம்பர் 4) இந்திய சந்தையில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.
ஹோண்டா எலவேட் காரின் ஆரம்ப விலை (Price) 10.99 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 15.99 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும். இந்த விலைக்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக ஹோண்டா எலவேட் கருதப்படுகிறது.

ஹோண்டா எலவேட் கார், பாக்ஸி டிசைனில் (Boxy Design) வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரில், 17 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் முன் பகுதியில் பெரிய க்ரில் அமைப்பு, நேர்த்தியான எல்இடி ஹெட்லேம்ப்கள் ஆகியவையும் ஹோண்டா எலவேட் காரில் கொடுக்கப்பட்டுள்ளன.
வசதிகளை (Features) பொறுத்தவரையில், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே சப்போர்ட் வசதியுடன் புதிய 10.25 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் சன்ரூஃப், 7 இன்ச் செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் ஆகியவையும் ஹோண்டா எலவேட் காரின் முக்கிய அம்சங்களாக கருதப்படுகின்றன.

பாதுகாப்பை (Safety) பொறுத்தவரையில், அடாஸ் (ADAS) தொகுப்பு மிக முக்கியமான அம்சமாக உள்ளது. செயல்திறனை பொறுத்தவரையில் ஹோண்டா நிறுவனம் எலவேட் காரில் ஒரே ஒரு இன்ஜின் ஆப்ஷனை மட்டுமே வழங்கியுள்ளது. அது 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் (Petrol Engine) ஆகும்.
அதிகபட்சமாக 121 ஹெச்பி பவர் மற்றும் 145 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ள இந்த இன்ஜின் உடன், 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 7 ஸ்பீடு சிவிடி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஹோண்டா எலவேட் காரில் ஆரம்பத்திலேயே ஹைப்ரிட் இன்ஜின் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அது நடக்கவில்லை. எனினும் வரும் காலத்தில், ஹோண்டா நிறுவனம் எலவேட் காரில் ஹைப்ரிட் இன்ஜின் ஆப்ஷனை வழங்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹோண்டா சிட்டி (Honda City) செடான் காரில் பொருத்தப்பட்டுள்ள அதே பெட்ரோல் இன்ஜின்தான் தற்போது ஹோண்டா எலவேட் காரில் கொடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் மாடலில் பொருத்தப்பட்டுள்ள அதே ஹைப்ரிட் இன்ஜின்தான் எதிர்காலத்தில் ஹோண்டா எலவேட் காரிலும் வழங்கப்படும் என கூறப்படுகிறது. ஹோண்டா எலவேட் காருக்கு முன்பதிவுகளை (Bookings) ஏற்கும் பணிகள் ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக நடைபெற்று வருகின்றன. வாடிக்கையாளர்கள் பலர் 21 ஆயிரம் ரூபாயை முன்பணமாக செலுத்தி, ஹோண்டா எலவேட் காரை முன்பதிவு செய்து வருகின்றனர்.
இந்த சூழலில் முன்பதிவு செய்துள்ள வாடிக்கையாளர்களுக்கு ஹோண்டா எலவேட் காரை டெலிவரி (Delivery) செய்யும் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. ஹோண்டா எலவேட் காருக்காக மிக நீண்ட காலமாக காத்து கொண்டிருந்த வாடிக்கையாளர்களுக்கு இது மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாத தொடக்கத்திலேயே டெலிவரி தொடங்கப்பட்டுள்ளதால், ஹோண்டா எலவேட் கார், முதல் மாத விற்பனையிலேயே முத்திரை பதிக்கலாம் என எதிர்பார்க்கப்படுறது. ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta), கியா செல்டோஸ் (Kia Seltos) மற்றும் மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara) ஆகிய போட்டியாளர்களுக்கு இது கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தலாம்.


Click it and Unblock the Notifications








