ஹோண்டா கார்களை மீண்டும் நம்பி வாங்கும் மக்கள்!! இந்த ஒரு காரை தான் எல்லாரும் சூஸ் பண்றாங்க!
ஹோண்டா கார்ஸ் இந்தியா (Honda Cars India) நிறுவனத்தின் விற்பனைக்கு சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட எலெவேட் கார் முக்கிய பங்காற்றி வருகிறது. குறிப்பாக, கடந்த அக்டோபர் மாத விற்பனையில் எலெவேட் காரின் மூலமாக ஸ்கோடா, ஃபோக்ஸ்வேகன் போன்ற பிரபலமான கார் நிறுவனங்களை விற்பனையில் ஹோண்டா முந்தி உள்ளது.
இந்தியாவில் எஸ்யூவி கார்களை வாங்குவதற்கே நிறைய பேர் விரும்புகின்றனர். அந்த அளவிற்கு மக்களிடையே டிரெண்ட் மாற்றம் கண்டுள்ளது. இதனை பயன்படுத்திக் கொள்ளும் விதமாக சில மாதங்களுக்கு முன் எலெவேட் என்ற காரை இந்திய சந்தையில் ஹோண்டா அறிமுகப்படுத்தியது. ஆனால், மற்ற கார் நிறுவனங்கள் கடந்த பல வருடங்களாக எஸ்யூவி கார்களை சந்தையில் விற்பனை செய்து வருகின்றன.

இந்த வகையில் பார்த்தால், இந்த பந்தயத்தில் கடைசியாகவே ஹோண்டா இணைந்துள்ளது. லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட்டாக வந்துள்ளது என்பதை போல், எலெவேட் கார் இந்தியாவில் ஹோண்டா நிறுவனத்திற்கு ஒரு மொமண்ட்டை உருவாக்கி கொடுத்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். எலெவேட்டின் அறிமுகம் வரையில், ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனத்தின் விற்பனை அதாள பாதாளத்திற்கு செல்ல ஆரம்பித்தது.
ஸ்கோடா, ஃபோக்ஸ்வேகன் என ஐரோப்பிய கார் நிறுவனங்கள் இந்தியாவில் விற்பனையில் இந்த ஜப்பானிய கார் நிறுவனத்தை முந்த ஆரம்பித்தன. ஆனால், எப்போது எலெவேட் அறிமுகப்படுத்தப்பட்டதோ அப்போதில் இருந்து ஹோண்டாவின் மொத்த விற்பனை அதிகரிக்க துவங்கியுள்ளது. குறிப்பாக, கடந்த 2 மாதங்களாக கார்கள் விற்பனையில் ஸ்கோடா, ஃபோக்ஸ்வேகன் நிறுவனங்களை ஹோண்டா முந்தியுள்ளது.

ஒவ்வொரு மாதத்திலும் ஏறக்குறைய 5 ஆயிரம் எலெவேட் கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. கடந்த 2023 அக்டோபர் மாதத்தில் மொத்தம் 4,957 எலெவேட் கார்களை ஹோண்டா இந்திய சந்தையில் விற்பனை செய்துள்ளது. இந்தியாவில் தற்சமயம் மொத்தம் 8 விதமான காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் பல்வேறு விதமான பிராண்ட்களில் இருந்து விற்பனை செய்யப்படுகின்றன.
அவற்றுள், கடந்த அக்டோபர் மாத விற்பனையில் 4வது இடத்தில் எலெவேட் உள்ளது. முதல் 3 இடங்களில் முறையே ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ் மற்றும் மாருதி கிராண்ட் விட்டாரா உள்ளிட்டவை உள்ளன. மொத்தமாக, கடந்த அக்டோபர் மாதத்தில் 9,400 கார்களை இந்தியாவில் ஹோண்டா விற்பனை செய்துள்ளது.

அதாவது, ஹோண்டா பிராண்டில் இருந்து இருவரில் ஒருவர் எலெவேட் காரையே நிச்சயமாக தேர்வு செய்கின்றனர். ஹோண்டாவின் கார்கள் விற்பனை இவ்வாறு இருக்க, ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் கடந்த மாதத்தில் மொத்தம் 4,566 கார்களையும், ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் 4,089 கார்களையும் மட்டுமே கடந்த மாதத்தில் விற்பனை செய்துள்ளன.
ஹோண்டா எலெவேட் காருக்கு போட்டியாக ஸ்கோடா நிறுவனம் குஷாக் மாடலை விற்பனை செய்கிறது. அதேபோல், ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தில் இருந்தும் டைகுன் மாடல் விற்பனை செய்யப்படுகிறது. இவை இரண்டின் கடந்த அக்டோபர் மாத விற்பனை எண்ணிக்கைகள் முறையே 2,447 (குஷாக்) மற்றும் 2,219 (டைகுன்) ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சந்தைக்கு புதியதாக வரும் கார்களின் விற்பனை சில காலத்திற்கு உச்சத்தில் இருப்பது வழக்கம்தான். ஸ்கோடா குஷாக் மற்றும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் கார்களின் விற்பனை 2021-22 சமயத்தில் சிறப்பாக இருந்தது. ஆனால், இப்போதோ மாதத்திற்கு 2,000- 2,500 யூனிட்கள் மட்டுமே விற்பனையாகுகின்றன. ஆதலால், தொடர்ந்து விற்பனை சிறப்பாக இருக்க வேண்டுமெனில், காரின் நம்பகத்தன்மையை வாடிக்கையாளர்கள் பாராட்ட வேண்டியது அவசியம்.


Click it and Unblock the Notifications









