10 லட்ச ரூபாவுக்கே இவ்ளோ வசதிகள் கொண்ட தேர்வா!.. டாடா, கியா, மாருதி சுஸுகிக்கு இப்பவே அல்லு விட்ருக்கும்!
நீண்ட காலங்கள் கழித்து பிரபல கார் உற்பத்தி நிறுவனமான ஹோண்டா தன்னுடைய பிராண்டின்கீழ் புதிய எஸ்யூவி ரக கார் ஒன்றை விற்பனைக்கு வழங்க இருக்கின்றது. இப்போதைய நிலவரப்படி ஹோண்டா வெறும் செடான் ரக கார்களை மட்டுமே விற்பனைக்கு வழங்கிக் கொண்டு இருக்கின்றது.
அது, இந்தியாவின் எஸ்யூவி கார்கள் பிரிவில் இருந்து வெளியேறி பல காலங்கள் ஆகின்றன. இந்த குறையை போக்கும் விதமாகவே நிறுவனம் விரைவில் ஹோண்டா எலிவேட் எனும் புதுமுக கார் மாடலை இந்திய சந்தையில் விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது. இது ஓர் மிட்-சைஸ் எஸ்யூவி ரக காராகும்.

இந்த காருக்கு ஏற்கனவே புக்கிங் பணிகள் நாட்டில் தொடங்கிவிட்டன. ரூ. 21 ஆயிரம் முன் தொகையில் எலிவேட்டிற்கான முன்பதிவுகள் ஏற்கப்பட்டு வருகின்றன. இதன் விலைகள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. விரைவில் இது பற்றிய விபரங்களை நிறுவனம் வெளியிட இருக்கின்றது. இந்த மாதிரியான சூழலில் சமீபத்தில் இணையத்தின் வாயிலாக இந்த காரின் விலை விபரங்கள் கசிந்தன.
புதிய ஹோண்டா எலிவேட் ரூ. 10 லட்சம் அல்லது ரூ. 11 லட்சம் என்கிற மிகக் குறைவான ஆரம்ப விலையில் விற்பனைக்கு வர இருப்பதாகவே அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இது எஸ்யூவி கார் பிரியர்கள் மத்தியில் மிகுந்த குஷியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது.

இந்தமாதிரியான சூழலிலேயே புதிய ஹோண்டா எலிவேட் எத்தனை விதமான வேரியண்டுகளில் விற்பனைக்கு வரும் என்கிற விபரம் தற்போது வெளியாகி இருக்கின்றது. நான்கு விதமான வேரியண்டுகளிலேயே ஹோண்டா எலிவேட் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. எஸ்வி (SV), வி (V), விஎக்ஸ் (VX) மற்றும் இசட்எக்ஸ் (ZX) ஆகிய தேர்வுகளிலேயே அது கிடைக்கும்.
இதில் ஆரம்ப நிலை தேர்வாக 'எஸ்வி' இருக்கும். இதுவே ரூ. 10 லட்சம் அல்லது 11 லட்ச ரூபாய்க்கு விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இதிலேயே எக்கசக்க சிறப்பு வசதிகளை ஹோண்டா வழங்க இருக்கின்றது. எல்இடி புரஜெக்டர் ரக ஹெட்லைட், எல்இடி டெயில் லேம்ப்புகள், எஞ்ஜின் புஷ் ஸ்டார்ட் பட்டன், பிஎம் 2.5 ஏர் ஃபில்டர் உள்ளிட்டவை எஸ்வி தேர்வில் இடம் பெற இருக்கின்றன.

இதுதவிர, ஆர்16 வீல்கள், 60:40 எனும் முறையில் மடித்துக் கொள்ளும் வசதிக் கொண்ட பின் பக்க இருக்கைகள், இரட்டை ஏர் பேக்குகள் உள்ளிட்ட வசதிகளும் ஹோண்டா எலிவேட்டின் ஆரம்ப நிலை வேரியண்டான எஸ்வி-யில் இடம் பெற இருக்கின்றன. இதேபோல், இதற்கு அடுத்த நிலையில் இருக்கும் 'வி' வேரியண்டிலும் எண்ணற்ற சிறப்பு வசதிகளை ஹோண்டா வழங்கி இருக்கின்றது.
மேலே பார்த்த அம்சங்களுடன் சேர்த்து இன்னும் சில சிறப்பு அம்சங்களை இந்த வேரியண்டில் அது வழங்கி இருக்கின்றது. இணைப்பு அம்சங்கள் மற்றும் பொழுதுபோக்கிற்கான அம்சங்கள் என பல இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. பொழுதுபோக்கு வசதிக்காக ஃப்ளோட்டிங் ரக 8 அங்குல தொடுதிரை, ஆடியோ சிஸ்டம், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ இணைப்பு மற்றும் ஹோண்டா இணைப்பு ஆகியவை இதில் கொடுக்கப்பட்டு இருக்கும்.

மேலும், காரில் வழங்கப்பட்டு இருக்கும் இணைப்பு வசதிகளை பயன்படுத்திக் கொள்ளும் விதமாக பிரத்யேக செயலி, பன்முக கன்ட்ரோல்கள் கொண்ட ஸ்டியரிங் வீல், பல விதமான ஆங்கிள்களில் பார்க்கும் வசதிக் கொண்ட கேமிரா உள்ளிட்டவையும் வி வேரியண்டில் வழங்கப்பட்டு இருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
அடுத்தபடியாக, விஎக்ஸ் வேரியண்ட் இருக்கின்றது. இந்த தேர்விலும் மேலே பார்த்த இரு தேர்வுகளிலும் காணப்படக் கூடிய முக்கிய தொழில்நுட்ப கருவிகள் அனைத்தும் இடம் பெற்றிருக்கும். அதுபோக இன்னும் பல சிறப்பு வசதிகளையும் இது கூடுதலாக பெற்றிருக்கும். இதன் காரணத்தினாலேயே மேலே பார்த்த இரண்டு தேர்வுகளைக் காட்டிலும் உயர் நிலை தேர்வாக இந்த விஎக்ஸ் காட்சியளிக்கின்றது.

அந்தவகையில் ஒரே டச்சிலேயே திறந்துக் கொள்ளும் வசதிக் கொண்ட எலெக்ட்ரிக் சன்ரூஃப், ஆர்17 டூயல் டோன் டைமண்ட் கட் அலாய் வீல்கள் மற்றும் ரூஃப் ரெயில்கள் ஆகியவை விஎக்ஸ் தேர்வில் இடம் பெற்றிருக்கும். இதை வைத்து பார்க்கையில் இந்த தேர்வில் கூடுதல் தொழில்நுட்ப வசதிகள் மட்டுமின்றி காரின் கவர்ச்சியைக் கூட்டக் கூடிய அழகு பொருட்களும் அதிகமாக இடம் பெற்றிருக்கும் என தெரிகின்றது.
இவற்றுடனேயே 7 அங்குல எச்டி வண்ண டிஎஃப்டி மீட்டர் க்ளஸ்டர், பாதுகாப்பு வசதியைக் கூட்டும் விதமாக சாலைகளை கண்கானிக்கும் கேமிரா, ஒயர்லெஸ் சார்ஜர், ஆட்டோ ஃபோல்டிங் கண்ணாடிகள், எல்இடி புரஜெக்டர் பனி மின் விளக்கு மற்றும் ஆறு ஸ்பீக்கர்கள் அடங்கி ஸ்பீக்கர் சிஸ்டம் என எக்கசக்க அம்சங்கள் இந்த விஎக்ஸ் தேர்வில் வழங்கப்பட்டு இருக்கின்றன.
மேலே பார்த்த அம்சங்கள் எல்லாம் எங்களுக்கு போதாது. இன்னும் அதிக அட்வான்ஸ்டு தொழில்நுட்பங்களே எங்களுக்கு வேண்டும் என நினைப்பவர்களாக நீங்கள் இருந்தால் உங்களுக்கான கடைசி மற்றும் உயர்நிலை தேர்வே 'இசட்எக்ஸ்' ஆகும். இந்த தேர்வில் சிறப்பு வசதிகளை ஹோண்டா மிக தாராளமாக வழங்கியிருக்கின்றது. ஹோண்டா சென்சிங், அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம், வழக்கமான ஏர்பேக்குகளுடன் சேர்த்து சைடு மற்றும் கர்டைன் ரக ஏர்-பேக்குகள் உள்ளிட்டவை இந்த தேர்வில் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இதுமட்டுமா, கூடுதல் சிறப்பு வசதிகளாக ஃப்ளோட்டிங் ரக 10.25 அங்குல அட்வான்ஸ்டு தொடுதிரை சிஸ்டம், 8 ஸ்பீக்கர்கள் கொண்ட ஆடியோ சிஸ்டம், டேஷ்போர்டில் சாஃப்ட் டச் பேட்கள், லெதர் போர்த்தப்பட்ட இருக்கைகள், தானாகவே டிம்மாகும் ஐஆர்விஎம் (inside rearview mirror) மற்றும் குரோம் கதவு கைப் பிடிகள் என எக்கசக்க வசதிகளை ஹோண்டா வாரி வழங்கி இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மேலே பார்த்த அம்சங்கள்போக இன்னும் பல சிறப்பு அம்சங்களையும் ஹோண்டா தனது புதிய எலிவேட் மிட்சைஸ் எஸ்யூவி காரில் வாடிக்கையாளர்களைக் கவரும் பொருட்டு வழங்க இருக்கின்றது. இதனால்தான் இதன் அதிகாரப்பூர்வ விலை அறிவிப்பிற்காக இந்தியர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். அதேவேளையில், ஹோண்டா தயாரிப்பை விரும்பும் வாடிக்கையாளர்கள் சிலர் ஏற்கனவே இந்த எலிவேட்டை புக் செய்ய தொடங்கிவிட்டனர்.


Click it and Unblock the Notifications









