ரொம்ப நல்ல காராச்சே ஹூண்டாய் கிரெட்டா... அதுக்கே ஆப்பு வைக்க போகுதா ஹோண்டா எலிவேட்.. ஒப்பீட்டு தகவல்!
இந்தியர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்த கார் மாடல்களில் ஹோண்டா எலிவேட் (Honda Elevate)-ம் ஒன்று. இந்த காரையே ஹோண்டா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக இன்று (ஜூன் 6) காட்சிப்படுத்தியது. விரைவில் இந்திய சந்தையில் இந்த காரை விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றநிலையிலேயே இந்த செயலை ஹோண்டா செய்திருக்கின்றது.
இந்த கார் இந்தியாவின் மிட்-சைஸ் எஸ்யூவி கார் சந்தையில் விற்பனைக்குக் களமிறக்கப்பட இருக்கின்றது. இந்த சந்தையில் ஏற்கனவே ஹூண்டாய் கிரெட்டா (Hyundai Creta), கியா செல்டோஸ் (Kia Seltos), மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara) மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder) ஆகிய கார் மாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கின்றன.

குறிப்பாக, ஹூண்டாய் கிரெட்டாவிற்கு கிடைத்துக் கொண்டிருக்கும் வரவேற்பு மிக அமோகமானது. இவற்றிற்கு கிடைத்துக் கொண்டிருக்கும் சிறப்பான வரவேற்பிற்கு ஆப்பு வைக்கும் வகையிலேயே ஹோண்டா அதன் எலிவேட் மிட் சைஸ் எஸ்யூவி ரக காரை விரைவில் இந்திய சந்தையில் விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது.
இதன் வருகை கட்டாயம் கிரெட்டாவின் விற்பனையில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என யூகிக்கப்படுகின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக ஒரு சில விஷயங்களில் ஹோண்டா எலிவேட், கிரெட்டாவிற்கு டஃப் கொடுக்கும் வகையில் இருக்கின்றது. அவை என்ன? அதாவது, ஹோண்டா எலிவேட் மற்றும் ஹூண்டாய் கிரெட்டா இடையே இருக்கும் வித்தியாசங்கள் என்ன என்பதையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.
மோட்டார்: இப்போது வெளியாகி இருக்கும் தகவலின்படி ஹோண்டா எலிவேட் காரில் 1.5 லிட்டர் நேச்சுரல்லி அஸ்பைரேட்டட் டிஆஎச்சி ஐ-விடெக் மோட்டாரே பயன்படுத்தப்பட இருப்பது தெரிய வந்திருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 120 பிஎச்பி பவரையும், 145 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது.
இந்த ஒற்றை மோட்டார் தேர்வில் மட்டுமே எலிவேட் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. ஆனால், ஹூண்டாய் கிரெட்டா இரு விதமான மோட்டார் தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. பெட்ரோல் மற்றும் டீசல் என இரு ஆப்ஷன்களும் அதில் வழங்கப்படுகின்றது.
1.5 லிட்டர் பெட்ரோல் மோட்டார் 113.42 பிஎச்பி-யையும், 144 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். இது ஹோண்டா எலிவேட்டைக் காட்டிலும் குறைவான பவர் ஆகும். கிரெட்டாவின் 1.5 லிட்டர் டீசல் மோட்டார் 114.41 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனாக ஹூண்டாய் கிரெட்டாவின் பெட்ரோல் மோட்டாருடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மட்டுமே வழங்கப்படுகின்றது.
அதேவேளையில், இதன் டீசல் மோட்டார் தேர்வில் 6 ஸ்பீடு ஏடி மற்றும் 6 ஸ்பீடு ஐவிடி ஆகிய ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றது. ஹோண்டாவில் 6 ஸ்பீடு எம்டி மற்றும் சிவிடி இரு ஆப்ஷன்களும் வழங்கப்பட இருக்கின்றது. இதை வைத்து பார்க்கையில் கிரெட்டாவின் பெட்ரோல் ஆப்ஷனைக் காட்டிலும் எலிவேட்டின் பெட்ரோல் ஆப்ஷன் மிக சிறந்த தேர்வாக இருக்கும் என யூகிக்க முடிகின்றது.

காரின் டைமென்ஷன்: அளவிலும் ஹூண்டாய் கிரெட்டாவை, ஹோண்டா எலிவேட் பின்னுக்கு தள்ளி இருக்கின்றது. எலிவேட் 4312 மிமீ நீளத்தையும், 1650 மிமீ உயரத்தையும், 1790 மிமீ அகலத்தையும் கொண்டதாக இருக்கின்றது. இதன் வீல் பேஸ் 2650 மிமீ ஆகும். இதைவிட குறைவான அளவைக் கொண்டதே ஹூண்டாய் கிரெட்டா. இதன் நீளம் 4300 மிமீ ஆகும்.
மேலும், உயரம் 1635 மிமீட்டரையும், அகலம் 1790 மிமீட்டரையும் கொண்டதாக கிரெட்டா இருக்கின்றது. இதன் வீல் பேஸ் 2610 மிமீ ஆகும். பூட் ஸ்பேஸ் விஷயத்திலும் கிரெட்டா பின் தங்கியே இருக்கின்றது. 433 லிட்டர் பூட் ஸ்பேஸை மட்டுமே அது கொண்டிருக்கின்றது. ஆனால், ஹோண்டா எலிவேட்டின் பூட் ஸ்பேஸ் 458 லிட்டர் ஆகும்.
இதுபோன்று அனைத்திலும் விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் ஹோண்டா எலிவேட் அதிக சிறப்புகளைத் தாங்கியதாகக் காட்சியளிக்கின்றது. அந்தவகையில், 10.25 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 7 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், ஒயர்லெஸ் செல்போன் சார்ஜர், க்ரூஸ் கன்ட்ரோல், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா மற்றும் எலெக்ட்ரிக் சன்ரூஃப் உள்ளிட்ட வசதிகளை எலிவேட் பெற்றிருக்கின்றது.
ஹூண்டாய் கிரெட்டா காரில் 10.25 இன்ச் அளவுள்ள தொடு திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், போஸ் சவுண்ட் சிஸ்டம், பனோராமிக் சன்ரூஃப், ஸ்டியரிங் வீலில் பெடல் ஷிஃப்டர் போன்ற பல்வேறு சிறப்பு அம்சங்கள் இந்த காரில் வழங்கப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி, ஒயர்லெஸ் செல்போன் சார்ஜர், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், பின்பக்கத்திற்கான ஏசி வெண்டுகள் போன்ற அம்சங்களும் ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி காரில் வழங்கப்பட்டிருக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹோண்டா எலிவேட் உடல் அளவிலும், எஞ்ஜின் விஷயத்திலும் ஹூம்டாய் கிரெட்டாவை வீழ்த்தும் வகையில் இருந்தாலும் சிறப்பம்சங்கள் விஷயத்தில் இரண்டும் இணையானதாகவே காட்சியளிக்கின்றன. இன்னும் ஒரு சில மாதங்கள் அல்லது வாரங்களில் அதிகாரப்பூர்வமாக எலிவேட் விற்பனைக்கு வர இருக்கின்றது. இதற்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








