போட்டி வலுவாக இருக்கும்!! சமாளிக்குமா இந்த புதிய ஹோண்டா கார்? கொரியன்-ஸ்டைல் கார்கள் போட்டிக்கு ரெடியாக!
ஹோண்டா எலவேட் (Honda Elevate) காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அறிவிக்கப்பட்டு உள்ளன. எஸ்.வி, வி, வி.எக்ஸ் மற்றும் இசட்.எக்ஸ் என மொத்தம் 4 விதமான வேரியண்ட்களில் எலவேட் காரை ஹோண்டா நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. இவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.11 லட்சத்தில் இருந்து ரூ.16 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட்டு உள்ளன.
இந்த புதிய ஹோண்டா காம்பெக்ட் எஸ்யூவி காரின் நீளம் 4,312மிமீ, அகலம் 1,790மிமீ, உயரம் 1,650மிமீ மற்றும் வீல்பேஸ் நீளம் 2,650மிமீ ஆகும். தரையில் இருந்து காரின் அடிபகுதி ஆனது 220மிமீ உயரத்தில் அமைந்துள்ளது. காரின் பின்பக்கத்தில் பொருட்களை வைக்கும் பூட் ஸ்பேஸ் பகுதி 458 லிட்டர்கள் கொள்ளளவில் உள்ளது. எலவேட் காரை ஒரேயொரு என்ஜின் ஆப்ஷனில் மட்டுமே ஹோண்டா அறிமுகப்படுத்தி உள்ளது.

இந்த வகையில் ஹோண்டா எலவேட் காரில் கிடைக்கும் 1.5 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 121 எச்பி மற்றும் 145 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜினை 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் பெறலாம். எலவேட் காரில் 10.25-இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், அடாஸ் (ADAS) என ஏகப்பட்ட மாடர்ன் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்திய சந்தையில் ஹோண்டா எலவேட் காருக்கு பல்வேறு காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் விற்பனையில் போட்டியாக விளங்குகின்றன. அவற்றுள் முக்கியமான இரண்டு கார்களாக ஹூண்டாயின் கிரெட்டா, கியாவின் செல்டோஸ் விளங்குகின்றன. ஏனெனில், கொரியன் ஸ்டைல் கார்களான இவை இரண்டும் தான் தற்சமயம் இந்திய காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் பிரிவில் அதிகம் விற்பனை ஆகுபவைகளாக உள்ளன.

ஹூண்டாய் கிரெட்டாவை பொறுத்தவரையில், இது இ, இ.எக்ஸ், எஸ், எஸ்.எக்ஸ், எஸ்.எக்ஸ் (ஆப்ஷ்னல்) என 5 விதமான வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.10.87 லட்சத்தில் இருந்து ரூ.19.20 லட்சம் வரையில் உள்ளன. எலவேட் போல் இல்லாமல், கிரெட்டா காரை 1.5 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் வாங்கலாம்.
ஹூண்டாய் கிரெட்டா காரின் நீளம் 4,300மிமீ, அகலம் 1,790மிமீ, உயரம் 1,635மிமீ, வீல்பேஸ் நீளம் 2,610மிமீ ஆகும். இந்த காரின் கிரவுண்ட் கிளியரென்ஸ் 190மிமீ ஆகவும் பூட் ஸ்பேஸ் அளவு 433மிமீ ஆகவும் உள்ளன. கிரெட்டாவில் அடாஸ் வழங்கப்படுவது இல்லை. ஆனால், 10.25-இன்ச் டச் ஸ்க்ரீன், போஸ் ஆடியோ சிஸ்டம், 7.0-இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், லெதர் வென்டிலேட்டட் முன் இருக்கைகள், எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் உள்ளிட்டவை கிரெட்டாவில் இடம்பெறுகின்றன.
மறுப்பக்கம் கியா செல்டோஸை பொறுத்தவரையில், இந்த காம்பெக்ட் எஸ்யூவி கார் எச்.டி.இ, எச்.டி.கே, எச்.டி.கே பிளஸ், எச்.டி.எக்ஸ், எச்.டி.எக்ஸ் பிளஸ், ஜி.டி.எக்ஸ் பிளஸ் மற்றும் எக்ஸ்-லைன் என நிறைய வேரியண்ட்களில் கிடைக்கிறது. அதேபோல், செல்டோஸை 1.5 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின், 1.5 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் என்ஜின் என மொத்தம் 3 விதமான என்ஜின் ஆப்ஷன்களில் வாங்கலாம்.

கியா செல்டோஸின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.10.9 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சம் வரையில் உள்ளன. செல்டோஸின் நீளம் 4,315மிமீ, அகலம் 1,800மிமீ, உயரம் 1,645மிமீ, வீல்பேஸ் 2,610மிமீ, கிரவுண்ட் கிளியரென்ஸ் 190மிமீ மற்றும் பூட் ஸ்பேஸ் 433 லிட்டர்கள் ஆகும். 10.25-இன்ச் கனெக்டட் திரைகள், பனோராமிக் சன்ரூஃப், 360-டிகிரி கேமரா, ட்யூயல்-ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல் உள்ளிட்டவை செல்டோஸின் முக்கிய சிறப்பம்சங்கள் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பரிமாண அளவுகளை பொறுத்தவரையில், ஹோண்டா எலவேட், ஹூண்டாய் கிரெட்டா மற்றும் கியா செல்டோஸ் இவை மூன்றிற்கும் இடையே பெரியதாக எந்த வித்தியாசமும் இல்லை. டிசைனில் மூன்றும் வேறுப்படுகின்றன. அதேபோல், தொழிற்நுட்ப அம்சங்களிலும் இவை மூன்றும் வித்தியாசப்படுகின்றன. குறிப்பாக, அடாஸ் வழங்கப்படுவது புதிய ஹோண்டா எலவேட்டின் பிளஸ் பாயிண்ட் ஆகும்.


Click it and Unblock the Notifications









