ஹோண்டா வெப்சைட்டில் தேடினாலும் பெயர் இருக்காது... இந்திய மார்க்கெட்டை விட்டு நடையை கட்டிய 3 ஹோண்டா கார்கள்!!
விற்பனை நிறுத்தப்பட்டுள்ள ஹோண்டா கார்களின் பெயர்கள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களையும், விற்பனை நிறுத்தப்பட்டுள்ள ஹோண்டா கார்களை பற்றியும் இனி தொடர்ந்து பார்க்கலாம்.
புதிய மாசு உமிழ்வு விதிமுறைகள் உள்ளிட்ட கட்டுப்பாடுகளினால் அவ்வப்போது காரை அப்டேட்டாக வைத்திருக்க வேண்டிய கட்டாயம் கார் நிறுவனங்களுக்கு ஏற்படுகிறது. இந்த வகையில் இந்திய சந்தையை விட்டு விடைப்பெற்று சென்ற கார்கள் பலவற்றை கடந்த காலங்களில் இருந்து பார்த்து வருகிறோம். நடப்பு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிமுறைகளின் 2ஆம் கட்ட கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன.

2020 ஏப்ரல் முதல் அமலுக்கு வந்த பிஎஸ்6-இன் முதல்கட்ட கட்டுப்பாடுகளை போன்று 2ஆம் கட்ட விதிமுறைகளும் சில பல கார்களை சந்தையை விட்டு அனுப்பியுள்ளன. குறிப்பாக, நீண்ட மாதங்களாக விற்பனையில் சோபிக்காமல் இருந்துவந்த ஹோண்டா கார்களான ஜாஸ், டபிள்யூ.ஆர்-வி மற்றும் 4ஆம் தலைமுறை சிட்டி கார்களின் விற்பனை ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நிறுத்தி கொள்ளப்பட உள்ளதாக ஏற்கனவே உற்பத்தி நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி மேற்கூறப்பட்ட ஹோண்டா கார்களின் விற்பனை இந்த ஏப்ரலில் இருந்து நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது ஜாஸ், டபிள்யூ.ஆர்-வி மற்றும் 4ஆம் தலைமுறை சிட்டி கார்களின் பெயர்கள் ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இதனால் ஹோண்டாவின் இந்திய வெப்சைட்டில் தற்சமயம் அமேஸ் மற்றும் 5ஆம் தலைமுறை சிட்டி கார்களின் பெயர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன.

தற்போது விற்பனை நிறுத்தப்பட்டு இருக்கும் 3 கார்களுடன் சேர்ந்து கடந்த 6 ஆண்டுகளில் மொத்தம் 9 கார்களை இந்திய சந்தையை விட்டு ஹோண்டா நிறுவனம் நீக்கியுள்ளது. இதில் இருந்து, கடந்த 6 வருடங்களாகவே சந்தையில் ஓர் நிலையான இடத்தை பிடிக்க ஹோண்டா நிறுவனம் போராடி கொண்டு வருவதை உணர முடிகிறது. சிட்டி, இந்த ஒரு செடான் மாடல் மட்டும் இல்லையென்றால், எப்போதோ சந்தையை விட்டு நடையை கட்ட வேண்டிய நிர்பந்தம் ஹோண்டா நிறுவனத்திற்கு ஏற்பட்டிருக்கும்.
சமீப காலத்தில் இந்தியாவில் ஹோண்டா நிறுவனத்தின் சரிவுக்கு, இந்த நிறுவனம் வாடிக்கையாளர்களின் ரசனைக்கேற்ப தயாரிப்புகளை வெளியிடவில்லை என்பதை முக்கிய காரணமாக சொல்ல வேண்டும். ஏனெனில் கடந்த சில வருடங்களில் கியா, எம்ஜி மோட்டார் போன்ற புதிய ஆட்டோமொபைல் நிறுவனங்கள் வெற்றியை பதிவு செய்து வருகின்ற நிலையில், பல வருடங்களாக இந்தியாவில் செயல்பாட்டில் இருக்கும் ஹோண்டா, வாடிக்கையாளர்கள் எந்த மாதிரியான கார்களை விரும்புகிறார்கள் என்பதை அறிந்து, அதற்கேற்ப தயாரிப்புகளை வெளியிடாதது ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது.

இதனை ஒருவழியாக தற்போது புரிந்துக்கொண்ட ஹோண்டா நிறுவனம் விரைவில் புதிய காம்பெக்ட் எஸ்யூவி கார் ஒன்றை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. ஹோண்டாவின் இந்த புதிய எஸ்யூவி கார், சந்தையில் பிரபலமான ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் கியா செல்டோஸ் கார்களுக்கு நேரெதிர் போட்டி மாடலாக விளங்க உள்ளது. அதிகம் விற்பனையாகும் கார்களுக்கு போட்டியாக அமைய உள்ளது என்று சொல்வதை காட்டிலும் காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் பிரிவில் ஹோண்டா சார்பில் ஒரு கார் வர உள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து
ஹோண்டாவின் ஜாஸ், டபிள்யூ.ஆர்-வி மற்றும் 4ஆம் தலைமுறை சிட்டி கார்களின் விற்பனை நிறுத்தப்படும் என்பது கடந்த பல மாதங்களாக நாம் எதிர்பார்த்த ஒன்றுதான். இந்த கார்களின் விற்பனையை இந்தியாவில் நிறுத்தி இருப்பது ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனத்தை மனதளவில் பாதிக்கும் என்றாலும், புதிய காம்பெக்ட் எஸ்யூவி காரின் அறிமுகத்தால் இந்த விஷயத்தை எண்ணி ஹோண்டா பெரியதாக கவலைப்பட்டு கொண்டு இருக்காது என நினைக்கிறோம்.


Click it and Unblock the Notifications








