போட்டி நிறுவனங்களுக்கு குளிர் காய்ச்சல் வர வைத்த ஹோண்டா! மைலேஜை வாரி வழங்கும் காரை களத்துல இறக்கறாங்க!
இந்தியாவில் ஹோண்டா (Honda) கார்களின் விற்பனை மிகவும் சுமாராகதான் இருந்து வருகிறது. தற்போதைய நிலையில் ஹோண்டா சிட்டி (Honda City) மற்றும் ஹோண்டா அமேஸ் (Honda Amaze) ஆகிய கார்கள் மட்டுமே இந்திய சந்தையில் ஓரளவு குறிப்பிடத்தக்க அளவில் விற்பனையாகி கொண்டுள்ளன.
எனவே விற்பனையை அதிகரிப்பதற்காக மிட்-சைஸ் எஸ்யூவி (Mid-size SUV) ரகத்தில் புதிய கார் ஒன்றை ஹோண்டா நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது. இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள இந்த புதிய காரின் டீசர் (Teaser) புகைப்படத்தை, ஹோண்டா நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. அனேகமாக வரும் கோடை காலத்தில், அதாவது ஏப்ரல் அல்லது மே மாதம், ஹோண்டா நிறுவனம் இந்த புதிய காரை விற்பனைக்கு அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்தனை கார்களுக்கு செக் வைக்க போறாங்களா!
இந்திய சந்தையில் ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta), கியா செல்டோஸ் (Kia Seltos), ஸ்கோடா குஷாக் (Skoda Kushaq) மற்றும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் (Volkswagen Taigun) ஆகிய கார்களுடன் ஹோண்டா நிறுவனத்தின் இந்த புதிய கார் போட்டியிடும். இதுதவிர இந்த செக்மெண்ட்டில் புதிதாக களமிறங்கியுள்ள மாருதி க்ராண்ட் விட்டாரா (Maruti Grand Vitara) மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder) ஆகிய கார்களுக்கும், ஹோண்டா நிறுவனத்தின் இந்த புதிய கார் விற்பனையில் கடுமையான சவாலை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிசைன் செமயா இருக்கே!
ஹோண்டா நிறுவனத்தின் கம்பீரமான புதிய கார் எப்படி இருக்கும் என்பது? தற்போது வெளியாகியுள்ள டீசர் புகைப்படத்தின் மூலம் நமக்கு ஓரளவிற்கு தெரிய வந்துள்ளது. இந்த புதிய காரில் எல்இடி பகல் நேர விளக்குகள் மற்றும் வட்ட வடிவ பனி விளக்குகள் ஆகியவை இடம்பெறலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் வீல் ஆர்ச்சுகள் மற்றும் வலுவான ஷோல்டர் லைன் ஆகியவற்றுடன், இந்த புதிய கார் முரட்டுத்தனமாக காட்சியளிக்கலாம்.

இவ்ளோ வசதிகள் குடுக்க போறாங்களா!
ஹோண்டா நிறுவனத்தின் புதிய காரில், 12.3 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 10.2 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் ஆகியவை இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதுதவிர இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் தற்போது வேகமாக பிரபலமடைந்து வரும் அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) தொழில்நுட்ப வசதியும், ஹோண்டா நிறுவனத்தின் புதிய காரில் வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹைப்ரிட் இன்ஜினா!
ஹோண்டா நிறுவனத்தின் புதிய காரில், 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்படலாம். இது ஆரம்ப நிலை வேரியண்ட்களில் இடம்பெறவுள்ள இன்ஜின் என கூறப்படுகிறது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்களில், ஸ்ட்ராங் ஹைப்ரிட் இன்ஜின் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த காரின் ஹைப்ரிட் இன்ஜின் சிறப்பான மைலேஜை வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்து கொண்டே செல்வதற்கு இதுவும் மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
அதே நேரத்தில் கியர் பாக்ஸ்களை பொறுத்தவரையில், 5 ஸ்பீடு மேனுவல், சிவிடி மற்றும் இ-டிரைவ் டிரான்ஸ்மிஷன் ஆகிய ஆப்ஷன்கள் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே புதிய மிட்-சைஸ் எஸ்யூவி கார் ஒன்றை வாங்குவதற்கு நீங்கள் திட்டமிட்டு கொண்டிருந்தால், ஹோண்டா நிறுவனத்தின் இந்த புதிய காரை பரிசீலனை செய்யலாம். சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்வதற்கு, ஹோண்டா நிறுவனத்திற்கு இந்த புதிய கார் உதவி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோதாவிற்கு தயாராகும் ஹூண்டாய், கியா
இந்தியாவின் மிட்-சைஸ் எஸ்யூவி செக்மெண்ட்டில் நாளுக்கு நாள் போட்டி அதிகரித்து கொண்டே செல்வதால், ஹூண்டாய் நிறுவனம் க்ரெட்டா காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலையும், கியா நிறுவனம் செல்டோஸ் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலையும் வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே வரும் மாதங்களில் இந்தியாவின் மிட்-சைஸ் எஸ்யூவி செக்மெண்ட்டில் போட்டி அனல் பறக்க போவதை நாம் உறுதியாக பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








