சோனியும், ஹோண்டாவும் இணைந்து உருவாக்கிய எலெக்ட்ரிக் கார் தயார்... இத யாருமே பிடிக்கலனு சொல்ல மாட்டாங்க!
பிரபல வாகன உற்பத்தி நிறுவனமான ஹோண்டா (Honda)வும், பிரபல மின்சாதன பொருட்கள் தயாரிக்கும் நிறுவனமான சோனி (Sony)யும் இணைந்து எலெக்ட்ரிக் கார் உற்பத்தியில் ஈடுபட்டு வருவதாக கடந்த சில மாதங்களாகவே தகவல்கள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன. இந்த தகவலை இரு நிறுவனங்களும் ஏற்கனவே உறுதிப்படுத்திய நிலையில், தற்போது கூட்டணியின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு இருக்கும் மின்சார கார் வெளியீடு செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
2023 சிஇஎஸ்-இல் தரிசனம்
தற்போது அமெரிக்காவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் புகழ்பெற்ற சிஇஎஸ் நிகழ்ச்சியிலேயே சோனி- ஹோண்டா கூட்டணியில் உருவாக்கப்பட்டிருக்கும் எலெக்ட்ரிக் கார் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அஃபீலா எனும் எலெக்ட்ரிக் காரையே நிறுவனங்கள் வெளியீடு செய்துள்ளன. இது ஓர் எலெக்ட்ரிக் செடான் ரக காராகும். சோனியின் விஷன் எஸ் எலெக்ட்ரிக் காரை போலவே இது இருப்பதை நம்மால் உணர முடிகின்றது. சோனி நிறுவனம் 2020 ஆம் ஆண்டில் நடைபெற்ற சிஇஎஸ் நிகழ்ச்சியின்போது கான்செப்ட் மாடலாக அறிமுகம் செய்த எலெக்ட்ரிக் காரே விஷன் எஸ் ஆகும்.

பிளே ஸ்டேஷன் விளையாடலாம்
இதை வெறும் கான்செப்ட் மாடலாக மட்டுமே வெளியீடு செய்திருப்பதாகவும் இப்போதைக்கு இதை உற்பத்தி செய்வதற்கான எண்ணம் இல்லை என்றும் நிறுவனம் தெரிவித்திருந்தது. இந்த நிலையிலேயே ஹோண்டா உடனான கூட்டணியில் உருவாக்கியிருக்கும் எலெக்ட்ரிக் காரை சோனி வெளியீடு செய்துள்ளது. இந்த காரில் யாரும் எதிர்பார்த்திராத தொழில்நுட்ப வசதிகளை வழங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தவகையில் பெரிய திரை, பிளே ஸ்டேஷன், போன்ற சிறப்பம்சங்கள் எல்லாம் இடம் பெற இருப்பதாக கூறப்படுகின்றது.
ஆகையால், காருக்குள் பயணிக்கும்போது என்டர்டெயின்மென்டுக்கு சற்றும் குறைச்சலே இருக்காது. சோனி, ஹோண்டா தயாரித்திருக்கும் இந்த காரில் ஆட்டோ பைலட் போன்ற சிறப்பு வசதிகளையும் வழங்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சில முக்கிய சேவைகளை நிறுவனம் சந்தா திட்டத்தின்கீழ் வழங்க இருப்பதாகக் கூறப்படுகின்றது. காரை விற்பதனால் கிடைக்கும் லாபம் மட்டுமின்றி, விற்பனைக்கு பின்னரும் தொடர்ச்சியாக லாபத்தை ஈட்டும் வகையில் பல்வேறு சிறப்பு சேவைகளை அஃபீலாவில் வழங்க சோனி திட்டமிட்டுள்ளது.

சொகுசு வசதிகள் ஏராளம்
வடிவமைப்பைப் பொருத்த வரை மிகவும் நேர்த்தியான காராக அஃபீலாவை சோனி- ஹோண்டா கூட்டணி உருவாக்கி இருக்கின்றது. தான் ஓர் சொகுசு வசதிகள் நிறைந்த கார் என்பதை தோற்றத்திலேயே அஃபீலா நமக்கு உறுதிப்படுத்துகின்றது. இதில் கை பிடிகளை நம்மால் காண முடியவில்லை. கார் உரிமையாளர் அருகில் தானாகவே திறக்கும் வசதி இதில் கொடுக்கப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் அடிப்படையிலேயே காரின் எந்த கதவிலும் கை பிடி வழங்கப்படவில்லை.
இதேபோல், பின் பக்கத்தை பார்ப்பதற்கு கண்ணாடிகளுக்கு பதிலாக கேமிராக்கள் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. இது காருக்குள் இருந்தபடியே காரை சுற்றிலும் நடை பெறும் சம்பவங்களை நேரடியாக திரை வாயிலாக காண்பிக்கும். எனவே சிறு சிறு அசைவுகளைகூட தவற விடாமல் நம்மால் காண முடியும். இந்த காரை உருவாக்கியதில் ஹோண்டா நிறுவனத்தின் பங்களிப்பை போலவே சோனியின் பங்களிப்பும் மிக அதிகமாகவே உள்ளது. தொழில்நுட்ப கருவிகளின் உருவாக்கத்திலும் சோனி பெரும் பங்களிப்பை வழங்கி இருக்கின்றது.

பெரிய பேட்டரி பேக் பொருத்தி இருக்காங்க
ஆகையால், அனைத்திலும் அஃபீலா மிக சிறப்பான எலெக்ட்ரிக் காராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக, தற்போது விற்பனையில் இருக்கும் எந்தவொரு எலெக்ட்ரிக் காரிலும் இல்லாத அம்சங்கள் பல இதில் இடம் பெற இருக்கின்றது. ஆகையால், ஆப்பிள் நிறுவனம் தயாரித்துக் கொண்டிருக்கும் எலெக்ட்ரிக் மிக சிறந்த போட்டியாளனாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அஃபீலா கான்செப்ட் எலெக்ட்ரிக் காரில் 100 kWh திறன் கொண்ட பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதை ஒரு முறை சார்ஜ் செய்யும்பட்சத்தில் 500 கிமீ ரேஞ்ஜை வழங்கும். இந்த கார் விற்பனைக்காக தயாரிக்கப்படும்போது இதைவிட அதிகம் ரேஞ்ஜ் தரும் வகையில் உருவாக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. உயர் ரக தொழில்நுட்பங்களான ஹை டெக் சென்சார்கள், கேமிராக்கள், லிடார் சென்சார்கள் மற்றும் ரேடார் மாடுல்கள் உள்ளிட்டவையும் அஃபீலாவில் இடம் பெற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. செமி -அட்டானமஸ் டிரைவிங்கை வழங்கும் விதமாக இந்த அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
எவ்வளவு விலையில் எதிர்பார்க்கலாம்
இதுமட்டுமின்றி, ரிமோட் வாயிலாகவே கார் இருக்கும் இடம் இடத்தைக் கண்டறிதல் மற்றும் நம்மை தேடி காரை வரவழைத்தல் போன்றவற்றை செய்து கொள்ள முடியும். அஃபீலா எலெக்ட்ரிக் ரூ. 82 லட்சத்திற்கும் அதிகமான விலையில் விற்பனைக்குக் கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. முதலில் இந்த எலெக்ட்ரிக் கார் அமெரிக்கா போன்ற நாடுகளிலேயே விற்பனைக்குக் கொண்டு வரப்பட உள்ளது. 2025 அல்லது 2026 ஆம் ஆண்டுகளுக்குள் இதன் விற்பனைத் தொடங்கிவிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் இந்திய வருகை சற்று சந்தேகமே என்பது கவனிக்கத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








