அரசாங்கத்துக்கு தான் செலவு குறையும்!! மத்திய அரசு வாங்கியுள்ள பஸ்ஸை பற்றி தான் டெல்லியில் ஒரே பேச்சு!!
இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் பேருந்து பயன்பாட்டிற்கு வந்துள்ளது. மேலும், விரைவில் இதேபோன்று 15 ஹைட்ரஜன் பேருந்துகளை வாங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. முதலாவதாக டெல்லியில் பயன்பாட்டிற்கு வரும் நாட்டின் முதல் ஹைட்ரஜன் பேருந்துகளை பற்றிய கூடுதல் விபரங்களை இனி விரிவாக இந்த செய்தியில் பார்க்கலாம்.
மத்திய பெட்ரோல் & இயற்கை எரிவாயு அமைச்சர் ஹர்தீப் சிங் புரி இன்று (செப்.25) டெல்லியில் கொடியசைத்து ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் பேருந்தை பயன்பாட்டிற்கு அறிமுகப்படுத்தி உள்ளார். பசுமையான போக்குவரத்துக்கு வழிவகுக்கக்கூடிய வகையில் ஹைட்ரஜனில் இயங்கக்கூடியதாக உருவாக்கப்பட்டுள்ள இதுதான் இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் பேருந்து என கூறப்படுகிறது.

மேலும், இதேபோன்றதான 15 ஹைட்ரஜன் பேருந்துகளை வாங்குவதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார். முதல் ஹைட்ரஜன் பேருந்தை கொடியசைத்து அறிமுகப்படுத்திய பின் பேசிய அமைச்சர், "ஹைட்ரஜன் எதிர்காலத்திற்கான எரிபொருளாக கருதப்படுகிறது. இந்தியாவின் கார்பன் அல்லாத இலக்குகளை அடைய உதவுவதில் மகத்தான ஆற்றலை கொண்டுள்ளது.
ஹைட்ரஜனுக்கான உலகளாவிய தேவை நான்கு முதல் ஏழு மடங்கு அதிகரித்து 2050-க்குள் 500- 800 மில்லியன் டன்னாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது" என்றார். இந்தியாவை பொறுத்தவரையில், தற்சமயம் ஒவ்வொரு வருடமும் 6 மில்லியன் டன் ஹைட்ரஜன் தேவைப்படுகிறது. இது 2050க்குள் 25- 28 மில்லியன் டன்களாக அதிகரித்துவிடும் எனவும் எதிர்பார்ப்பதாக அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.

மேலும், ஹைட்ரஜன் பேருந்து பயன்பாடு குறித்து பேசிய அமைச்சர், "பசுமை ஹைட்ரஜனில் இயங்கும் இந்த பேருந்து நாட்டின் நகர போக்குவரத்தின் முகத்தை மாற்றப் போகிறது. நான் திட்டத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறேன். மேலும், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்த திட்டத்தை வெற்றிக்கரமாக செயல்படுத்த உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்" என கூறினார்.
இயற்கை எரிவாயு குழாய்களில் ஹைட்ரஜனை கலக்குவது, எலக்ட்ரோ லைசரை சார்ந்த தொழிற்நுட்பங்களை உள்நாட்டிலேயே உருவாக்க முனைவது, பசுமை ஹைட்ரஜன் உற்பத்தியை மேம்படுத்துவது போன்ற திட்டங்கள் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். ஹைட்ரஜன் பேருந்துகளில் பொருத்தப்படும் பேட்டரிகள் ஹைட்ரஜன் மற்றும் காற்றை பயன்படுத்தி பேருந்தை இயக்க தேவையான மின்சாரத்தை உருவாக்குகின்றன.

இத்தகைய பேருந்தில் இருந்து வெளியேறும் ஒரே கழிவு நீர் மட்டும் தான் எனவும், எரிபொருள் என்ஜின்களுடன் ஒப்பிடும்போது, ஹைட்ரஜன் எரிபொருள் செல்கள் மிகவும் திறமையானவை என்றும் அமைச்சர் புரி விளக்கினார். அமைச்சர் கூறுவதை போல், ஹைட்ரஜனால் இயங்கும் வாகனங்களினால் ஏற்படும் மாசு ஆனது வழக்கமான பெட்ரோல்/ டீசல் என்ஜின் வாகனங்களை விட குறைவே.
அதேபோல், வழக்கமான பெட்ரோல்/ டீசல் என்ஜின் வாகனங்களை காட்டிலும் ஹைட்ரஜனால் இயங்கும் வாகனங்களில் அதிக மைலேஜை பெறலாமாம். குறிப்பாக, ஹைட்ரஜன் பேருந்துகளில் சுமார் 12km/kg வரையிலான மைலேஜை பெறலாம் என கூறப்படுகிறது. மேலும், பெட்ரோல்/ டீசலை போல ஹைட்ரஜனையும் சில வினாடிகளில் நிரப்பிவிட முடியும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹைட்ரஜனில் உள்ள குறைகள் என்னவென்றால், பெட்ரோல்/ டீசலை காட்டிலும் ஹைட்ரஜன் எளிதில் தீப்பற்றிக் கொள்ளக்கூடியது. அதேபோல், ஹைட்ரஜனுக்கு என்று தனியாக எந்தவொரு நிறமும், வாசனையும் கிடையாது. இதன் காரணமாக ஏற்படும் பிரச்சனைகளை முறையாக கையாண்டால், ஹைட்ரஜன் வாகனங்களை தாராளமாக பயன்படுத்தலாம்.


Click it and Unblock the Notifications









