நான்கு நண்பர்கள் சேர்ந்தா விபத்துகூட ஒரு மேட்டரே இல்லபோலையே! தப்பிச்சதே பெரிய விஷயம் இதுல இவ்ளோ கிண்டல் ஆகாது!
விலை உயர்ந்த கார் விபத்தில் சிக்கியதைப் பற்றி சற்றும் கவலைப்படாமல், அந்த காரில் வந்த இளைஞர்கள் சிலர் கார் விபத்தில் நொறுங்கிக் கிடப்பதைக் கண்டு கிண்டல் மற்றும் கேளி செய்து சிரித்துக் கொண்டிருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. இந்த நிகழ்வுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
நம்மில் பல பேர் நம்முடைய வண்டிக்கு சின்னதா ஸ்கிராட்ச் ஆனாலே நம்ம உசுரே போன மாதிரி ஃபீல் பண்ணுவோம். இப்படியானவர்களே நம்மில் அதிகம் இருக்கின்றனர். இந்த மாதிரியான சூழ்நிலையில், இங்கு ஒரு சில இளைஞர்கள் அவர்கள் வந்த கார் விபத்தில் சிக்கி உருக்குலைந்து போயிருப்பதைக் கண்டு கிண்டலும், கேளியும் செய்து சிரித்திருக்கின்றனர்.

இதுகுறித்த வீடியோவே தற்போது யுட்யூப் போன்ற சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகிக் கொண்டிருக்கின்றது. இளைஞர்கள் ஓட்டி வந்தது ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி ரக காராகும். இந்த காரில் அவர்கள் அதிக வேகத்தில் வந்ததே விபத்திற்கான மிக முக்கியமான காரணமாக இருக்கின்றது. மணிக்கு 130 கிமீ வேகத்தில் அவர்கள் அந்த காரை ஓட்டி வந்திருக்கின்றனர்.
இந்த வேகத்திலேயே பிற வாகனங்களை ஓவர்டேக் செய்து அவர்கள் வளைத்து வளைத்து ஓட்டி வந்திருக்கின்றனர். இந்த நிலையிலேயே நிலை தடுமாறி முதலில் அந்த கார் மேம்பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி இருக்கின்றது. வேகம் மிக அதிகம் என்பதால் இந்த மோதலோடு நிற்கவில்லை. தொடர்ந்து அந்த கார் சாலையோரத்தில் இருந்த மரங்கள் மீதும் மோதி இருக்கின்றது.

இதனால், காரின் முன் பக்கம் மற்றும் பக்கவாட்டு பகுதி என அனைத்தும் கடுமையாக சேதமுற்றிருக்கின்றது. இந்த நிலையிலும், காருக்குள் இருந்த அனைத்து பயணிகளும் பத்திரமாக வெளியேறி இருக்கின்றனர். குறிப்பாக, பின்னிருக்கையில் இருந்த இருவர் சிறு சிராய்ப்புகள்கூட இன்றி அதிர்ஷ்டவசமாக தப்பி இருக்கின்றனர்.
இந்த நிலையிலேயே இரு இளைஞர்கள் சாலையோரத்தில் சோகத்துடன் அமர்ந்திருக்க, மற்ற இரு இளைஞர்கள் அந்த காரை கிண்டல், கேளி செய்து வீடியோ எடுத்திருக்கின்றனர். இந்த வீடியோவே தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. மேலும், அந்த கார் ஏற்கனவே இதுபோன்ற விபத்தைச் சந்தித்ததாகவும், இது இரண்டாவது விபத்து என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இதன் வாயிலாக அந்த இளைஞர்கள் இதுபோன்று தொடர்ச்சியாக விதிமீறி அதி வேகத்தில் காரை இயக்கி வருகின்றனர் என்பது தெளிவாக தெரிகின்றது. மேலும், காருக்குள் ஓர் காவலரின் தொப்பி இருப்பதையும் நம்மால் காண முடிகின்றது. ஆகையால், இந்த காரை ஓட்டி வந்தவர் காவல்துறையைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் அல்லது அவர்களில் யாரேனும் ஒருவர் காவல்துறையைச் சேர்ந்தவர்களின் பின்புலத்தைக் கொண்டவராக இருக்க வேண்டும்.
இந்த நிலையே அவர்களை விதிமீறி அதிக வேகத்தில் இயங்கச் செய்திருக்கின்றது. எந்த நடவடிக்கையாக இருந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்கிற போக்கிலேயே அவர்கள் மணிக்கு 130 கிமீ வேகத்தில் கிரெட்டா காரை ஓட்டி இருக்கின்றனர். இதனால் தற்போது அவர்கள் விபத்திலும் சிக்கி இருக்கின்றனர். இந்த விபத்தை ஏற்படுத்தியவர்கள் லக்னோவின் கோமதி நகரைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தகுந்தது.
கிரெட்டா ஓர் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் பெற்ற காராகும். ஆசியன் என்சிஏபி கிராஷ் டெஸ்டிலேயே இந்த சூப்பரான ரேட்டிங்கை கிரெட்டா பெற்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த தரத்தையே இந்த விபத்து சம்பவத்தில் கிரெட்டை நிரூபித்துக் காட்டி இருக்கின்றது. மிக மோசமான விபத்தைச் சந்தித்த பின்னரும் இளைஞர்கள் வெளியில் வந்து கிண்டல், கேளி செய்து நக்கலடிக்கும் அளவிற்கு சின்ன காயம்கூட ஏற்படாத வண்ணம் அந்த கார் அவர்களை காப்பாற்றி இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பெஸ்ட் செல்லிங் எஸ்யூவி ரக கார்களில் கிரெட்டாவும் ஒன்றாகும். இந்த ரக கார்களுக்கு உலக அளவில் வரவேற்பு அதிகம் என்றாலும், அவை வடிவமைப்பில் நிலைத் தன்மை அற்றவையாக இருக்கின்றன. அதாவது, அதீத வேகத்தைத் தாக்கு பிடிக்கும் திறன் எஸ்யூவிக்களுக்கு சற்று குறைவே ஆகும். இந்த நிலையே அவற்றை எளிதில் விபத்தைச் சந்திக்க வைத்துவிடுகின்றன.


Click it and Unblock the Notifications








