முன்னாடி பாத்ததே இல்லயே! TN நம்பர் பிளேட்டுடன் சுற்றிய மர்ம கார்! இப்ப ஊரே இதை பத்திதான் பேசிகிட்டு இருக்கு!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக கார்களில் ஒன்று ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta). இது மிட்-சைஸ் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் க்ரெட்டா கார்களை விற்பனை செய்து வருகிறது.
இந்த சூழலில் விற்பனை எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கும் வகையில், க்ரெட்டா காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை விற்பனைக்கு அறிமுகம் செய்ய ஹூண்டாய் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஹூண்டாய் க்ரெட்டா இவி (Hyundai Creta EV) என்ற பெயரில் இந்த கார் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

2024ம் ஆண்டின் இறுதியில் ஹூண்டாய் க்ரெட்டா இவி எலெக்ட்ரிக் காரின் தயாரிப்பு பணிகள் தொடங்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதை தொடர்ந்து வரும் 2025ம் ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவில் நடைபெறவுள்ள ஆட்டோ எக்ஸ்போவில், ஹூண்டாய் க்ரெட்டா இவி எலெக்ட்ரிக் காரின் தயாரிப்பு நிலை வெர்ஷன் காட்சிக்கு வைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
இதற்கு அடுத்த ஒரு சில மாதங்களில் ஹூண்டாய் க்ரெட்டா இவி எலெக்ட்ரிக் காரின் விலை (Price) அறிவிக்கப்பட்டு, முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம். தற்போது க்ரெட்டா இவி எலெக்ட்ரிக் காரை உருவாக்கும் பணிகளில் ஹூண்டாய் நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டு கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக ஹூண்டாய் க்ரெட்டா இவி எலெக்ட்ரிக் கார் சாலை சோதனைகளிலும் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது.

அப்படி கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு சாலை சோதனையில் ஈடுபடுத்தப்பட்டபோது, ஹூண்டாய் க்ரெட்டா இவி எலெக்ட்ரிக் கார் கேமரா கண்களில் சிக்கியுள்ளது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரலாக பரவி வருகின்றன. சென்னை-பெங்களூர் நெடுஞ்சாலையில் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த புகைப்படத்தில் TN பதிவு எண்ணை நம்மால் காண முடிகிறது. ஹூண்டாய் நிறுவனத்தின் தொழிற்சாலை சென்னைக்கு (Chennai) அருகே செயல்பட்டு வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். சாலை சோதனையில் ஈடுபடுத்தப்பட்டு வரும் மாடலில், எக்ஸாஸ்ட் மற்றும் ரேடியேட்டர் ஆகியவை இல்லை.
இங்கே குறிப்பிட வேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால், ஹூண்டாய் க்ரெட்டா இவி எலெக்ட்ரிக் காரில் உருமறைப்பு செய்யப்படவில்லை. பொதுவாக புதிய கார்கள் அறிமுகத்திற்கு முன் சாலை சோதனை செய்யப்படும்போது உருவம் மறைக்கப்பட்டு விடும். ஆனால் ஹூண்டாய் நிறுவனம் க்ரெட்டா இவி எலெக்ட்ரிக் காரை, உருமறைப்பு செய்யாமல் சாலை சோதனையில் ஈடுபடுத்தி வருகிறது.
ஆனால் இது சாலை சோதனை மட்டுமே என்பதால், விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் சமயத்தில் ஹூண்டாய் க்ரெட்டா இவி எலெக்ட்ரிக் காரின் டிசைன் மாற்றம் செய்யப்படலாம். ஹூண்டாய் க்ரெட்டா இவி எலெக்ட்ரிக் கார் சாலை சோதனைக்கு உட்படுத்தப்பட்ட புகைப்படங்களை டீம்-பிஎச்பி தளம் வெளியிட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 400 கிலோ மீட்டர்களுக்கும் மேல் பயணிக்க கூடிய வகையிலான பேட்டரி, ஹூண்டாய் க்ரெட்டா இவி எலெக்ட்ரிக் காரில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட பின், எம்ஜி இஸட்எஸ் இவி (MG ZS EV) மற்றும் டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் (Tata Nexon EV Max) போன்ற எலெக்ட்ரிக் கார்களுடன், இது போட்டியிடும்.
ஹூண்டாய் க்ரெட்டா இவி எலெக்ட்ரிக் காரை, உங்களை போலவே நாங்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டுள்ளோம். ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் ஏற்கனவே ஹூண்டாய் ஐயோனிக் 5 (Hyundai Ioniq 5) மற்றும் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் (Hyundai Kona Electric) ஆகிய எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வருகிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.


Click it and Unblock the Notifications








