இந்த விஷயத்தில் ஹூண்டாய் உச்சத்தில் இருக்கு!! கொரியன் ஸ்டைல் கார்களுக்கு நம் நாட்டில் செம்ம டிமாண்ட்!
இந்தியாவில் எஸ்யூவி கார்களுக்கு மார்க்கெட் சமீப ஆண்டுகளில் சிறப்பாகவே வளர்ச்சிக் கண்டு உள்ளது. நம் இந்திய மக்கள் பொதுவாகவே அளவில் சிறிய கார்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பர். அதாவது, அளவில் சிறிய கார்களை வாங்குவோரே நம் நாட்டில் அதிக பேர் உள்ளனர்.
இதன் காரணமாகவே, எஸ்யூவி கார்கள் பல்வேறு உடலமைப்புகளில் விற்பனை செய்யப்பட்டாலும் அளவில் சற்று சிறிய காம்பெக்ட் எஸ்யூவி கார்களே அதிகம் விற்பனையாகுகின்றன. இந்திய கார்கள் சந்தையில் இந்த காம்பெக்ட் எஸ்யூவி கார் பிரிவில் தற்சமயம் மொத்தம் 8 விதமான பிராண்ட்களில் இருந்து மாடல்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்த 8 காம்பெக்ட் எஸ்யூவி கார்களுள் கடந்த சில வருடங்களாக அதிக எண்ணிக்கையில் விற்பனையாகுவது ஹூண்டாய் மோட்டார்ஸின் கிரெட்டா ஆகும். கடந்த 2023 அக்டோபர் மாதத்திலும் மற்ற காம்பெக்ட் எஸ்யூவி கார்களை காட்டிலும் கிரெட்டாவே அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. கடந்த அக்டோபரில் விற்கப்பட்ட ஹூண்டாய் கிரெட்டா கார்களின் எண்ணிக்கை 13,077 ஆகும்.
2022 அக்டோபரில் 11,880 கிரெட்டா கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் கடந்த மாதத்தில் 1,197 கிரெட்டா கார்கள் கூடுதலாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. காம்பெக்ட் எஸ்யூவி காரை வாங்குபவர்களில் 4இல் ஒருவரது தேர்வு நிச்சயமாக கிரெட்டாவாக உள்ளது. கிரெட்டாவுக்கு அடுத்து 2வது இடத்தில் கியா செல்டோஸ் உள்ளது.

கிரெட்டாவை போல், கொரியன் ஸ்டைல் எஸ்யூவி காரான செல்டோஸ் கடந்த அக்டோபர் மாதத்தில் மொத்தம் 12,362 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது. ஆனால், 2022ஆம் ஆண்டின் அக்டோபரில் செல்டோஸ் கார்களின் விற்பனை எண்ணிக்கை 10 ஆயிரத்தை கூட தொடவில்லை, 9,777 ஆகவே பதிவாகி இருந்தது. இந்த வகையில் பார்க்கும்போது, கடந்த மாதத்தில் 2022 செப்டம்பரை காட்டிலும் 2,500க்கும் அதிகமான செல்டோஸ் கார்கள் கூடுதலாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.
கிரெட்டாவை போல், காம்பெக்ட் எஸ்யூவி காரை வாங்க விரும்புபவர்களில் 4இல் ஒருவர் தேர்வு செய்வது கியா செல்டோஸாகவே உள்ளது. இந்த வரிசையில் 3வது இடத்தில் மாருதி கிராண்ட் விட்டாரா உள்ளது. கடந்த மாதத்தில் மொத்தம் 10,834 கிராண்ட் விட்டாரா கார்களை மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்துள்ளது. மாடர்ன் மாருதி காரான கிராண்ட் விட்டாரா கடந்த 2023 ஏப்ரல் மாதத்தில் தான் அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இவை மூன்றும் தான் தற்போதைக்கு அதிக எண்ணிக்கையில் விற்பனையாகக் கூடியவை பிரதான காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் ஆகும். ஏனெனில், இவற்றிற்கு கீழ் உள்ளவை கடந்த மாதத்தில் 5 ஆயிரம் யூனிட்கள் கூட விற்பனையாகாதவை. 4வது இடத்தில், ஹோண்டா இந்த வருடத்தில் அறிமுகப்படுத்திய எலெவேட் கார் உள்ளது. கடந்த அக்டோபர் மாதத்தில் 4,957 எலெவேட் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
5வது இடத்தில் டொயோட்டா ஹைரைடர் 3,987 யூனிட்களின் விற்பனை உடன் உள்ளது. 2022 அக்டோபரிலும் ஹைரைடர் கார்களின் விற்பனை கிட்டத்தட்ட இந்த அளவிற்கு தான் இருந்தது. 6வது மற்றும் 7வது இடங்களில் ஸ்கோடா குஷாக் மற்றும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் கார்கள் உள்ளன. இவற்றின் கடந்த மாத விற்பனை எண்ணிக்கைகள் முறையே 2,447 மற்றும் 2,219 ஆகும். கடைசி இடத்தில் எம்ஜி அஸ்டர் (890) உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் தான் இருப்பதிலேயே அளவில் சிறியவை கிடையாது. ஏனெனில், இவற்றை காட்டிலும் சிறியவையான சப்-காம்பெக்ட் எஸ்யூவி கார்களும் இந்திய மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகின்றன. 4 மீட்டருக்கு குறைவான நீளத்தை கொண்ட சப்-காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் பிரிவில்தான் டாடா நெக்ஸான், ஹூண்டாய் வென்யூ போன்றவை உள்ளன.


Click it and Unblock the Notifications









