நாடே காத்து கிடந்த விலை குறைவான காரின் டெலிவரி தொடங்கியது! இனி எல்லா இடத்துலயும் இதுதான் ஓடப்போகுது!
இந்திய வாடிக்கையாளர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter) கார், சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இது 5 இருக்கைகளை கொண்ட மைக்ரோ எஸ்யூவி ரக கார் ஆகும். இதன் ஆரம்ப விலை (Price) வெறும் 6 லட்ச ரூபாய் மட்டுமே. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும்.
இந்த சூழலில் ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் அதிகாரப்பூர்வ டெலிவரி (Delivery) பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. இது வாடிக்கையாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள டாடா பன்ச் (Tata Punch) காருக்கு நேரடி போட்டியாகவே, ஹூண்டாய் எக்ஸ்டர் கார் களமிறக்கப்பட்டுள்ளது.

அதற்கு ஏற்ற வகையில் பல்வேறு அதிநவீன வசதிகளை (Features) ஹூண்டாய் எக்ஸ்டர் பெற்றுள்ளது. குரல் மூலம் கட்டுப்படுத்தக்கூடிய எலெக்ட்ரிக் சன்ரூஃப், ட்யூயல் கேமராக்களுடன் டேஷ்கேம், வயர்லெஸ் செல்போன் சார்ஜர், பேடில் ஷிஃப்டர்கள், டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் ஆகியவை இதில் குறிப்பிடத்தக்கவை ஆகும்.
பாதுகாப்பை (Safety) பொறுத்தவரையில், அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள், 3 பாயிண்ட் சீட்பெல்ட்கள், ஹில் அஸிஸ்ட் கண்ட்ரோல் மற்றும் வெய்கில் ஸ்டெபிளிட்டி மேனேஜ்மெண்ட் போன்ற பல்வேறு வசதிகள் ஹூண்டாய் எக்ஸ்டர் காரில் வழங்கப்பட்டுள்ளன. இதன் நேரடி போட்டி மாடலான டாடா பன்ச், குளோபல் என்சிஏபி மோதல் சோதனையில் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் வாங்கிய கார் ஆகும்.

இதன் காரணமாக ஹூண்டாய் நிறுவனமும் எக்ஸ்டர் காரில் ஏராளமான பாதுகாப்பு வசதிகளை வாரி வழங்கியுள்ளது. இன்னும் சொல்லப்போனால், ஹூண்டாய் எக்ஸ்டர் காரும் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. எனவே டாடா பன்ச் காருக்கு கடுமையான சவால் காத்து கொண்டுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.
செயல்திறனை பொறுத்தவரையில் ஹூண்டாய் எக்ஸ்டர் காரில் மொத்தம் 2 இன்ஜின் (Engine) ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில், 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் (Petrol) இன்ஜின் ஒன்றாகும். மற்றொன்று 1.2 லிட்டர் சிஎன்ஜி (CNG) இன்ஜின். இதில் பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 82 பிஹெச்பி பவர் மற்றும் 114 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.
இந்த இன்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. மறுபக்கம் சிஎன்ஜி இன்ஜின் அதிகபட்சமாக 68 பிஹெச்பி பவர் மற்றும் 95 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது.
ஹூண்டாய் எக்ஸ்டர் கார் 6 லட்ச ரூபாய் என்ற ஆரம்ப விலையில்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஹூண்டாய் நிறுவனம் அதை பொய் ஆக்காமல் 6 லட்ச ரூபாய் என்ற ஆரம்ப விலையிலேயே எக்ஸ்டர் காரை களமிறக்கியுள்ளது. இந்த விலைக்கு இது மிகவும் சிறப்பான காராகவே கருதப்படுகிறது. எனவே ஹூண்டாய் எக்ஸ்டர் விற்பனையில் சாதிக்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மைக்ரோ எஸ்யூவி ரக கார்களுக்கு தற்போது நல்ல வரவேற்பு கிடைக்க தொடங்கியுள்ளது. டாடா பன்ச் இதற்கு ஒரு உதாரணம். எனவேதான் ஹூண்டாய் நிறுவனமும் தற்போது இந்த செக்மெண்ட்டில் எக்ஸ்டர் காரை களமிறக்கியுள்ளது. ஹூண்டாய் எக்ஸ்டர் குறைவான விலையில் வந்துள்ளதால், முன்பதிவுகள் குவிய தொடங்கியுள்ளன.
நமக்கு கடைசியாக கிடைத்த தகவலின்படி, ஹூண்டாய் எக்ஸ்டர் கார் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகளை வாரி குவித்து விட்டது. தற்போது டெலிவரி பணிகள் தொடங்கப்பட்டுள்ள சூழலில், இனி இந்திய சாலைகளில் ஹூண்டாய் எக்ஸ்டர் காரை நாம் அதிகளவில் காண முடியும் என்பது உறுதி.


Click it and Unblock the Notifications








