Hyundai EXTER.. புது காருக்கு இப்படி ஒரு பெயரா! டாடா பஞ்ச்-க்கு ஆப்பு வைக்க புதிய வடிவில் வரும் ஹூண்டாய் கார்!
ஹூண்டாய் நிறுவனத்தின்கீழ் புதிய தயாரிப்பு விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வர இருப்பதாக சமீப சில நாட்களாக தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன. இந்த நிலையில், வதந்தியாக வெளியாகிக் கொண்டிருந்த தகவலை உறுதிப்படுத்தும் விதமாக ஹூண்டாய் நிறுவனம் ஓர் புதிய தகவலை வெளியிட்டு இருக்கின்றது.
விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் புதுமுக காருக்கு எக்ஸ்டெர் எனும் பெயரை சூட்டி இருப்பதாக அது தெரிவித்து உள்ளது. இந்த தகவலின் வாயிலாக ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் எக்ஸ்டெர் எனும் புதுமுக கார் மாடலை விற்பனைக்குக் கொண்டு வர இருப்பது உறுதியாகி உள்ளது.

ஹூண்டாய் எக்ஸ்டெர் ஓர் எஸ்யூவி ரக காராகும். நகர்புற வாழ்க்கைக்கு ஏற்ற வாகனமாக இதனை அந்நிறுவனம் உருவாக்கி இருப்பதாக நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது. ஆகையால், இந்த எக்ஸ்டெர் ஓர் மைக்ரோ எஸ்யூவி ரக காராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த ரக காரையே ஹூண்டாய் இந்திய சந்தையில் விற்பனைக்குக் களமிறக்க இருப்பதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
இது நிறுவனத்தின் இந்தியாவிற்கான எட்டாவது எஸ்யூவி ரக காராகும். ஏற்கனவே ஹூண்டாய் நிறுவனத்தின்கீழ் வென்யூ, வென்யூ என் லைன், க்ரெட்டா, அல்கஸார், கோனா எலெக்ட்ரிக் (இ-கார்), டக்சன் மற்றும் ஐயோனிக் 5 (இ-கார்) ஆகிய எஸ்யூவி ரக கார்கள் விற்பனையில் இருக்கின்றன.

இவற்றுடனேயே இந்த புதிய தயாரிப்பான எக்ஸ்டெரும் இணைய இருக்கின்றது. புதிய ஹூண்டாய் எக்ஸ்டெர், இந்தியாவின் மலிவு விலை எஸ்யூவி ரக காரான டாடா பஞ்ச் காருக்கு நேரடி போட்டியாளனாக விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருக்கின்றது. விலை மற்றும் சிறப்பு வசதி ஆகிய அனைத்திலும் இந்த கார் டாடா பஞ்ச்-க்கு போட்டியாக இருக்கும்.
ஹூண்டாய் எக்ஸ்டெர் காரில் ஐந்து பேர் வரை அமர்ந்து பயணிக்க முடியும் என கூறப்படுகின்றது. இந்த அளவு இட வசதிக் கொண்ட காராகவே அது விற்பனைக்கு வர இருக்கின்றது. உலக சந்தையில் கேஸ்பர் எனும் பெயரில் ஹூண்டாய் ஓர் மைக்ரோ எஸ்யூவி ரக காரை விற்பனைச் செய்து வருகின்றது.

இந்த காரையே இந்தியாவில் எக்ஸ்டெர் எனும் பெயரில் ஹூண்டாய் விற்பனைக்குக் கொண்டு வரும் என இந்திய வாகன உலகம் எதிர்பார்க்கின்றது. ஆனால், இதுகுறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலையும் இப்போது வரை ஹூண்டாய் வெளியிடவில்லை. புதிய காரின் பெயர் மட்டுமே வெளியீடு செய்யப்பட்டு இருக்கின்றது.
ஒருவேளை கேஸ்பர் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டால், அது, இந்தியாவிற்கு ஏற்ற மாற்றங்களுடனேயே விற்பனைக்குக் கொண்டு வரப்படும். ஸ்டைல் மற்றும் சிறப்பம்சங்கள் என பலவற்றில் மிக பெரிய மாற்றங்களை அதில் எதிர்பார்க்கலாம். எஞ்ஜினைப் பொருத்த வரை இப்போது விற்பனையில் இருக்கும் கிராண்ட் ஐ10 நியாஸ் மற்றும் ஐ20 கார் மாடல்களில் பயன்படுத்தப்பட்டு வரும் அதே மோட்டாரே எக்ஸ்டெர் மாடலிலும் எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும், சிஎன்ஜி தேர்வையும் இந்த காரில் ஹூண்டாய் விற்பனைக்கு வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தியர்கள் மத்தியில் சிஎன்ஜி கார்களுக்கு மிக அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. ஆகையால், இந்தியர்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்யும் விதமாக இந்த ஆப்ஷன் ஹூண்டாய் எக்ஸ்டென்டரில் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க கருத்து
இந்தியாவில் எஸ்யூவி ரக கார்களுக்கு நல்ல டிமாண்ட் நிலவி வருகின்றது. அதிக இட வசதியைக் கொண்டிருக்கும் என்பதாலும், எந்த மாதிரியான சாலையையும் எஸ்யூவி கார்கள் அசால்ட் செய்துவிடும் என்பதாலும் அவற்றிற்கு கிடைத்து வரும் வரவேற்பு தொடர்ச்சியாக அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இந்த நிலையிலேயே வெற்றி மைக்ரோ எஸ்யூவி கார் பிரிவில் வெற்றி நடைப் போட்டுக் கொண்டிருக்கும் பஞ்சுக்கு போட்டியாக எக்ஸ்டெரை களமிறக்கும் முயற்சியில் ஹூண்டாய் ஈடுபட்டு வருகின்றது.


Click it and Unblock the Notifications









